தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது ‘தமிழீழம்’ என்ற கொள்கையும் ‘பிரபாகரன்’ என்ற நாமமுமே!

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே ‘சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு’ என்பதாகும். மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் பாதைக்கூடாக நகர்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே தமிழீழம் என்ற கொள்கையும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழ்மக்களை எப்போதும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது.

கட்டுரையின் நோக்கத்திற்காக சற்று பின்நோக்கிச் சென்று வரலாற்றை சுருக்கமாக மீளப் பார்ப்போம். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக்கட்சியினால் ‘சமஷ்டி’ முறைமைக்குள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிந்தைய காலங்களில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க பல ஒப்பந்தங்கள்; சிங்கள அரசாங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டாலும் அவை சிங்கள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன அல்லது கிளித்தெறியப்பட்டன.

மேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல்பரி அரசியல் யாப்பின் 29வது அரசியல் சட்டத்தின் சிறுபிரிவான ‘சிறுபான்மை இனங்களிற்கு பாதகமான முடிவு எடுக்கப்படாது’ என்ற சிறுபாதுகாப்புச்சரத்தும் 1972ம் ஆண்டு அவ் அரசியல் யாப்பை சிங்களப்பேரினவாதம் தூக்கியெறிந்த போது முடிவிற்கு வந்தது. அதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் முக்கிய அரசியல் சரத்துக்களான – இலங்கை என்ற பெயர் சிறிலங்கா என்று பெயர் மாற்றப்பட்டதுடன், சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி, கல்வியில் தரப்படுத்தல் போன்ற அரசியல்யாப்புச் சரத்துக்கள் சிறுபான்மையினங்களின் தேசியக்கோட்பாடு மற்றும் அரசியல் சாசன உரிமைகள் தொடர்பில் எந்தவித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இச்சம்பவம் இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை தமிழ்மக்களிற்கு உணர்த்தி நின்றது.

எனவே தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் தமக்கான அரசியல் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தீர்மானமே ‘சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு’ அமைப்பது என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடைவதற்கான ஆரம்ப செயல் திட்டங்களான ‘அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி தமிழ்த்தேசத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்குதல்’ மற்றும் ‘தனியரசு நோக்கிய சாத்வீக போராட்டங்களை நடத்துதல்’ என எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்து காலங்கடத்தினர். அத்தீர்மானத்தை நோக்கிய முனைப்பை தீவிரப்படுத்தாமல் அன்றைய தமிழ்த்தலைவர்கள் தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக தனியரசுத் தீர்மானத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்.

மேலும் தனியரசே தமிழ்மக்களிற்கான அரசியல் அடைவு என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஆகும். அதை அடைவதற்காக சாத்வீக வழியில் போராடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், தங்களின் அரசியல் இருப்பிற்காகவே செயன்முறையற்ற வழியில் நடந்தனர். அந்நிலையில் தமிழ்மக்களின் அரசியல் ஆணையை நிறைவேற்ற பல விடுதலை இயக்கங்கள் உருவாகி செயற்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சரியான பாதையில் தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திச்சென்றது என்று கூறுவது பொருத்தமானது. அதற்கான தலைமையை வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்திலேயே ஆயுதப்போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒருமுனைப்பில் இலக்கு நோக்கி நகர்ந்தது. விடுதலைப்போருக்காக வீரத்துடன் போராடி 30,000 க்கும் மேற்பட்ட போராளிகள் அளப்பரிய தியாகங்களை செய்து மண்ணுக்காக விதைகுழிக்குள் உறங்குகின்றனர்.

குறிப்பாக ‘நாம் இரந்து கேட்கும் சமூகமாக இருக்கும் வரை எமது அரசியல் உரிமைப்போராட்ட நியாயம் யாருக்கும் எடுபடாது எனவே ஆயுதப்போராட்டத்தை முனைப்புப்படுத்தும் போது சிங்களப்பேரினவாதிகளும, சர்வதேச நாடுகளும், எமக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள்? அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்’ என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி! நிரந்தர அரசியல் தீர்விற்கானதாக இருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் நேரடி, மறைமுக உதவியுடன் பின்னடைவு அடைந்த நிலையில் தற்போதைய காலகட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு கடினமான காலமாக இருக்கின்றது. என்றாலும, தமிழ்மக்களின் போராட்ட நியாயங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விடயமாகவும் தமிழ்மக்களின் மனங்களின் விடுதலையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றது. எனவே தமிழ்மக்களிற்கான தற்போதைய அரசியல் தலைமைகள் காத்திரமான பங்கை வழங்கி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி மக்களை நகர்த்த வேண்டியது அவர்களுக்குரிய முதற்கடமை.

முக்கியமாக பெரும்பான்மை தமிழ்மக்களின் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பதில் தமிழ்மக்களிற்கு மாற்றுக்கருத்து என்றுமிருக்க முடியாது. அதற்காகவே 30,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தினுடாகவே தமிழ்மக்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயங்கள் வலுப்பெற்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான எந்தத் தீர்மானங்களும் கருத்துக்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்ற கோட்பாட்டை கைவிடாமல் அந்த இலக்கை அடையக்கூடிய வகையிலேயே தீர்வுத்திட்டங்களாக இருந்தாலும் அரசியல் நகர்வுகளாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.

