அமலாபால் வரி ஏய்ப்பு: 7 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

பிரபல, தமிழ், மலையாள திரைப்பட நடிகை, அமலா பால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை, புதுச்சேரியில் பதிவு செய்து, 20 லட்ச ரூபாய், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு, ஏழு ஆண்டு வரை, சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.மைனா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும், நடித்துள்ளவர், அமலாபால், 25. கேரளாவைச் சேர்ந்த இவர், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, மெர்சிடஸ் - எஸ் வகை காரை, சமீபத்தில் வாங்கியுள்ளார். 

அந்த காரை, கேரளாவில் பதிவு செய்யாமல், புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார்.இதனால், கேரள மாநில அரசுக்கு, வரி மூலம் கிடைக்க வேண்டிய, 20 லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.அமலாபால் வாங்கிய கார், புதுச்சேரியைச் சேர்ந்த, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபற்றி, அந்த மாணவருக்கே தெரியாது என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

விதிப்படி, புதுச்சேரியை சொந்த மாநிலமாக உடைய ஒருவர் மட்டுமே, வாகனங்களை, புதுச்சேரியில் பதிவு செய்ய முடியும்.வாகனத்தின் உரிமை, அதன் உண்மையான உரிமையாளர் பெயரில் மாற்றப்படாத பட்சத்தில், அந்த வாகனத்தை, புதுச்சேரி சாலைகளில் ஓட்டக்கூடாது என்றும், அப்படி நிகழ்ந்தால், வாகனத்தின் உரிமையாளரை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, எர்ணாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கிஉள்ளனர். போலி முகவரியில் வாகனத்தை பதிவு செய்ததால், ஏழு ஆண்டு வரை, சிறைத் தண்டனை 

கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.