“மோசடி”யின் மறுபெயர்தான் “வளர்ச்சி” என்பதற்கு மற்றுமொரு உதாரணம் சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம்!

தங்கள் வாழ்வாதாரங்களை அழித்து கார்ப்பொரேட்டுகளுக்காகவே இந்த “வளர்ச்சி” என்பதாலேயே இதற்கெதிராக மக்களின் போராட்டம்!

இதைத் தெரிந்தும் தெரியாததுபோல் தீமைக்கே துணைபோகும் முதல்வரை உடனடியாக இந்தத் திட்டத்தினை திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறது       தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

அண்மையில் சென்னையில் துறைமுகங்களின் செயல்பாடு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டம் பற்றி செய்தியாளர்களிடம் நிதின் கட்கரி விளக்கமளித்தார்.

அதாவது, ”நாட்டின் முதல் பசுமை விரைவுச் சாலை மகாராஷ்டிர மாநிலம் மும்பை - புனே இடையே அமைக்கப்பட்டது. அதற்கடுத்து தமிழகத்தில் சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. 8 வழிப் பாதையான இது திருவண்ணாமலை, அரூர் வழியாகச் செல்லும். இதன்மூலம் சென்னை - சேலம் இடையே 60 கிமீ தொலைவு மிச்சமாகும்; பயண நேரம் 6 மணியிலிருந்து 3 மணியாகக் குறையும். இன்னும் 2 மாதங்களில் பணி தொடங்கும்.”

இது தவிர, கரூர் - கோவை, மேலூர் - தஞ்சாவூர், மதுரை - தனுஷ்கோடி, மாமல்லபுரம் - புதுச்சேரி உள்ளிட்ட 6 வழித் தடங்களில் பசுமைச் சாலைகள், வட்டச் சாலைகள் அமைக்கவும் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

சென்னை - பெங்களூரு இடையே விரைவுச் சாலை அமைக்கும் பணி நிலம் கையகப்படுத்தப்பட்டதும் டெண்டர் விடப்படும் என்றார்.

நிதின் கட்கரி அறிவித்த சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது, அந்த நிலங்கள் யாவுமே விளைநிலங்கள்!

அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

விளைநிலங்களைக் கையகப்படுத்தி, வாழ்வாதாரங்களை அழிக்கும் இந்தத் திட்டம் தேவையில்லை; ஒருபோதும் இதற்கு அனுமதியோம் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக, இந்த சென்னை - சேலம் 8 வழிச் சாலை எதிர்ப்புப் போராட்டமும் இப்போது தமிழ்மண்ணில் மோடி அரசு திணித்த பல்வேறு பிரச்சனைகளில் ஒன்றாகத் தொடர்கிறது.

உச்ச நீதிமன்றம் பலமுறை கெடு விதித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரிப் படுகையை அறிவிக்கக் கோரினால், அதனைப் பலைவனமாக்கியே தீருவேன் என பெட்ரோலிய மண்டலம் அறிவிக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையை முழு கொள்ளளவுக்கு உயர்த்தச் சொன்னால், அந்த அணைக்கே வேட்டு வைக்க, அதனை ஒட்டிய மேற்கு மலையில் நியூட்ரினோ திட்டம் திணிக்கப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லிக்கொண்டே கூடங்குளத்தில் அணுவுலைப் பூங்காவுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது.

நாட்டைத் தாக்க வருபவன் அணுவுலைகளைப் பார்த்துத்தானே குண்டு போடுவான்; அப்படிப் போட்டு பூண்டோடு தமிழகமே அழியட்டும் என்பதுதானே மத்திய அரசின் எண்ணம்?

நீட் தேர்வைத் திணித்து தமிழக மாணவர்கள் மருத்துவமே படிக்கக்கூடாது என்று செய்யப்படுகிறது.

காவிரி நீரின்றி விவசாயம் விழுந்து கடன்பட்டு மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்துகொண்டும் விவசாயி சாகிறானே, அவன் கடனைத் தள்ளுபடி செய் என்று இன்றுவரை போராட்டம் தொடர்கிறதே, ஏற்கப்பட்டதா கோரிக்கை?

