தென்னிந்திய நடிகைகளை விமர்சித்த இந்தி நடிகை ஹினாகானுக்கு குஷ்பு, ஹன்சிகா கண்டனம்

தென்னிந்திய நடிகைகளை விமர்சித்த இந்தி நடிகை ஹினாகானுக்கு நடிகைகள் குஷ்பு, ஹன்சிகா, காஜல் அகர்வால் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் கதாநாயகிகள் எடை கூடி பருமனாக இருந்தால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று இந்தி நடிகை ஹினாகான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஹினாகான் போட்டியாளராக இருக்கிறார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தென்னிந்திய நடிகைகள் பருமனாக இருந்தால்தான் பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே டைரக்டர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் கதாநாயகிகளிடம் எடையை அதிகரிக்கும்படி வற்புறுத்துகிறார்கள். எனக்கு தென்னிந்திய இயக்குனர்களிடம் இருந்து இரண்டு பட வாய்ப்புகள் வந்தன.

அவற்றில் நடிப்பதற்கு எனது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். உடல் எடையை கூட்ட நான் விரும்பவில்லை. இதனால் அந்த பட வாய்ப்புகள் வேண்டாம் என்று நிராகரித்து விட்டேன் என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி தென்னிந்திய நடிகைகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரை கண்டித்து வருகிறார்கள்.

ஹினாகானுக்கு பதிலடி கொடுத்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், ‘‘கண்ணியமாக எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தென்னிந்திய சினிமாவில் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த காரணத்தினால்தான் தென்னகத்தில் இருப்பவர்கள் அவர்களை தாண்டி முன்னேறி வருகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

நடிகை ஹன்சிகா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தென்னிந்திய சினிமாவை ஹினாகான் அவதூறாக பேசி இருக்கிறார். அவரது கருத்து முட்டாள்தனமானது. இந்தி நடிகைகள் பலர் தென்னிந்திய படங்களில் நடித்துக்கொண்டு இருப்பது அவருக்கு தெரியாதா?. தென்னிந்திய நடிகைகளை தரம் தாழ்த்துவது ஹினாகானுக்குதான் அவமானம்’’ என்று கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் கூறும்போது, ‘‘ஹினாகான் கருத்து சரியல்ல. அவர் முதலில் தென்னிந்திய சினிமாவை பார்த்து விட்டு பேசட்டும்’’ என்று கூறியுள்ளார்.