தேசியத் தலைவரும் பெண்ணியமும் – அண்ணையும் அன்னையுமாய்…..

பொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனவுலகில் பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப்போவதில்லை.”

– தேசியத்தலைவர்

பெண்ணியம் என்பது பல இடங்களில் பேசுபொருளாக மட்டுமே இருக்கையில் போர்க்களத்திலும் பெண்களுக்குச் சம உரிமை வழங்கி, அவர்களை உலகறியச் செய்த பெருமை தேசியத் தலைவரையே சாரும்.பெண் விடுதலையே இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்பதை வலியுறுத்தியதோடல்லாமல் செயலிலும் காட்டியவர்.

தலைமைத்துவம் என்பது அசாதாரணமான ஒரு விடயத்தை நிகழ்த்திக் காட்டும் பொருட்டு மக்கள் பங்களிப்பதற்கான வழியை உருவாக்குதல் தொடர்பானதே ” என ஆலன் கீத் என்பவர் கூறுகின்றார்.

தலைமைத்துவம் என்பது எளிதானவொன்றல்ல. ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதைச் சரியான வகையில் நிர்வகிப்பது மட்டுமன்றித் தொலைநோக்குப் பார்வையுடன் நிலையான மேம்பாட்டை உருவாக்கும் மாற்றத்தைத் தொடக்குவதுமாகும்.மக்கள் பங்களிக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கத்தில் பெண்களுக்கும் சமவுரிமை வழங்கி மாற்றத்தை தொடங்கிய பெண்ணியவாதி நம் தலைவர்.தலைவன் என்ற சொல்லுக்குத் தனியான பொருளாய் இருப்பதன் காரணம் இந்த தொலைநோக்குப் பார்வையும், எதிரியும் தலைவணங்கும் பரந்துபட்ட பன்முகப் பண்புகளுமாகும்.

பெண்ணுரிமை,பெண்ணியம் என்பதெல்லாம் சம உரிமைக்கான குரல்கள்தான்.இது பெண்களுக்காக பெண்கள்தான் எழுப்ப வேண்டுமென்பதில்லை. ஆண்களாலும் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டே பெண்களை அடுப்பங்கரையிலிருந்து மீட்டுக் களத் துடிப்பை உணரச்செய்த தேசியத் தலைவரின் தொலைநோக்குப் பார்வைதான்.

பெண்விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்பதையும் பெண்கள் விடுதலை பெறாமல் தேச விடுதலையும் முழுமை பெறாது என்பதையும் ஆணித்தரமாக நம்பியதால்தான் மகளிர் அமைப்பைத் தொடங்கி தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தினார்.”பெண் விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை ” என்று பெருமிதம் கொண்டவர் தேசியத் தலைவர்.

நள்ளிரவில் பெண்கள் தனியே நடமாடும் நிலை வந்தாலே இந்தியா சுதந்திரம் பெற்றதாகும் எனக் காந்தி கூறினார். ஆனால் தமிழீழத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெண்களால் தனியே நடமாட முடிந்தமை ஒருபுறம் பெருமை என்றால் விடுதலைக்காக நள்ளிரவில் பெண்கள் வீறுடன் நடை போட்டது அதனிலும் சிறந்ததாகும்.

பெண்கள் போராட்டத்தில் உள்வாங்கப்பட்டமை அதற்கு முன் நிகழ்ந்திருப்பினும் 1985 ஆவணி 18 இல் பெண் புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கி வைக்கப்பட்டது. தம்மை இணைத்துக்கொண்ட பெண்கள், விடுதலை இயக்கத்தின் அனைத்து வேலைத் திட்டங்களிலும் சிறந்தவர்களாக வலம் வந்தனர்.

விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பானது ஆண்களுக்குச் சிறிதும் குறைவின்றியே இருந்தது. அதிகாரமட்டத்தின் உயர் பொறுப்புகளை பெண்கள் வகித்தனர். கரும்புலிகளாக,கடற் புலிகளாக, தரைப்படையாக, புலனாய்வுப் பிரிவினராக, அரசியல், நீதி, நிதி நிர்வாகம்,காவல்துறை, மருத்துவம், ஈரூடக தாக்குதல் அணி, படகு கட்டுமானத் துறை, நிதர்சனப் பிரிவு, புகைப்படப் பிரிவு என்பவற்றிலும் வியத்தகு வகையில் வளர்ந்திருந்தனர்.

