வட கிழக்கில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ததேகூ வெற்றிபெற வைப்பதன் மூலம் அதன் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம் நக்கீரள்

இரண்டு ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டு வந்த இலங்கை உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் நாள் நடைபெறவுள்ளது.

கடைசியாக 322 சபைகளுக்கும்  2011 ஆம் ஆண்டு மார்ச் 17, யூலை 13,  ஒக்தோபர்  இடம்பெற்றது.  ஈழப் போர் இடப்பெயர்வு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்குத்  தேர்தல்   நடைபெறவில்லை.  2011 இன் பின்னர் ஆறு புதிய உள்ளாட்சி சபைகள் (1 மாநகரசபை, 5 பிரதேசசபைகள்) ஒருவாக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 341 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.  

போட்டியிடும் கட்சிகள்

    (1) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி.  

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிலை சின்னத்தில் சில மாவட்டங்களிலும், இலங்கை சுதந்திரக் கட்சிக்  கை சின்னத்தில் சில மாவட்டங்களிலும் போட்டியிடுகிறது. 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக இலங்கை சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    (2) ஐக்கிய தேசிய முன்னணி

ஐக்கிய தேசியக் கட்சி இரணில் விக்கிரமசிங்க தலைமையில் யானைச்  சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்கட்சிச் சின்னத்தில் சம்பிக்க இரணவக்க தலைமையிலான  ஜாதிக ஹெல உறுமய கட்சியும் போட்டியிடுகின்றது. இரவூப் ஹக்கீம் தலைமையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழும், சில சபைகளில் தனித்தும் போட்டியிடுகின்றது. மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சில சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியுடனும், சில சபைகளில் ஏணிச்  சின்னத்தில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தனித்தும் போட்டியிடுகின்றது.

    (3) சிறிலங்கா  பொதுசன முன்னணி 

இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இலங்கை பொதுசன முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி அமைத்து போட்டியிடுகிறார். இக்கட்சி பூ மொட்டுச்  சின்னத்தில் போட்டியிடுகிறது.

    (4) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்  சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் சித்தார்த்தன் தலைமையிலான  புளொட் அமைப்பும்  செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ அமைப்பும் போட்டியிடுகின்றன.

    (5) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி "தமிழ்த் தேசியப் பேரவை" என்ற பெயரில் சைக்கிள் சின்னத்தில் வட, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகிறது. கடந்த 2011 இல் உள்ளாட்சி தேர்தலால் பலன் ஏதும் இல்லை என்று சொல்லி அதனைப் புறக்கணித்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி இம்முறை மனம்மாறித் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இந்த மனமாற்றம் வரவேற்கத்தக்கது.  சனநாயக முறைமையில் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது.

    (6) தமிழர் தேசிய விடுதலை முன்னணி

வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் தேசிய விடுதலை கூட்டமைப்பு உதய சூரியன்  சின்னத்தில் போட்டியிடுகிறது.  இதில் சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான இபிஎல்ஆர்எவ் கட்சி  இடம் பெற்றுள்ளது. போர்க்காலத்தில் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி இராஜபக்சா அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்டமாக 7 மாநகர சபை, 18 நகரசபை 68 பிரதேச சபைகளுக்கான  மொத்தம் 93  வேட்பு மனுக்கள்  கடந்த டிசெம்பர் 11 - 14 நாளுகளுக்கு இடையே தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த வேட்பு மனுக்களில் 466  பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், 57 சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 447  அரசியல் கட்சிகள், 53 சுயேட்சைக் குழுக்கள் ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பத்தொன்பது அரசியல் கட்சிகளதும் 4 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

எஞ்சிய  248 உள்ளாட்சி  சபைகளுக்கான (17 மாநகர சபை, 23 நகர சபை, 208 பிரதேச சபை)  மொத்தம் 1,582  (1,399  பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்,  174 சுயேட்சைக் குழுக்கள்) ஆகியவற்றுக்கான வேட்பு மனுக்கள் சனவரி 18 - 21 இடையிலான காலப் பகுதியில் தாக்கல் செய்யப்பட்டன. இதில்   1,533  வேட்பு மனுக்கள் (1,379  அரசியல் கட்சிகள், 174 சுயேட்சைக் குழுக்கள்) )  ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதே நேரம் 29 வேட்பு மனுக்கள் (20 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்கள்) நிராகரிக்கப்பட்டன.

தேர்தல் ஆணையாளர் டிசெம்பர் 18 ஆம் நாள் மொத்த 341 உள்ளாட்சிகளுக்கும் பெப்ரவரி 10 அன்று தேர்தல் நடக்கும் என அறிவித்தார். சுமார் 13,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு உரூபா 4 பில்லியன் (400 கோடி) செலவழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கிட்டத்தட்ட 300,000 அரச ஊழியர்கள் இந்தத் தேர்தலில் கடமையாற்ற அமர்த்தப்படுவர்.