தற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான தீர்மானங்களையும், அரசியல் நகர்வையும், சரிவர எடுத்து அடுத்த சந்ததியினருக்கு, விடுதலைத் தீர்மானத்தை சிறிதும் மாறாமல் பெற்றுக்கொடுப்பதோ அன்றி பொறுப்புக்கொடுப்பதாகவோ இருக்கலாமேயன்றி அந்த கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை என்ற கருத்துக்களை விதைப்பதோ அல்ல. தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களும் மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள் (ஒரு வகையில் போராளிகள் என்றும் சொல்லலாம்). இன்றும் அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் இலக்கு தொடர்பில் மாறுபாடில்லாத கருத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.

தாயகத்தில் நடைமுறை அரசு ஒன்றை நிறுவி, 19 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடாத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் இயங்குதளத்தில் செயற்பட முடியாத தற்சமயத்தில் தனது பிரதேசத்திற்கு வெளியே மக்களின் அரசியல் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் வலியுறுத்தியும் மக்களை ஒருங்கிணைத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு நோக்கத்துடன் விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு அமைக்கப்படுவதற்கான எண்ணக்கரு நிலையில் இருப்பது ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ ஆகும். இவ் அரசாங்கமானது தமிழ்மக்களின் அரசியல் கோட்பாட்டை எந்த மாற்றமுமின்றி கடைப்பிடிக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர்.

அவர்களினது தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத்தனியரசு என்ற தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பானது, கோட்பாட்டிற்கான ஆதரவை மீளவலுப்படுத்தி நிற்கின்றது. மேலும் தற்போதைய இளம் சந்ததிக்கு முன்னோர்களின் அரசியல் விடுதலை எண்ணம், ஏக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் அரசியல் விடுதலைக் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாட்டையும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது.

தமிழ்மக்களின் தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமையுள்ள தனியரசு என்ற அரசியல் கோட்பாட்டை இலக்காக வைத்து தங்களின் அரசியல் சாணக்கியத்தால் அடையக்கூடிய அரசியல் தீர்வுகளை அடைய வேண்டுமே தவிர அடிப்படைக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செயற்படுவார்களானால் அது தமிழ்மக்களிற்கு இழைக்கும் மிகப்பெரும் அரசியல் தவறாகும். அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட அரசியல் வரலாற்றில் அம்மக்கள் கடந்தகாலங்களில் ஏமாற்றப்பட்ட சம்பவங்களை நேரடியாகவும் முழுமையாகவும் அறிந்தவர் தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றியிருக்கும் மூத்த அரசியல் தலைவரான திரு சம்பந்தர் அவர்கள். அடிப்படைக் கொள்கையிலிருந்து வழுவாது அதை அடையக்கூடிய சரியான பாதையில் மெதுவாக நகர்த்துவதே அவரின் அரசியல் முதிர்சியின் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.

தளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் இணை அமைப்புக்களும் சரியான முறையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான் செயற்பாடுகளை ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டு, கருத்து பேதங்களை விடுத்து, சிறப்பாக செயற்பட வேண்டும் என தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கின்றது. முக்கியமாக இவ் இரு தளத்திலுள்ள இரு அமைப்புகளும் சரியான தொடர்பாடலுடன் சரியான திட்டங்களை வகுத்து இரு தண்டவாளங்களில் செல்லும் ஒரு புகைவண்டியைப்போல தமிழ்மக்களின் அரசியல் விடுதலை இலட்சியத்தை நகர்த்தவேண்டும்.

தற்போதைய சூழலைப்பொறுத்தவரையில் தலைவர் சுதுமலைப்பிரகடனத்தில் தெரிவித்ததைப் போன்று ‘போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது’ என்ற தத்துவ வரிகளிற்கு அமைவாக தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டு எழும் காலம் வரும் வரை, சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் சூழல்களை வெல்ல ஜனநாயக, அரசியல், ராஜதந்திர வழிகளினூடாக தமிழர்களின் இலட்சியம் நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்.

இது தலைமுறைக்கான போராட்டம். இளம் தலைமுறைக்கு விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, அரசியல் கருத்தூட்டல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைகளிற்கு போராட்ட உணர்வுகள் மருவாது பாதுகாக்க வேண்டும். அதேவேளை ஒன்றுபட்டிருக்கும் அவர்களது உணர்வுகளும் ஆதரவும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு தேசவிடுதலை நோக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.

இஸ்ரேலிய மக்கள் தமது தாயகவிடுதலையை வென்றெடுக்க புலம்பெயர் தேசங்களில் இருந்த யூதர்களை ஒன்றிணைத்து போராடி வென்ற சம்பவத்தை கூறும் ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்ற விடுதலை வரலாற்றைப்போல, தமிழ்மக்களின் விடுதலைக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து ‘ஈழவிடுதலை நோக்கிய பயணம்’ அவசியமாகும் காலம் வரலாம் என கருதாமலும் இருந்து விட முடியாது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விடுதலைக்காக தியாகம் செய்யக்கூடிய மக்கள் சமூகத்தை கட்டி வளர்த்தெடுப்பது இப்பணிகளை முன்னெடுப்போரின் முதன்மையான கடமையாகும்.

‘இறைமையுள்ள தனியரசு’ என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும்.

அபிஷேகா

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019