பெண் போராளிகள் பதுங்கு குழிகளை வெட்டுதல், காப்பரண்கள் அமைத்தல், கனரக வாகனங்கள் இயக்குதல், சண்டைப் படகுகள், விநியோகப் படகுகளை வடிவமைத்தல் உள்ளிட்ட மிகவும் கடினமான வேலைகளையெல்லாம் சளைக்காமல் செய்தார்கள்.சவால் நிறைந்த ஆயுதங்களையும், சண்டைப் படகுகளையும் இயக்கி எதிரிகளை வெற்றி கண்டு ஈழப்போரின் வீர வரலாற்றுப் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர் பெண் போராளிகள்.

“பெண்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒரு ஆற்றலை உருவாக்கி பெண்மை அதன் தன்மையில் ஆண்களோடு மாறுபட்டிருப்பினும் அது ஆண்மைக்கு நிகரானது என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதே பெண்ணியம் “என செயின் என்பவர் கூறுகின்றார்.

பெண்களின் வீரம் ஆண்களுக்கு நிகராகவும் சில சமயங்களில் அதற்கு அதிகமாகவும் நிரூபிக்கப்பட்டிருப்பதில் ஒரு அண்ணையாகப் பெருமிதம் கொண்டவராக இருப்பினும் உடல் அமைப்பின்படி பெண்களது உடல் நலனிலும் அன்னையாக அக்கறை காட்டினார். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை கடற்படைக்குரிய பிரிவொன்றிற்குச் சென்றபோது அங்கே படகுகளில் வந்திறங்கிய பொருட்களைப் பெண் போராளிகள் தூக்கிச் செல்வதை அவதானித்தார். ஒவ்வொரு பெட்டியும் 48 கிலோ எடையுள்ளவை. ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு பெட்டியைச் சுமந்து செல்வதை அவதானித்த தலைவர் அதற்குப் பொறுப்பானவரை அழைத்து ” பெண்களால் ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதை நமது போராட்டங்களின் மூலம் புரியவைத்தவர்கள் நாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அத்தகைய வெற்றியைப் பெற்றுத்தந்த பெண்கள் நலனில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களா? பெண்களிற்கு மாதவிடாய் தொடர்பான சிக்கல்கள் இருக்கின்றது. அப்படி இருக்கையில் இத்தகைய எடையை நெருக்கடியான சூழல் அல்லாத இந்த நிலையில் தனியே சுமந்து செல்ல ஏன் அனுமதித்தீர்கள். ” என்று கூறினார்.

அதுமட்டுமன்றிப் பெண்கள் தொடர்பான பொருட்களைக் கொள்வனவு செய்வதிலும்கூட அவர் அன்னைக்கு நிகரானவர் என்பதை உணர்த்திடத் தவறவில்லை. மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் பெண்கள் உபயோகிக்கும் சில பொருட்களை அத்துறைக்குரியவர்கள் கொள்வனவு செய்தபின்னர் அதைச் சரிபார்க்கத் தம் துணைவியாரையும் அழைத்து வருவார். கடலில் நீரில் செல்லும் பெண்களுக்கும், நீண்ட பயணம் மேற்கொள்பவர்களுக்கும்,களப் பணி ஆற்றுபவர்களுக்கும் ஏற்ற வகையில் உள்ளதா என அவரது துணைவியாரால் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர் செல்வது வழக்கம். தலைமைத்துவத்தில் ஓர் அன்னைக்குரிய அக்கறையும் அவசியம் என்பதைச் செயலால் உணர்த்திய பெருமை அவரையே சாரும்.

அதுபோன்று முக்கிய பொறுப்பாளர்களுக்குரிய கூட்டம் ஒன்றில் பெண் பொறுப்பாளர் ஒருவர் நிறைமாதத்தில் பங்கேற்றிருந்தார்.அக்கூட்டத்தை ஒழுங்கமைத்த தளபதியை அழைத்துத் தலைவர் கடிந்துள்ளார். பின்னர்தான் அத்தளபதிக்கு விடயம் புரிந்தது. அனைவருக்கும் நேராக உள்ள இருக்கை போடப்பட்டிருந்தது. அந்தக் கர்ப்பிணிப் பெண் நேராகவுள்ள இருக்கையில் சிரமத்தோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒழுங்கமைத்தவரைத் தலைவர் கடிந்து கொண்டார். அதன் பின்னர் அப்பெண்ணிற்கு சாய்வாக அமரக்கூடிய நாற்காலி வழங்கப்பட்டது. தலைமை என்பது எதிரில் உள்ளவரின் நலனிலும் அக்கறை செலுத்துதல் என்பதில் தனிக் கவனம் செலுத்தியவர் தலைவர்.