மொத்த வாக்காளர் தொகை 15.8 மில்லியன் ( 1.58 கோடி) ஆகும். இவர்கள் மொத்தம் 341 உள்ளாட்சி சபைகளுக்கும் ( 24 மாநகர சபை, 41 நகர சபை, 276 பிரதேச சபை) 8,356 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.  2011 இல் மொத்தம் 336 உள்ளாட்சி சபைகளும் 4,486 உறுப்பினர்களும் இருந்தனர். 2018 இல்  உறுப்பினர் தொகை இரட்டிப்பாகியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் உள்ளாட்சி  சபைகளுக்கான தேர்தல் ஒரே நாளில் நடைபெறுவது இதுவே முதல் தடவை.  அது மட்டுமல்ல, முதல் முறையாகக்  கலப்புத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அறுபது விழுக்காடு உறுப்பினர்கள் வட்டார ரீதியில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் உறுப்பினர்காளக தேர்ந்தெடுக்கப்படுவர். எஞ்சிய 40 விழுக்காட்டினர் மூடிய பட்டியல் (Closed list ) விகிதாசார முறைமையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.  வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்.   விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்க இடம் இல்லை.  மொத்தம் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.  அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு யாரை நியமிப்பது என்பதை கட்சிகளே ஏற்கனவே தயாரித்த பட்டியலின் அடிப்படையில்  தீர்மானிக்கும். 

இனி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளாட்சி  சபைகள் பற்றியும் அதில் போட்டியிடும் கட்சிகளையும் பார்ப்போம்.

வடக்கில் இரண்டு தேர்தல் மாவட்டங்களும் ( யாழ்ப்பாணம், வன்னி)  கிழக்கில்  மூன்று தேர்தல் மாவட்டங்களும் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை)  உள்ளன. இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும்  ததேகூ  1247 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட - கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

வேட்பாளர்களில்  25 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.  மேலும் பல முன்னாள் போராளிகளும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில்  போட்டியிடுகின்றனர். இவ்விரு  சாராரில்  பெரும்பானோர்  பொருளாதார வலுவற்றவர்கள். அவர்களது வங்கிக் கணக்குகளில் 200 அல்லது 300 இலங்கை உரூபா பணமே இருப்பதைச்   சொத்து விவரப் படிவங்கள்  நிரப்பிய பொழுது அறியக் கூடியதாக இருந்தது.  இந்த நிலையில்   மேற்படி  பெண்கள்  மற்றும் முன்னாள் போராளிகளால்  தேர்தல் பணிகளை சரிவர முன்னெடுக்க முடியாது இருக்கிறது. அவர்களில் 400 பேர் வரையிலானவர்களது கட்டுப்பணத்தை  தமிழரசுக் கட்சியே கட்டியுள்ளது.

திருகோணமலை தேர்தல் மாவட்டம் இலங்கையில் மிகக் குறைந்த  மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களுள் ஒன்று.  தமிழ்க் கிராமங்களான கிளிவெட்டி, மூதூர், வெருகல் - ஈச்சிலம்பற்றை, சம்பூர்  போன்ற ஊர்களில் வாழும் மக்களுக்கு புதிய தேர்தல் முறைபற்றிய விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது. 

மேலும், சில இடங்களில் பிற இனத்தவரும்  தமிழரும்  ஏறத்தாழச்  சமனான அளவில் இருக்கிறார்கள்.  இவ்விடங்களில் ஆட்சியைக் கைப்பற்றக் கூடுதல்  வினை  செய்ய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாகத் திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப்  பிரதேசசபை, வவுனியா மாவட்டம்  வவுனியா வடக்குப் பிரதேசசபை போன்ற பல சபைகளின்  ஆட்சியைக் கைப்பற்றக்   கூடுதல்  முயற்சி எடுக்க  வேண்டியுள்ளது. 

வவனியா வடக்கு பிரதேச சபையில் தற்போது உள்ள மூன்று சிங்கள உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் இரண்டாக அதிகரிக்கலாம் எனக்  கூறப்படுகின்றது. கொக்கொச்சான்குளம் என்ற  தமிழர்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகள் காலபோவெஸ்பவ என்ற சிங்களக்  கிரமமாக மாற்றப்பட்டு, அதன் ஒரு பகுதி வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜானகபுர என்ற சிங்கள குடியேற்றக் கிராமமும் வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டதால் 11 பேர் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில், நான்கு அல்லது ஐந்து சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் வெலிஓயா, உள்ளிட்ட சிங்கள குடியேற்ற கிராமங்கள் அமைக்கப்பட்டு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு இந்த ஆண்டுத் தொடக்கத்தில்  மேற்கொண்ட உள்ளாட்சி சபைகளின் எல்லை மீள் நிருணயத்தின் போது, வடக்கு கிழக்கு உள்ளாட்சி சபைகளில் சிங்கள உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆகவே  தமிழ்க் கட்சிகளுக்கிடையேயான  போட்டி  காரணமாக, இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கிழக்கு மாகாணமும் வடபகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளில் சிங்கள, முஸ்லிம் பிரதிநிதிகள் கூடுதலாக தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

