இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் ஒன்றை தாம் முன்வைத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சில், நவீன முறைப்பாட்டு மையத்தை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் யாப்பின் நான்காம் அத்தியாயத்தில் 18ம் சரத்தின் 1ம் பிரிவில் சிங்கள மொழி, இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்றும், 18ம் சரத்தின் இரண்டாம் பிரிவில் தமிழ் மொழியும் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளையும் ஒன்றாக்கி, சிங்களமும் தமிழும் இலங்கையில் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்று மாற்றப்படும் வகையில் திருத்தத்தை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஏலவே புதிய அரசியல் யாப்புக்காக தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனையிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதற்கு காலம் எடுக்கும் என்பதாலும், உடனடியாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாலும் தாம் இந்த யோசனையை முன்வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.