தூத்துக்குடி இனப்படுகொலையை மறைக்கும் நோக்கில் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களையெல்லாம் கைது செய்யும் அராஜகம்!

முதன்முதலில் கைது செய்து சிறையிலடைத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்களை அடுத்ததாக  தேச துரோக வழக்கிலும் கைது செய்த கொடூரம்!

மத்திய அரசின் கைக்கூலியாய் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்திருக்கும் அதிமுக எடப்பாடிபழனிசாமி அரசை  வன்மையாகக் கண்டிக்கவும் எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

நாசகார தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிய 100ஆவது நாள் போராட்டத்தில் ஓர் இனப்படுகொலையையே நிகழ்த்தியது காவல்துறை!

அதில் பலியானோரின் குடும்பத்தினர் மற்றும் குண்டடி பட்டு மருத்துவமனையில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் கூறச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை அங்கு செல்லவிடாமல் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைத் தாக்கியதாக பொய்வழக்கு புனைந்து, திருக்கோவிலூர் உரிமையியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் 15 நாள் காவலில் வைத்தது அதிமுக அரசு.

கடந்த 25ந் தேதியன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய மறுகணமே, “துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்; துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தலைமைச்செயலர் உள்ளிட்டவர்களை கைது செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுத்துவதோடு, மொத்த சம்பவத்துக்கும் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி, சிறையிலும் அதனைத் தொடர்ந்தார் தலைவர்.

உண்ணாநிலைப் போராட்டத்தின் நான்காம் நாளன்று அவரை சந்தித்த மதிமுக தலைவர் கேட்டுகொண்டதையடுத்து உண்ணாநிலையை முடித்துக்கொண்டார்.

ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் பெயில் மனு போடப்பட்டு, அது நேற்று விசாரிக்கப்பட இருந்த நிலையில், விசாரிக்காமல், முன்கூட்டியே அரசுத் தரப்பு கூறியிருந்ததை ஏற்றாற்போல், வரும் ஜூன் 4ந் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்!

அதன்பின், கடந்த 10ந் தேதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நெய்வேலியில் என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, தேச துரோக வழக்கிலும் இன்று தலைவரை மருத்துவமனையில் வைத்தே கைது செய்தது காவல்துறை.

இந்த தேச துரோக வழக்கு நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி பொய்வழக்குக்கு மேல் பொய்வழக்கைப் போட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரைக் கைது செய்து அவரை சிறையிலேயே தொடர்ந்து வைத்திருக்க முயல்வது, தூத்துக்குடியில் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை மறைக்கவும் அங்கு கட்டவிழ்த்திருக்கும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும் அன்றி வேறில்லை.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைப் பற்றி கேட்டதற்கு முதல்வர் சொன்ன பதில் “தெரியாதே” என்பதுதான்.

மறுநாள் தூத்துக்குடியில் எங்கும் மரண ஓலமே கேட்டுக்கொண்டிருந்தபோது, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா தனக்கான உணவை தானே தேர்வு செய்திருந்த உணவுப் பட்டியலை வெளியிட்டு மக்களின் கவனத்தை தூத்துக்குடியினின்றும் திசைதிருப்பப் பார்த்தது பழனிசாமி அரசு.

கவலைக்கிடமாகப் படுத்திருக்கும் நோயாளிக்கு இன்ன உணவைக் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிக்காமல், அந்த நோயாளியே தீர்மானித்துக்கொள்ளும் விந்தை உலகில் எங்காவது நடக்குமா?

அடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர், பாதிக்கப்பட்டோரை விசாரித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தூத்துக்குடிக்கு அனுப்பினார்கள்.

ஆனால் அச்சமயம் ஊடகத்தினருக்கு அனுமதியில்லை.

போன வேகத்தில் திரும்பி வந்தார் ஓபிஎஸ்; காரணம், “ஸ்டெர்லைட்டை மூடுவதை விட்டு இங்கு ஏன் வருகிறீர்கள்” என்று அங்கு அவரை மக்கள் கேள்வி கேட்டதுதான்.

அடுத்த நாள் சட்டமன்றக் கூட்டம்; அதில் ஸ்டெர்லைட்டை மூடுவதாக அரசானையை வெளியிட்டு, அதை ஆலையின் சுவரில் ஒட்டி, ஆலைக்கு சீலும் வைத்தார்கள்.

அதேநேரம், இது ஒரு போலி அரசாணை என்பதை அதிமுக, பாஜக தவிர அத்தனை கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.

ஆனால் முதல்வர், இந்த அரசானை செல்லும் என்றார் சட்டமன்றத்தில். அடுத்த ஐந்தாவது நிமிடம், ஸ்டெர்லைட் ஓனர் அனில் அகர்வால், உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்று ஆலையை மீண்டும் திறப்போம் என்றார்.

