சாட்சிகள் 'பல்டி': தப்புகிறார் திலீப்

நடிகர் திலீப்புக்கு எதிரான வழக்கில், சாட்சிகள், 'பல்டி' அடிப்பதால், அவர் மீதான போலீசின் பிடி தளருகிறது.

கேரளாவில், பிரபல நடிகை, கடத்தப்பட்டு, பாலியல்தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வந்துள்ளார்.இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில், சாட்சிகள், 'பல்டி' அடிப்பதால் போலீசார் திணறி வருகின்றனர்.

நடிகையை காரில் கடத்திய பின் தலைமறைவாக இருந்த, முக்கிய குற்றவாளியான, பல்சர் சுனில், நடிகை காவ்யா மாதவன் நடத்தும் ஜவுளிக்கடைக்கு வந்ததாக, இங்குள்ள ஊழியர், போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.ஆனால், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தபோது, பல்சர் சுனில் வந்ததாக தனக்கு நினைவு இல்லை என்று மாற்றி கூறிவிட்டார்.

இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, அந்த சாட்சியின் பேரனின் அலைபேசிக்கு, காவ்யா மாதவனின் டிரைவர், 41 முறை அழைத்தது தெரியவந்தது.வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட இந்த ஊழியர் பல்டி அடித்ததால், திலீப்பின் மீதான, போலீஸ் பிடி தளருவதாக கருதப்படுகிறது.இந்த வழக்கில், பல்டி அடிக்கும் சாட்சிகள் மீது வழக்குப்பதிவு செய்வது பற்றி, போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.