தமிழ்ப் பெண்கள் என்ற கண்ணோட்டத்தோடல்லாது எவராக இருப்பினும் பெண்மை என்பதற்கு மதிப்பளித்தவர் தலைவர். ஈழப் போராளிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்திலுள்ளவரைப் பார்க்க வந்த அவரது மனைவி காலதாமதம் ஆனதால் தன் கணவனோடு அன்றிரவு தங்க நேர்ந்தது. அங்கிருந்து சென்ற அந்தப் பெண் சிறிது காலத்தில் தலைவருக்குக் கடிதம் எழுதினார். தன் கணவனுடன் தங்கியதால் கருவுற்றிருப்பதாகவும், தன் கணவர் சிறை வைக்கப்பட்டிருப்பதால் தான் கருவுற்றதை அறிந்தால் பிறர் தன் நடத்தையில் சந்தேகம் கொள்வார்கள் என்றும் தன் இக்கட்டான சூழ்நிலையைத் தீர்த்து வைக்குமாறும் எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் படித்த தலைவர் அந்தப் பெண்ணின் கணவனை விடுதலை செய்தார். தன் பகைவன் வீட்டுப் பெண்ணிற்கும் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த இவர் பெண்மையைப் போற்றும் சிறந்த தலைவராவார்.

கட்டுநாயக்கா தாக்குதல் தொடர்பான கலந்தாலோசனையின்போதும் போராளிகளிடத்தில் ” தாக்குதலின்போது இராணுவத் தளபதிகளின் மனைவிகள், குழந்தைகள் அங்கிருப்பின் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்தான் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் . தமது துணைவர்களது பணியினால் ஏதுமறியா இப்பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது. எமது போராட்ட வரலாற்றில் எந்தக் களங்கமும் வந்துவிடக்கூடாது. அறத்திற்குப் புறம்பான முறையில் போரிட்டோம் என்பதாக எம் வரலாறு இருத்தல் கூடாது” என்று கூறியிருக்கின்றார்.

தலைவர் மட்டுமன்றி அவரது வழிகாட்டலில் போராடும் ஒவ்வொரு போராளியும் ஒழுக்கமானவர்களாக, பெண்களை மதிப்பவர்களாகவே ஆளாக்கப்பட்டனர். ” இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு ஓர் இரவில் தனியாக இருந்தேன். ஒரு நொடிப் பொழுது கூட பெண் என்ற பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை. தம்பிகளுக்கும் தனது ஒழுக்க நெறிகளை விதைத்தவர் பிரபாகரன், எந்த விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமின்றி சொல்கிறேன் உன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள்.”என்கின்றார் தலைவரின் முதலாவது பேட்டியை 1984இல் எடுத்த பிரபல பெண் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்.

நம் மக்களைச் சிங்களவர்கள் அழிக்கின்றபோது நம் பெண்களைச் சிதைக்கின்றபோது நாம் ஏன் அவர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற கேள்விகள் எழுந்தபோதுகூட உரிமைக்கான போரில் அநியாயமாகப் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்வது அறமல்ல என்ற கொள்கையைக் கடைப்பிடித்தவர்.

மேலே கூறப்பட்டவை சில சான்றுகளே. அவர் சிறந்த பெண்ணியவாதி என்பதற்கான பல சான்றுகள் இன்னும் உள்ளது. மகளிரணியை அமைத்தது மட்டுமன்றித் திறம்பட நிர்வகித்தமை அவரது பெண்ணியச் சிந்தனைக்குக் கட்டியம் கூறுகின்றது.

பெண்ணியம் என்ற பேச்சு எங்கெல்லாம் எழுகின்றதோ அங்கெல்லாம் ஈழப்பெண் போராளிகளும் அவர்களுக்குச் சமவுரிமை வழங்கிய தேசியத் தலைவரும்

நினைவுக்கு வருவார்கள் என்பதில் ஐயமில்லை.


★தமிழினி★

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019