இதில் யார் சொல்வது உண்மை?               

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால் அதனை மூட வேண்டும் என்று 2010ல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது; ஆனால் அதன்படி ஆலையை மூடவில்லை; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 2013ல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கியது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

பிறகு ஸ்டெர்லைட்டில் நச்சுப்புகை வெளியாகி 3 பேர் மாண்டுபோயினர். இது 2013ல் நடந்தது. இதற்காக, இப்போது சீல் வைத்ததைப் போலவே அப்போது ஜெயலலிதா அரசு சீல் வைத்தது. ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைப் பெற்று ஆலையை திறந்தது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.

ஆகவேதான் சொல்கிறோம் எடப்பாடி பழனிசாமி அரசு ஸ்டெர்லைட்டை மூடி சீல் வைப்பதாக இப்போது அரசாணை பிறப்பித்திருப்பதும் கபட நாடகம்தான் என்று.

அதோடு, சட்டமன்றத்தில் படித்த அறிக்கையிலாவது துப்பாக்கிச் சூடு நடந்ததைக் குறிப்பிட்டாரா என்றால் அதுவும் இல்லை. சமூக விரோதிகள், கலவரம், போலீஸ் நடவடிக்கை, கீதா ஜீவன் காரணம் என்று உண்மைக்கு மாறானதை சட்டமன்றத்தில் பேசி அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக முதல்வரே குற்றமிழைத்தவராகியிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடே நடக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரி ஆகியோர் ஏன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்?

அவர்களைப் பணிநீக்கமே செய்திருக்க வேண்டும்; கைது செய்து கொலை வழக்கும் அவர்கள் மீது பதிவு செய்திருக்க வேண்டும்; ஆனால் அப்படிச் செய்யவில்லை.

காரணம், நடந்தவை அனைத்தும் மத்திய உள்துறை வகுத்துத் தந்தபடிதான்.

மத்திய உள்துறை, தமிழக காவல்துறைத் தலைவர், தமிழக தலைமைச் செயலர் மூவரும் ஸ்டெர்லைட் சார்பில் எடுத்த முடிவு மற்றும் தயாரித்த அறிக்கையையே முதல்வர் சட்டமன்றத்திலும் வைத்தார்!

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதற்குத்தான் துப்பாக்கிச் சூடு நடந்ததைப் பற்றியே குறிப்பிடவில்லை முதல்வர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இத்தனை நாட்களாக பதில் சொல்லாமல் இருந்துவிட்டு இப்போது துணை வட்டாட்சியர்தான் உத்தரவிட்டார் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர், காவல்துறைத் தலைவர், தலைமைச் செயலர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்தவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இவர்கள்தான் துப்பாக்கிச் சூட்டிற்கு பதில் சொல்லவேண்டியவர்கள்; ஏனென்றால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின்படி அதை அரங்கேற்றியவர்கள் இவர்கள்தான்; ஆனால் வட்டாட்சியரை பலிகடாவாக்கியிருக்கின்றனர்.

மத்திய அரசின் சொல்படி கேட்டு, ஸ்டெர்லைட் வேதாந்தா கார்ப்பொரேட் நிறுவனத்தின் கையாளாக எடப்பாடி பழனிசாமி அரசும் அதன் காவல்துறையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருப்பதுதான் முதல்வரின் சட்டமன்ற அறிக்கை மூலம் ஒளிக்க முடியாதபடி தெளிவாகிறது.

துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது; ஆனால் அதற்கு மேலும் பலி எண்ணிக்கை இருக்கும் என்பதுதான் தூத்துக்குடி சொல்லும் உண்மை.

 13 பேரின் உடல்களை பதப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவற்றை பிரேத பரிசோதனை செய்வது குறித்த வழக்கில், 7 பேர் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்; 3 மருத்துவர்கள் அடங்கிய குழு அதை மேற்கொள்ள வேண்டும்; எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும்; பிரேத பரிசோதனையை வீடியோப் பதிவும் செய்ய வேண்டும் என்று கூறி ஜூன் 6ந் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவர் இல்லையென்றால் தடயங்கள் அழிக்கப்படும் என மனுதாரர் வாதாடியதால், எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று உத்தரவை மாற்றிப் பிறப்பித்தனர் நீதிபதிகள்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, நாட்டின் உயர் அமைப்புகள், நீதிமன்றம், ஊடகம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்தையுமே தன் ஆக்டோபஸ் கரங்களால் வளைத்துவிட்டிருக்கிறது மத்திய பாஜக மோடி அரசு என்பதுதான்.

எனவேதான் ஒரு சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பு மற்றும் விசாரணை ஆணையம் மூலமே இந்த இனப்படுகொலை சதித்திட்டம் விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம்
யாழ். கொக்குவில்
கனடா
05 JAN 2019
Pub.Date: January 8, 2019