கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணிக்கு 410 ரன்கள் இலக்கு இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

டெல்லியில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் இலங்கை அணிக்கு 410 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


டெல்லி டெஸ்ட்

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.


பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3–வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் தினேஷ் சன்டிமால் (147 ரன்), சன்டகன் (0) களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் 4–வது நாளான நேற்று மேற்கொண்டு 5.3 ஓவர்கள் விளையாடிய இலங்கை அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 373 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. தினேஷ் சன்டிமால் 164 ரன்களில் (361 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) இஷாந்த் ‌ஷர்மாவின் பந்து வீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சன்டிமாலின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 20 பந்துகளை எதிர்கொண்ட சன்டகன் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.


ரஹானே சொதப்பல்

அடுத்து 163 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவின் 2–வது இன்னிங்சை முரளிவிஜயும், ஷிகர் தவானும் தொடங்கினர். முதல் இன்னிங்சை போலவே விஜய் முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை ஓட விட்டார். ஆனால் இந்த முறை அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. 3–வது ஓவரிலேயே விஜய் (9 ரன்) விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகிப்போனார். 2–வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் ரஹானே அனுப்பப்பட்டார்.


தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானே ஒரு ரன்னில் இருந்த போது எல்.பி.டபிள்யூ. ஆன போதிலும் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பித்தார். ஆனால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரஹானே (10 ரன், 37 பந்து), கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.


இதன் பின்னர் தவானுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். புஜாரா தனது பங்குக்கு 49 ரன்கள் (66 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். இதையடுத்து கேப்டன் விராட் கோலி அடியெடுத்து வைத்தார். மறுமுனையில் துரித ரன் சேகப்பில் கவனம் செலுத்திய ஷிகர் தவான் அரைசதத்தை கடந்தார். ஸ்கோர் 144 ரன்களை எட்டிய போது தவான் 67 ரன்களில்(91 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.


410 ரன்கள் இலக்கு

அடுத்து விராட் கோலியுடன், ரோகித் சர்மா கூட்டணி போட்டார். இவர்கள் வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டனர். அதே சமயம் இலங்கை கேப்டன் சன்டிமால், பீல்டிங்கை விரிவுப்படுத்தினார். இதனால் பவுண்டரி அடிப்பது எளிதல்ல என்பதை உணர்ந்த இந்திய வீரர்கள், ஒன்று, இரண்டு வீதமாக ரன்களை ஓடி எடுத்து ஸ்கோரை மளமளவென அதிகரிக்கச் செய்தனர். சன்டிமாலின் வியூகத்தை கச்சிதமாக உடைத்தெறிந்த கோலி 50 ரன்கள் (58 பந்து, 3 பவுண்டரி) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். ரோகித் சர்மா (50 ரன், 49 பந்து, 5 பவுண்டரி) அரைசதத்தை எட்டியதும் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக கோலி அறிவித்தார்.


இதன்படி இந்திய அணி 2–வது இன்னிங்சில் 52.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் (ரன்ரேட் 4.70) சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 410 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


இலங்கை திணறல்

இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த இலங்கை அணி எதிர்பார்த்தது போலவே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. சமரவிக்ரமா 5 ரன்னில், முகமது ‌ஷமியால் வெளியேற்றப்பட்டார். மற்றொரு தொடக்க வீரர் கருணாரத்னே (13 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட லக்மல் (0) இருவரும் ஜடேஜாவின் சுழல் வலையில் சிக்கினர்.


போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் 13 ஓவர்களுக்கு முன்கூட்டியே முடிக்கப்பட்டது. 4–வது நாள் முடிவில் இலங்கை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 31 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது. தனஞ்ஜெயா டி சில்வா (13 ரன்), முன்னாள் கேப்டன் மேத்யூஸ் (0) களத்தில் நிற்கிறார்கள்.


இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 379 ரன்கள் தேவைப்படுவதால் இந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. டெல்லி மைதானத்தில் 276 ரன்களுக்கு மேல் எந்த அணியும் ‘சேசிங்’ செய்தது கிடையாது. கடைசி நாளில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதை திறம்பட எதிர்கொண்டு இலங்கை அணி டிரா செய்வது என்பது கடினம் தான்.


5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.


இலங்கை தொடரில் 610 ரன்கள் குவித்து கோலி சாதனை

டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 243 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் விராட் கோலி, 2–வது இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்தார். அத்துடன் நேற்றும் சில சாதனைகளை தன்வசப்படுத்தினார். அதன் விவரம் வருமாறு:–


*இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு சதம், இரண்டு இரட்டை சதம், ஒரு அரைசதம் உள்பட 610 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் சேர்த்த 4–வது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்த வகையில் முதல் 3 இடங்களில் இங்கிலாந்தின் கிரகாம் கூச்–752 ரன் (இந்தியாவுக்கு எதிராக, 1990–ம் ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா–688 ரன் (இலங்கைக்கு எதிராக, 2001), பாகிஸ்தானின் முகமது யூசுப்–665 ரன் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2006) ஆகியோர் உள்ளனர்.


*3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களில் இதற்கு முன்பு ஷேவாக் எடுத்த 544 ரன்களே (பாகிஸ்தானுக்கு எதிராக, 2005) அதிகபட்சமாக இருந்தது. அவரை கோலி பின்னுக்கு தள்ளினார்.


*ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், அரைசதமும் விளாசிய 7–வது கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். சுனில் கவாஸ்கர் (இந்தியா), கிரகாம் கூச் (இங்கிலாந்து), மார்க் டெய்லர் (ஆஸ்திரேலியா), ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), கிரேமி சுமித் (தென்ஆப்பிரிக்கா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோர் ஏற்கனவே இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.


