மாவீரர் தினத்தில் ஆதாயம் தேட முற்படும் அரசியல்வாதிகள் நிராகரிக்கப்பட வேண்டியவர்களாவர்.

                                                                                                                                                                                                                                                                                யதீந்திரா

இம்முறை மாவிரர் தினம் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் நினைவுகொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் வடக்கிலுள்ள பல துயிலும் இல்லங்களில் நினைகொள்ளப்பட்டிருந்தது. இம்முறை திருகோணமலை உள்ளடங்கலாக பல இடங்களிலுள்ள துயிலுமில்லங்களில் சுடரேற்றி, அகவணக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த முறை இடம்பெற்ற மாவீரர் தினத்தை சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பெருமதிப்பு வைத்திருந்தவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மாவீரர் ஒருவரது தந்தையுமாகிய பசீர்காக்கா என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு மனோகரன் இம்முறை மாவீரர் தினத்தை அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக பயன்படுத்தக் கூடாது என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். அதே போன்று முன்னாள் போராளிகளால் வழிநடத்தப்படும் சில அமைப்புக்களும் அவ்வாறான கோரிக்கையை முன்வைத்திக்கின்றனர். மாவீரர் தினத்தில், மாவீரர் ஒருவரது தாயோ அல்லது தந்தையோதான் பிரதான சுடரை ஏற்றவேண்டுமென்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் தியாகத்தை, அர்ப்பணிப்பை தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் ஒரு போக்கு சில அரசியல் வாதிகள் மத்தியில் இருக்கிறது. தேர்தல் காலத்தில் பிரபாகரனதும், விடுதலைப் புலிகளதும் புகழ்பாடும் இவ்வாறான அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் ஆற்றைக் கடக்கும் வரைதான் அன்ணன் தம்பி, கடந்த பின்னர் நீ யாரோ, நான் யாரோ என்பதுபோல் நடந்துகொள்வதுண்டு. விடுதலைப் புலிகளை, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் அந்தப் போக்கினது உச்சமாகவே மாவீரர் தினத்தை இவ்வாறான அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர்.  ஆனால் இந்த நிலைமை முன்னாள் போராளிகள் மத்தியிலும், மாவீரர்களது பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவாகவே இம்முறை இந்த விடயம் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. மாவீரர் தினத்தை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பது மிகவும் சரியானதொரு நிலைப்பாடாகும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் மதித்து நடப்பதே அந்த மாவீரர்களுக்கு இவர்கள் செய்யும் உண்மையான அகவணக்கம் ஆகும்.

2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது ஒரு கதம்ப அரசியலாக மாறிவிட்டது. அதாவது, விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவை பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது முற்றிலும் ஒரு வித்தியாசமான கலவைக் கூட்டாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியலில் பல கருத்து நிலைப்பாடுகள் இருப்பது சாதாரணமான ஒன்று.

ஆனால் ஒரு அமைப்புக்குள், பல கருத்துக்களும் பல நிலைப்பாடுகளும் இருப்பதானது முற்றிலும் அரசாதாரணமான ஒன்றாகும். அவ்வாறானதொரு அரசாதாரணத்திற்கான சான்றாகவே தற்போதைய கூட்டமைப்பு காணப்படுகிறது. கூட்டமைப்பிற்குள் எவரும் வரலாம், எவரும் வெளியேறலாம் என்னும் சுமந்திரனின் கூற்று, கூட்டமைப்பின் கதம்பநிலைக்கு சிறந்த ஆதாரமாகும். இப்போது கூட்டமைப்புக்குள் பிரபாகரனை தலைவர் என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார், முப்பது வருடம் போராடி பிரபாகரன் எதைக் கிழித்தார் என்று கேட்பவரும் இருக்கின்றார், புலிகள் ஒரு பாசிச அமைப்பு என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள், விடுதலைப் புலிகள் ஒரு கொடூரமான அமைப்பு என்று கூறுபவரும் இருக்கின்றார் - இப்படியான பலரும் கலந்து அரசியலை வழிநடத்தும் ஒரு அமைப்பை கதம்ப அமைப்பு என்று சொல்வது தவறான ஒன்றா?

நான் இருக்கும் வரை அந்த நபர் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்று பிரபாகரன் கூறிய ஒருவர் கூட தற்போது கூட்டமைப்புக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஒரு ஜனநாயக அமைப்பு என்றால் முரண்பாடுகள் இருக்கும்தான் என்று இதற்கு ஒருவர் பதில் சொல்லலாம். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஒரு முறை இப்படியொரு கேள்வியை சம்பந்தனிடம் கேட்ட போதும், சம்பந்தன் அவுருக்கும் கூட, இப்படியானதொரு பதிலைத்தான் கூறியிருந்தார். சம்பந்தனின் பதிலை ஏற்கலாம் - ஜனநாயக அமைப்பு என்றால் முரண்பாடுகள் இருப்பது இயல்புதான். ஜனநாயக அமைப்புக்குள் மட்டுமல்ல எந்தவொரு அமைப்புக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பது இயல்பே ஆனால் முரண்பாடுகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கும் வித்தியாசம் உண்டு. பிரபாகரனை கொடூரமானவர், பாசிஸ்ட் என்று கூறுபவரும் அவரை தலைவர் என்று அழைப்பவரும் எப்படி ஒரு கூட்டமைப்புக்குள் இருக்க முடியும்? இது முரண்பாடல்ல முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடு. ஒரு விடயத்தை விமர்சனத்தோடு எதிர்கொள்வது என்பது வேறு முற்றிலுமாக அதனை நிராகரிப்பது என்பது வேறு. தற்போது கூட்டமைப்புக்குள் ஒன்றை முற்றிலுமாக நிராகரிப்பவரும் இன்னொன்றை முழுமையாக ஆதரிப்பவரும் இருக்கின்றார். இது எப்படி சாத்தியப்படும்?

