3 நாள் தாமதத்துக்கு பின் ஸ்ரீதேவி உடல் மும்பை வந்தது திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

துபாய் அரசு அனுமதி அளித்ததையடுத்து, 3 நாள் தாமதத்துக்கு பின் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

இந்திய  சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி  (54), தனது கணவர் போனிகபூர், இளைய  மகள் குஷியுடன் உறவினரின்  திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தார். திருமண விழா முடிந்ததும் மகள் குஷியுடன்  போனிகபூர் இந்தியா திரும்பிவிட்டார்.

ஸ்ரீதேவி மட்டும் ஓட்டலில் தங்கியிருந்தார்.  திடீரென மீண்டும் கடந்த சனிக்கிழமை போனிகபூர் துபாய் சென்றார். மாலை 5.30   மணிக்கு ஓட்டல் அறைக்கு சென்று தேவியுடன் பேசிக்கொண்டிருந்தார். 5.45 மணிக்கு குளியல் அறைக்கு ஸ்ரீதேவி சென்றிருக்கிறார். வெகுநேரமாகியும் வௌியே   வராததால் போனிகபூர்  குளியல் அறை கதவை  தட்டினார்.

 கதவை திறக்காததால்  அவர்  கதவை உடைத்து  சென்றுள்ளார். அங்கு குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி  இறந்து  கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். மாலை 6 மணிக்கு அவரது உடலை  போனிகபூர்  பார்த்திருக்கிறார். ஆனால் இரவு 9 மணிக்கு தான் போலீசுக்கு  தகவல்  தெரிவித்துள்ளார். 

துபாய் சட்ட விதிமுறைகளின்படி அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை பிரேத பரிசோதனை மற்றும் உடற்கூறு அறிக்கை விவரம், இந்திய தூதரக  அதிகாரிகளிடமும்  தேவியின் குடும்பத்தாரிடமும் வழங்கப்பட்டது. அதில்,  பாத்ரூமில் உள்ள  குளியல் தொட்டியில் (பாத் டப்) தவறுதலாக ஸ்ரீதேவி  விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி அவர் இறந்துள்ளார். அப்போது அவர் மது  குடித்திருந்தார்  என்றும் அறிக்கையில் கூறப்பட்டது. 

 இதையடுத்து  இந்த வழக்கு போலீசாரிடமிருந்து அரசு தரப்பு வக்கீலுக்கு மாற்றப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சந்தேகங்கள் இருப்பதால் உடலை எம்பார்மிங் செய்ய வக்கீல் அனுமதி தரவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவரது மரணம் தொடர்பாக கணவர் போனிகபூர் மற்றும் அவர் தங்கியிருந்த  ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது உடல், மருத்துவமனை பிணவறையிலே வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை மீண்டும் போனிகபூர், துபாய் திருமணத்துக்கு சென்றிருந்த உறவினர்கள் சிலர் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

ஓட்டல் சிசிடிவி கேமரா, ஸ்ரீதேவியின் செல்போன் அழைப்புகளை வைத்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதனால் உடலை கொண்டு செல்ல அனுமதி கிடைக்குமா என சந்தேகம் எழுந்தது. அரசு தரப்பு விசாரணை நடைமுறைகளை முடித்துக்கொண்டு உடலை கொண்டு செல்ல இந்திய தூதரக அதிகாரிகள், போனி கபூர் குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் விசாரணை நிறைவடைந்ததாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் உடற்கூறு அறிக்கையை ஏற்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.

இது குறித்து அரசு வக்கீல் தரப்பில் வெளியிட்ட கடிதத்தில், ‘அனைத்து தரப்பு விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகள் முடிவடைந்ததையொட்டி ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைக்கப்படுகிறது. சட்டப்படி நீதி நிலைநாட்டும் வகையில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்கும் அனுமதி கடிதத்தை போனிகபூரின் குடும்பத்தாரிடமும் இந்திய தூதரக அதிகாரியிடமும் போலீசார் வழங்கினர். இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டு, ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உடலை எம்பார்மிங் முறையில் பதப்படுத்தும் பணி நடந்தது. பிறகு அவரது உடல் 3 நாள் தாமதத்துக்கு பிறகு நேற்று மாலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

 அவர்கள் உடலை துபாய் விமான நிலையத்திற்கு மாலை 6.30 மணி அளவில் கொண்டு வந்தனர். ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதற்காக கடந்த 3 நாட்களாக துபாய் விமான நிலையத்தில் 13 பேர் பயணிக்க கூடிய அனில் அம்பானியின் விமானம் தயார் நிலையில் இருந்தது.