முழு நாடு தழுவிய இந்தத் தேர்தல் உள்ளூராட்சி சபைகள் மட்டத்தில் நடந்தாலும் இதற்கு நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது. தமிழ் மக்களை எதிர்நோக்கும் முக்கிய சிக்கல் அரசியல் யாப்பு வரைவு தொடர்பானது.  கடந்த தேர்தல்களில் ததேகூ க்கு 70 விழுக்காடு வாக்காளர்களது ஆதரவு காணப்பட்டது.  இந்த விழுக்காடு  குறைந்தால் ததேகூ இன் பேரம் பேசும் வலிமை குறைய வாய்ப்புண்டு.   மேலும் மீள்குடியேற்றம்,   காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ததேகூ இன் கைகளைப் பலப்படுத்தினால் மட்டுமே வலுவான இடத்தில் இருந்து கொண்டு அரசோடு பேச முடியும்.

குறிப்பாக மக்கள் சுயேட்சைக் குழுக்களை நிராகரிக்க வேண்டும். சுயேட்சைக் குழுக்களுக்கு எந்தவிதமான கொள்கையோ கோட்பாடோ இல்லை.  அவை  வாக்குகளைச் சிதறடிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டவை.  மூன்று தலை கழுதைகளைப் போன்றவை.   பெரும்பாலும் தமிழ் அரசுக் கட்சியில் நியமனம் கேட்டு நியமனம் கேட்கத் தவறியவர்களே தங்கள் நிறத்தை மாற்றி சுயேட்சைக் குழுவாக போட்டியிடுகிறார்கள். 

தொடக்கத்தில் கூறியது போல நாடு தழுவிய உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஒரு குட்டி நாடாளுமன்றத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. தென்னிலங்கையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி (சிறிசேனா)  மற்றும் மகிந்த இராசபக்சா தலைமையில்  உருவாகியுள்ள  சிறிலங்கா பொதுசன முன்னணி.

2011 இல் நடந்த தேர்தலில் ஒன்றுபட்டு போட்டியிட்ட  ஐக்கிய  மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றியீட்டியது. ததேகூ ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிக சபைகளைக் கைப்பற்றியிருந்தது.

இந்தத் தேர்தலில் ஐதேக மற்றும்,   ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி (சிறிசேனா) இரண்டுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் அரசியல் அமைப்பு உருவாக்கம் மட்டுமல்ல  நல்லிணக்கம்,  ஐநாமஉ பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப் படுத்தல்,  மீள்குடியேற்றம், தனியார் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு மற்றும் வலிந்து காணாமல்

போனோரைக் கண்டு பிடித்தல் போன்றவைக்கு பின்னடைவு ஏற்படும்.

எனவே எதிர்வரும் பெப்ரவரி  10, 2018 இல் நடைபெறும் தேர்தலில் மக்கள் ததேகூ க்கு வாக்களித்து அந்தக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச்  செய்வதன் மூலம் தமிழர் தரப்பின் பேரம் பேசும் சக்தியை மேலும்  வலுப்படுத்தலாம்.

Ninaivil

திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
திரு வைத்தியலிங்கம் பாலசுந்தரம்
யாழ். காரைநகர்
லண்டன்
20 சனவரி 2018
Pub.Date: January 23, 2018
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
திரு சின்னத்தம்பி மாணிக்கவாசகர் (மாணிக்)
யாழ். கொக்குவில்
லண்டன்
17 சனவரி 2018
Pub.Date: January 21, 2018
திரு கந்தையா இந்திரகுமார்
திரு கந்தையா இந்திரகுமார்
கொழும்பு
அவுஸ்திரேலியா
18 சனவரி 2018
Pub.Date: January 20, 2018
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
திருமதி அனற் ஜீவானந்தன் (ரதி, ரஞ்சினி)
யாழ். இளவாலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 18, 2018
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திரு நவரட்ணம் ஆனந்தராஜா
திருகோணமலை
கனடா
16 சனவரி 2018
Pub.Date: January 17, 2018
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
திருமதி வைரவநாதன் கமலாம்பிகை (மணி)
யாழ். சாவகச்சேரி
திருகோணமலை
16 சனவரி 2018
Pub.Date: January 16, 2018