ஆனால் இது சாத்தியம்! எப்படி? அதாவது, ஒரு விடயத்தின் மீது உண்மையான ஈடுபாடு இல்லாதபோது, அதற்கு எதிரான நிலைப்பாடு என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கப் போவதில்லை. இதன் பொருள் விளங்குகின்றதா? பிரபாகரனை தலைவர் என்று விழிக்கும் அரசியல்வாதிகள் மற்றும், விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் உள்ளதாகக் காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் எவருமே அதனை உளப்பூர்வமாக கூறவில்லை மாறாக, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும், போராளிகளின் குடும்பங்களின் வாக்குகளை பெறுவதற்காகவுமே விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் உள்ளவர்கள்போல் நடிக்கின்றனர். இதன் காரணமாகவே பிரபாகரனை பாசிஸ்ட் என்றும், கொடுங்கோலன் என்றும் சொல்பவர்களுடன் அவர்களால் சாதாரணமாக கூடிக் குலவ முடிகிறது. உண்மையிலேயே பிரபாகரனை இப்போதும் ஒருவர் தனது மானசீகத் தலைவராக ஏற்றுக் கொள்வார் என்றால் அவர் நிச்சயமாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் இணைந்து செயற்படமாட்டார். ஏனெனில் அவர்கள் அந்த நிலைப்பாடுடையவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனை மிகவும் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர்.

உண்மையில் சம்பந்தனை ஒருவர் தலைவராக ஏற்றுக் கொண்டால் அவர் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு போதுமே கால்பதிக்கமாட்டார். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் மானசீகமாக நேசிப்பவர்கள் எவரும் ஒரு போதுமே சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதே வேளை, அவரால் வழிடத்தப்படும் கட்சியிலும் ஒருபோதும் இருக்கவும் மாட்டார்கள்.

இது சம்பந்தன் மீதான விமர்சனமல்ல மாறாக சம்பந்தனோடு இருந்து கொண்டு அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போலிகள் தொடர்பானது. அண்மையில் சிவசேனை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற மறவன்புலவு சச்சிதானந்தத்தை டான் தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்திருந்தேன். அப்போது அவர் ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கு நேரம் பெற்றுத் தருமாறு தன்னை மாவை சேனாதிராஜா கேட்டதாகவும், அதற்கு ஏற்ப தான் நேரத்தை பெற்றுக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் குறித்த திகதிக்குள் செல்லாமையால் பிரதமர் பிறிதொரு நாட்டிற்கு சென்று விட்டதாகவும் ஆனால் புதுடில்லிக்கு சென்றிருந்த சம்பந்தன் அங்கு வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு கொடுரமான அமைப்பு (LTTE is a ruthless organization) என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனை நான் கூறவில்லை மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுகின்றார்.

மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியளவில் பரந்த தொடர்புகளைக் கொண்ட ஒருவர் என்பது அரசியல் வட்டாரங்களில் உள்ளவர்கள் நன்கறிந்தவிடயம். ஆனால் இப்படி பகிரங்கமாக கூறும் துனிவும் ஆற்றலும் சம்பந்தனிடம் இருக்கிறது ஆனால் பிரபாகரனை தலைவர் என்று கூறிக்கொண்டு, மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றமுற்படும் அரசியல் வாதிகளுக்கு, சம்பந்தனை தூக்கிவீசும் துனிவு இருக்கிறதா? வன்னியோடு நாங்கள் தொடர்பிலிருந்தனாங்கள் என்று இப்போதும் பெருமிதம் பேசும் அரசியல் வாதிகளிடம் அந்த ஆற்றல் இருக்கிறதா? பிரபாகரனை சாதாரணமாக நிராகரித்துச் செல்ல சம்பந்தனால் முடிகிறதென்றால் அந்த பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களால் ஏன் சம்பந்தனை சாதாரணமாக தூக்கிவீச முடியவில்லை? ஆகக் குறைந்தது கூட்டமைப்புக்குள்ளாவது சம்பந்தனோடு சண்டை பிடிக்க முடியவில்லையே? சம்பந்தனிடம் இருக்கும் துனிவு ஏன் பிரபாகரனை ஆதரிப்பதாக கூறிக்கொள்ளும் அரசியல் வாதிகளிடம் இல்லை?

இவ்வாறானதொரு பின்புலத்தில் அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காக மாவீரர்களின் நினைவுகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பது முற்றிலும் சரியானதொரு முடிவுதான். இனிவரும் ஒவ்வொரு தினமும் இந்த அடிப்படையில்தான் நடக்க வேண்டும் என்பதற்கான ஒரு உறுதிபூணலாக இந்த மாவீரர் தினம் அமையட்டும். ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக மரணித்தவர்களை தேசமாக நினைவுகொள்வதே சரியானது. காலம் கனியும் போது நிச்சயம் இது ஒரு தேசிய நினைவுகொள்ளலாக மாறும்.

 

 

Ninaivil

திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018