மெர்சல் பிரச்சினையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! - 'ஜோசப்' விஜய்

மெர்சல் படப் பிரச்சினையில் ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். மெர்சல் படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே பல சர்ச்சைகளில் சிக்கியது. படம் வெளியான பிறகு அதில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்புக்கு எதிரான காட்சிகளை நீக்குமாறு பாஜகவினர் கோரினர்.

விஜய்யின் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டார் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா. ஆனால் மக்களும், ரசிகர்களும் மெர்சலுக்கு அமோக ஆதரவை வழங்கி படத்தை வெற்றி பெறச் செய்துவிட்டனர்.

தனக்கு ஆதரவு தந்த மக்களுக்கும் திரையுலகினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் விஜய் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது: மெர்சல் படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மெர்சல் திரைப்படத்துக்கு சில எதிர்ப்புகள் வந்தன.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் திரையுலக நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர், ரசிகைகள்), பொது மக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படக் குழுவினருக்கும் மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். -நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய்.

தன் முழுப் பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே இந்த அறிக்கையைத் தந்துள்ளார். அந்த லெட்டர் பேடில் ஜீசஸ் சேவ்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.