ஆஸ்பத்திரியில் அனுமதி நடிகை குஷ்புவுக்கு ஆபரேஷன்

நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றில் இன்று ‘ஆபரேஷன்’ நடக்கிறது.

நடிகை குஷ்பு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசி விட்டு வந்தார்.

குஷ்புவுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்தது. டாக்டர்கள் பரிசோதித்து அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். இதற்காக அவர் சிகிச்சை எடுத்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஆனாலும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் ஆபரேஷன் செய்து கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

ஆபரேஷன்

இது சாதாரண ஆபரேஷன் தான் என்றும் கட்டியை அகற்றிய பிறகு வயிற்று வலி பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்தனர். குஷ்புவும் வயிற்றில் இருக்கும் கட்டியை அகற்ற விரைவில் ஆபரேஷன் செய்து கொள்ளப்போகிறேன் என்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குஷ்பு நேற்று காலை அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் அவரது உடலை பரிசோதனை செய்து ஆபரேஷன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இன்று காலை குஷ்புவுக்கு மருத்துவ குழுவினர் வயிற்றில் ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றுகிறார்கள். ஆபரேஷனுக்கு பிறகு இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

நிகழ்ச்சிகள் ரத்து

இதனால் குஷ்பு தனது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டார். 2 வாரத்துக்கு பிறகு வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.