விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் பலரும் பல்வேறுபட்ட தருணங்களில் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.ராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா ஆகிய பல ஈழ ஆதரவு தலைவர்களும், விடுதலை புலிகளின் தலைவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
அந்த வகையில், தாமும் விடுதலைப் புலிகளின் தலைவரை சந்தித்தாகவும், அவ்வாறு சந்திக்க செல்கையில் நேர்ந்த அனுபவங்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவ்வப்போது தனது கட்சி மேடைகளில் தெரிவித்து வந்தார்.
அவ்வாறு அவர் தெரிவித்த சில தகவல்கள் ( ஆமைக்கறி, அரிசி அளவு குண்டைகொண்டு இயங்கும் ஏ.கே 74 துப்பாக்கி ) அதிகப்படியான விமர்சனங்களுக்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில், அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க கூடிய வகையில் நேர்காணல் ஒன்றில் சில விடயங்களை தெரிவித்துள்ளார் சீமான்.
"சீமான் அங்கு போனார்; போகவில்லை; சாப்பிட்டார்; சாப்பிடவில்லை, ஆமைக்கறி சுட்டார்; சுடவில்லை, கடலில் போனார்; கப்பலில் போனார்' என்பதெல்லாம் இப்போது அவசியமில்லாத பேச்சு. ஈழத்தைவிட பேராபத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அங்கு அழித்து ஒழித்தார்கள். இங்கு ஆக்கிரமித்து ஒழிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த மக்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். என்னை இப்போது விமர்சிப்பவர்களால்தாம் நான் வளர்க்கப்பட்டேன். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நடந்தது என்ன என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும். இதைப் பற்றி ஒன்று நான் சொல்ல வேண்டும் அல்லது அவர் (பிரபாகரன்) சொல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சீமான், புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி உலகத்தமிழர்களிடமிருந்து பணம் வசூலிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.