அனைத்து பிரச்சினைகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து எம்பாமிங் செய்யப்பட்ட தேவியின் உடல் விமானத்தில் ஏற்பட்டது. தனி விமானம் துபாயிலிருந்து தேவி உடலுடன் இரவு 7.08 மணிக்கு இந்தியா புறப்பட்டது. அந்த விமானத்தில் அவரது கணவர் போனிகபூர் மற்றும் குடும்பத்தினரும் வந்தனர். தேவி உடல் நேற்றிரவு 9.30 மணிக்கு மும்பைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து அவரது வீட்டிற்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டது.

இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக அந்தேரி மேற்கு பகுதியில் லோகந்த்வாலாவில் உள்ள செலப்பிரேஷன் கிளப்புக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு  9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்து பிற்பகல் 2 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வில்லே பார்லே மைதானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மாலை 3.30 மணிக்கு தேவியின் உடல் தகனம் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துள்ளனர்.

மகள்களை நினைத்து ஸ்ரீதேவி ஏக்கம்: 4 வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு ஒரு மனக்குறை இருந்துள்ளது. இதுபற்றி ஒருமுறை அவர் பேட்டியில் கூறியது: சக குழந்தைகளைப்போல் கவலை   இல்லாமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்க வேண்டிய வயதில் நான் நடிக்க   வந்துவிட்டேன்.

4 வயதில் பள்ளிக்கு செல்லாமல் படப்பிடிப்புக்கு சென்றேன். பிற குழந்தைகளை போல் சாதாரண வாழ்க்கை வாழும் வாய்ப்பு எனக்கு   கிடைக்கவில்லை. சிறு வயதில் இருந்தே நடிப்பு நடிப்பு என்று பிசியாக  இருந்துவிட்டேன். சிறுவயதில் நடிக்க வந்துவிட்டதால் படிக்க முடியாமல்   போனது. பள்ளி, கல்லூரிக்கு சென்று மற்றவர்களைப்போல் படிக்க முடியவில்லை. குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் 13 வயதிலேயே ஹீரோயின் ஆகிவிட்டேன்.

ஒன்றைபெற ஒன்றை இழக்க வேண்டும் என்பார்கள். வாழ்க்கையில் அனைத்தையும் பெற முடியாது.   எனக்கு கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்கு கிடைக்காத கல்வி,   மற்ற குழந்தைகள் போல் விளையாட்டு சூழல் என் மகள்களுக்கு கிடைக்க வேண்டும்   என்பதில் தீர்க்கமாக இருக்கிறேன் என்றார்.

குழந்தையை போல் அழுத போனிகபூர்: ஸ்ரீதேவி  கடைசியாக முக்கிய வேடத்தில் நடித்த படம் மாம். இப்படம் தமிழிலும்  இந்தியிலும் கடந்தாண்டு வெளியானது. போனிகபூர்தான் இதை தயாரித்தார்.

இதில்  ஸ்ரீதேவியின் கணவராக நடித்தவர் அத்னான் சித்திக்கி. ஸ்ரீதேவி இறந்தபோது,  அவரும் துபாயில் இருந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘தகவல்  அறிந்து நான் ஓட்டலுக்கு சென்று போனிகபூரை சந்தித்தேன். குழந்தையை போல்  அழுதுகொண்டிருந்தார். என்னால் அதுபோல் அவரை பார்க்கவே முடியவில்லை. 

அவருக்கு சமாதானம் கூட கூற முடியவில்லை. அந்த அளவுக்கு அழுதபடி இருந்தார்.  அன்று அதிகாலை வரை அவருடனே இருந்தேன். நாள் முழுக்க அவர் ஸ்ரீதேவியை  நினைத்து அழுத நிலையிலேயே இருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக ஸ்ரீதேவியை  காதலித்தார்’ என்றார்.

ராம்கோபால் வர்மா உருக்கம்: இயக்குனர்  ராம்கோபால் வர்மா டிவிட்டரில், ‘ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பிறகு வரும்  தகவல்களை கேட்கும்போது மனம் வலிக்கிறது. தற்கொலை செய்துகொள்ளலாம்  போலிருக்கிறது’ என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி நடிப்பில் பல படங்களை அவர்  இயக்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன், ‘ஸ்ரீதேவியை நான் ஒரு தலையாக  காதலித்தேன்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலையில் காயம்?: ஸ்ரீதேவி  மரணம்  குறித்து நேற்று காலையில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது  பலதரப்பட்ட  தகவல்கள் துபாய் மீடியா மூலம் பரவிய வண்ணம் இருந்தது. அதில்,  ஸ்ரீதேவியின்  தலையில் காயம் இருந்தது.