*இந்த டெஸ்டில் கோலி இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 293 ரன்கள் (243, 50 ரன்) சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டனாக அவர் திகழ்கிறார். 1978–ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சுனில் கவாஸ்கர் மொத்தம் 289 ரன்கள் (முதல் இன்னிங்சில் 107 ரன், 2–வது இன்னிங்சில் 182* ரன்) எடுத்ததே முந்தைய இந்திய கேப்டனின் அதிகபட்சமாக இருந்தது.


*இந்த தொடரில் 610 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, ஏற்கனவே 2014–15–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் (4 டெஸ்ட்) 692 ரன்களும், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் (5 டெஸ்ட்) 655 ரன்களும் குவித்துள்ளார். இதன் மூலம் மூன்று தொடர்களில் 600 ரன்களுக்கு மேல் திரட்டிய முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கவாஸ்கர், ராகுல்டிராவிட் ஆகியோர் 2 முறை இந்த இலக்கை கடந்துள்ளனர்.


*மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 3–வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 2017–ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் 1,460 ரன், டெஸ்டில் 1,059 ரன், 20 ஓவர் போட்டியில் 299 ரன் என்று மொத்தம் 2,818 ரன்கள் (சராசரி 68.73) குவித்துள்ளார். இந்த வரிசையில் இலங்கையின் சங்கக்கரா– 2,868 ரன் (2014–ம் ஆண்டு), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்–2,833 ரன் (2005–ம் ஆண்டு) டாப்–2 இடத்தில் உள்ளனர்.


விராட் கோலி, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுக்க இருப்பதால், இனி அடுத்த ஆண்டில் தான் அவர் ஆடுவார். அதனால் இந்த பெரிய சாதனையை மயிரிழையில் முறியடிக்க முடியாமல் போய் விட்டது. அடுத்த 2 ஆண்டுகள் டெல்லியில் கிரிக்கெட் போட்டி கிடையாது


டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டினால் தங்களால் இயல்பாக ஆட முடியவில்லை, சுவாச பிரச்சினை ஏற்படுகிறது என்று இலங்கை வீரர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுக்கு டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது. அதற்கு காரணம், காற்று மாசு கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறைப்படி தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒதுக்குகிறது. அந்த வகையில் இனி 2020–ம் ஆண்டுக்கு முன்பு வரை டெல்லியில் சர்வதேச போட்டிக்கு வாய்ப்பில்லை. கிரிக்கெட் வாரியத்தின் வருங்கால கிரிக்கெட் தொடர் அட்டவணைப்படி 2020–ம் ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்தில் தான் இனி டெல்லிக்கு சர்வதேச போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ‘எங்கள் அணியிலும் நிறைய பேருக்கு இது புது அனுபவம் தான்’– தவான்


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நேற்று 32–வது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி கொண்டாடினார். இரண்டாவது இன்னிங்சில் 67 ரன்களை எடுத்த அவர் டெஸ்டில் 2 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார். தவான் நிருபர்களிடம் கூறியதாவது:–


டெல்லியில் காற்று மாசு இருக்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. ஆனால் உங்களுக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டு விட்டால், அதை செய்து தான் ஆக வேண்டும். எங்கள் அணியில் உள்ள நிறைய வீரர்கள் இதற்கு முன்பு இத்தகைய அனுபவத்தை சந்தித்து கிடையாது. ஏனெனில் அவர்கள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஆனால் இது போன்ற சூழலில் விளையாட வேண்டும் என்று நிலைமை ஏற்பட்டால் அதற்காக ஒதுங்கி இருக்க முடியாது.


டெல்லியில் மற்ற பருவங்களில் மாசு பிரச்சினை இந்த அளவுக்கு இருப்பதில்லை. குளிர்காலத்தில் தான் புகையால் நிலைமை மாறி விடுகிறது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றபடி விளையாட வேண்டியது அவசியமாகும். ஒரு வேளை இலங்கை அணியினருக்கு இத்தகைய நிலைமை அசவுகரியமாக இருக்கலாம். இலங்கையில் மாசு குறைவாக இருக்கலாம். அங்கு நிறைய கடற்கரை இருக்கிறது. பொதுவாக ஒரு நகரை சுற்றி கடற்கரை இருந்தாலே மாசு பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.இவ்வாறு தவான் கூறினார்.


‘பேசி பலன் இல்லை’– போத்தாஸ்


இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் நிக்போத்தாஸ் கூறியதாவது:–


டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மருத்துவ குழுவினர் இலங்கை வீரர்களை பரிசோதித்தனர். ஏன் இந்த சோதனை, இதன் முடிவு என்ன சொல்லப்போகிறது என்பது எனக்கு தெரியாது. இன்று (நேற்று) காலையில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தோம். அப்போது எங்களது வீரர்கள் இன்னும் இயல்பாக இருக்க முடியவில்லையே என்று தங்களுக்குள் பேசி வேதனைப்பட்டனர். ஆனால் என்ன செய்வது? அது பற்றி (காற்று மாசு) பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.இவ்வாறு போத்தாஸ் கூறினார்.


நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை கேப்டன் சன்டிமால் பேட்டிங் செய்கையில் எந்த சுவாச கவசமும் (மாஸ்க்) அணியவில்லை. ஆனால் பீல்டிங்குக்கு வந்த போது சுவாச கவசத்துடன் காணப்பட்டார். மேத்யூஸ், சன்டகன் உள்ளிட்ட மேலும் சில இலங்கை வீரர்களும் சுவாச கவசத்துடன் களத்தில் வலம் வந்தனர்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017