கண்டிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடாத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்காக வேண்டி அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக இந்த வன்செயல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும், சம்பவம் தொடர்பில் ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தகவல்கள் எழுத்து மூலம் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
விடயங்களைத் தெரிவிக்கும் போது சம்பவம் குறித்த தினம், இடம், நேரம், பெயர், நிறுவனத்தின் பெயர் என்பவற்றைக் குறிப்பிட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களுடன் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும், குரல் பதிவுகளையும் முன்வைக்கலாம். எழுத்து மூலத் தகவல்கள் 3 பக்கங்களுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
இந்த தகவல்கள் அனைத்தையும், இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் கண்டியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.