பிரேத பரிசோதனையில் அது தெரிந்தது  என்ற தகவலும்  ஒன்று. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் அரசு  வக்கீலுக்கு  உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதால், மீண்டும்  பிரேத  பரிசோதனைக்கு உத்தரவிடலாம் என்ற தகவலும் பரவியது.

குளியல் தொட்டியில் மூழ்கி இறந்த பிரபலங்கள்: குளியல்  தொட்டியில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தது போல் வௌிநாட்டு பிரபலங்கள்   சிலர் பலியாகியுள்ளனர். அமெரிக்க பாடகர் ஜிம் மாரிசன் (28) குளியல் அறையில்   உள்ள தொட்டியில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இந்த சம்பவம் 1971ல்   நடந்தது.

அமெரிக்க பாப் பாடகி விட்னெ ஹாஸ்டன் 2012ல் ஓட்டல் அறையில் உள்ள   குளியல் தொட்டியில் முகம் கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார். ஹாலிவுட்   நடிகர் ஜுடி கார்லெண்ட் வீட்டிலுள்ள குளியல் அறையில் போதையில் இறந்து   கிடந்தார். இதேபோல் பாடகி பாபி கிறிஸ்டியன் பிரவுன் 2015ல் குளியல்   தொட்டியில் நீரில் மூழ்கி இறந்தார். இவர்கள் அனைவருமே போதையில்   இருந்துள்ளனர்.

பெரிய பொண்ணு அம்மா செல்லம்: ஸ்ரீதேவிக்கு   ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஜான்விதான் அம்மா   செல்லம். அம்மா இல்லாமல் அதிக நாட்கள் வௌியே எங்கேயும் இருக்க மாட்டாராம்.   இது குறித்து தேவி கூறும்போது, ‘தலைமுடி சீவக் கூட அம்மாதான் வர   வேண்டும் என இப்போதும் கூட ஜான்வி அடம் பிடிப்பாள்.

ரொம்ப அப்பாவி அவள்.   சின்னவள் குஷி அதற்கு எதிர்மாறாக இருப்பாள். அவளுக்கு யார் துணையும் தேவை   கிடையாது. தைரியசாலி’ என கூறியிருக்கிறார். இதேபோல் ஷூட்டிங்கில் இருந்த  ஜான்வி, அம்மா இறந்த செய்தி அறிந்து கதறி அழுது இருக்கிறார். கடந்த 3  நாட்களாக வீட்டில் தனது அறையில் அழுதபடியே முடங்கி கிடக்கிறார் என  உறவினர்கள் தெரிவித்தனர்.

வீட்டின் முன் காத்திருக்கும் ரசிகர்கள்: கடந்த  3 நாட்களாக ஸ்ரீதேவி வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டுள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கின்றனர்.  அதேபோல் போனிகபூரின் தம்பியும் நடிகருமான அனில் கபூரின் வீட்டுக்கு  பாலிவுட் பிரபலங்கள் நேற்றும் வந்தனர். அங்கு இருந்த ஸ்ரீதேவியின்  மகள்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தது எப்படி?: குளியல் தொட்டியில் மூழ்கிய நடிகை ஸ்ரீதேவி இறந்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் வௌியாகியுள்ளது.

மது  போதையில் ஸ்ரீதேவி இருந்துள்ளார். அந்த நேரத்தில் ஓட்டல் அறையில் பாத்ரூம்  குளியல் தொட்டியில் விழுந்ததாலேயே நீரில் மூழ்கி இறந்திருக்கிறார் என  பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் அதிகமாக மது  அருந்தி இருந்தாலோ, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு இருந்தாலோ சுயநினைவில்  இருக்க முடியாது. அப்போது உணவு குழாய், சுவாச குழாய் செயல்பாடு வழக்கம் போல்  இருக்காது.

சுவாச குழாய்  வழியாக ஏதாவது நுழைந்தால் அதை இருமல் மூலம்  வெளியேற்ற முயற்சிப்போம்.  ஆனால், சுய நினைவு இழந்த மனிதருக்கு இரும கூட  முடியாது. அப்போது முட்டி அளவு நீரில் மூழ்கினால், அந்த நீர் சுவாச  குழாயில் நுழையும். சிறிதளவு நீர் கூட இறப்புக்கு காரணமாகிவிடும். தேவி  அதுபோல்தான் இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018