எனக்கு அரசியல் சரிபட்டு வராது : ரசிகர்களிடம் அஜித் ஓபன் டாக்

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் அரசியலுக்கு வர ஆர்வப்பட்டு, அதற்கான காரியங்களில் இறங்கி உள்ளனர். இவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று, அவர்களைக் காட்டிலும், அவர்களது ரசிகர்களே அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படி இந்த நால்வருக்கும் இருக்கும் ரசிகர்கள் ஆசைப்படுவது போல, நடிகர் அஜித் ரசிகர்களும், அவரும் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதை, அஜித்திடமே சமீபத்தில் அவர்கள் வெளிப்படுத்த, அரசியலெல்லாம் என்னுடைய இயல்புக்கு ஒத்து வராது; அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது; இந்த விஷயத்தை யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அஜித் ரசிகர்கள் சிலர் கூறியதாவது:நடிகர் விஜய்யைக் காட்டிலும் கூடுதலாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். அவருக்கு இன்றைக்கும் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்காக, சினிமாவில் தாறுமாறாக நடித்து பணம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவர் நினைப்பதில்லை.

சினிமா தயாரிப்பாளர்களிடம் ஒரு படத்தில் கமிட் ஆகும்போதே கறாராகப் பேசி, மொத்தப் பணத்தையும் பெற்றுக் கொண்டு நடிக்கும் நடிகர் அஜித் தான். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், இழுவை எதுவும் இல்லாமல் நடித்துக் கொடுத்து விடுவார்.

படபிடிப்பு முடியும் வரையில் வேறு எந்தப் பணிக்கும் செல்ல மாட்டார். அதே போல, சினிமாதான் தொழில் என்பதால், நடிப்பை மட்டுமே தொழிலாக இன்று வரை செய்து வருகிறார். படத் தயாரிப்பு, விநியோக உரிமை என்று சினிமாவின் உப வருமானம் பார்க்கும் எந்த காரியத்துக்கும் செல்ல மாட்டார்.

தான் உண்டு; தனது குடும்பம் உண்டு என்று வாழ்க்கை நடத்தும் அஜித், இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும் என்றால், அனாதை ஆசிரமங்களுக்கு நேரடியாக சென்று உதவிடுவார். அதை கூட ஒரு நாளும் தன்னுடைய விளம்பரத்துக்காக பயன்படுத்த மாட்டார். விழாக்கள், நிகழ்ச்சிகள் என்று, சினிமாவைக் கடந்து எங்கும் சென்று தலைகாட்டி மகிழ மாட்டார்.

மொத்தத்தில், தனது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு வாழ்பவர்.கார் மற்றும் பைக் என்றால், கொள்ளைப் பிரியம் அவருக்கு. ரேசில் செல்வதும் அவரது பொழுது போக்கு. காலையில் சென்னையில் பைக்கை எடுத்தால், அடுத்த சில மணி நேரங்களில் ஊட்டிக்கு சென்று விடுவார்.

அங்கு பல நாட்கள் தங்கி விட்டு, பின், திடுமென அதே பைக்கில் கிளம்பி சென்னை வந்து விடுவார். இல்லையென்றால், அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்று அங்கு தங்கி விடுவார். இப்படி, இலக்கு இல்லாமல் பயணம் செய்து, தன்னுடைய பொழுதை ஜாலியாக, எந்த திட்டமிடுதலும் இல்லாமல் கழிப்பவர்.

இப்படியெல்லாம் மனம் போன போக்கில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கும் நடிகர் அஜித்துக்கு, அரசியல் அவ்வளவாக பிடிக்காது. அதை ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையாக தெரிவித்து விட்டார். இருந்தபோதும், ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் காட்டும் அரசியல் ஆர்வத்தைத் தொடர்ந்து, அஜித்தையும் அரசியலில் இறக்கிவிட வேண்டும் என்று ஆர்வப்பட்டு, அவரிடம் கேட்டுள்ளனர்.

அரசியல் எனக்கு சரிபட்டு வராது; யாருக்கு போட்டியாகவும் எதையும் செய்யும் இயல்பு எனக்குக் கிடையாது என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டார். இதனால், அஜித்தை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி, துவக்கத்திலேயே தோல்வியில் முடிந்து விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.