ஒக்கி புயல் வந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் மடிந்தனர்; நூற்றுக்கணக்கானோரை இன்றுவரை காணவில்லை; இதில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

சென்னையில் வெள்ளம் வந்து பெரிய அளவில் அழிவு ஏற்பட்டது; எந்த நிவாரண நிதியும் தரவில்லையே மத்திய அரசு!

2016ல் புயல் வந்து சென்னையின் பல பகுதிகளை சிதைத்துப் போட்டதே, அதற்கு நிவாரண நிதி உண்டா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மோடி பிரதமரானதிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டதே!

இதற்கெல்லாம் எந்த பதிலுமில்லை; ஆனால் 8 வழி பசுமைச் சாலை அமைக்கிறார்களாம்; அதனால் பெரிய வளர்ச்சி ஏற்படும், அதிக நன்மை ஏற்படும் என்று வாய்கூசாமல் சொல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

கார்ப்பொரேட்டுகளின் வளர்ச்சிக்காகவே இந்த திட்டம் என்பது தெரிந்தும் தெரியாததுபோல் தீமைக்குத் துணைபோகிறாரே முதல்வர்!

தமிழ்நாட்டில் தமிழர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்றுதானே பிரதமர் விரும்ப வேண்டும், அதற்குரியதைச் செய்ய வேண்டும்!

ஆனால் அதையெல்லாம் செய்யாமல், வாழ்வாதாரங்களையெல்லாம் அழித்து பெரிய அளவில் ரோடு போடுவேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்!

கவிஞரின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது: “கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே...”

போற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் பிரதமரும் சரி, முதல்வரும் சரி; ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல் அழிமாட்ட வேலைகளைச் செய்ய முனைந்திருக்கின்றனர்.

அதாவது கார்ப்பொரேட்டுகளின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டையே ராணுவமயமக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அப்படி ராணுவமயமாக்குவதன் ஒரு பகுதிதான் இந்த சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் என்றால் அதை மறுக்க முடியுமா?. 

கார்ப்பொரேட்டுகளின் சரக்குப் போக்குவரத்திற்காக இந்தியத் துறைமுகங்கள் அனைத்தையும் நீர் வழிகள் மற்றும் உள்நாட்டு சாலைகளோடு இணைக்கும் சாகர் மாலா (கடல் மாலை) திட்டத்தின்படியான திட்டம்!

சாகர் மாலா அதாவது கடல் மாலை என்பது நாட்டைச் சுற்றிய பாதுகாப்பு வளையம் என்று பொருளாகும்; பாதுகாப்பு ராணுவமயத்தால்தானே சாத்தியமாகும்?

ராணுவமயம் எனும்போது அங்கு மக்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு ஏது உத்தரவாதம்?

வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ்காரன் நாட்டை ராணுவமயப்படுத்தித்தான் ஆதிக்கம் செலுத்தினான். மக்கள் நிம்மதியாக வாழமுடியாமல் போனதால்தானே சுதந்திரத்திற்காகப் போராட வேண்டியிருந்தது!

ஆகவே கார்ப்பொரேட்டுகளே முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் தமிழகத்தை ராணுவமயமாக்கியாக வேண்டும்.

அதைத்தான் செய்ய முனைந்திருக்கிறார் மோடி!

அதற்காக கார்ப்பொரேட்டுகளால் களமிறக்கப்பட்டவர்தான் மோடி!

அதற்குத்தான் வளர்ச்சி என்ற நாமகரணம்!

ஆக, ”மோசடி”யின் மறுபெயர்தான் ”வளர்ச்சி”!

இதற்கு மற்றுமொரு உதாரணம்தான் சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டம்!

தங்கள் வாழ்வாதாரங்களை அழித்து கார்ப்பொரேட்டுகளுக்காகவே இந்த "வளர்ச்சி” என்பதாலேயே இதற்கெதிராக மக்கள் இன்று கிளர்ந்தெழுந்துள்ளனர்; ஆக்ரோஷமகப் போராடுகின்றனர்!

ஆனால் மோடிக்குத் துணைபோகும் எடப்பாடி பழனிசாமி இதனால் நன்மை விளையும் என்று வாய்கூசாமல் பேசுகிறார்!

இப்படி தெரிந்தும் தெரியாததுபோல் தீமைக்கே துணைபோகும் முதல்வரை உடனடியாக இந்தத் திட்டத்தினை திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019