ஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க வல்லரசும் - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

இவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி எட்டாவது (38வது) கூட்டத் தொடர் பற்றியும், இச் சபையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட அமெரிக்க வல்லரசு பற்றிய ஓர் பார்வையை இக் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஐ.நா. மனித உரிமைசபை 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவே மிக நீண்டகாலமாக நடைமுறையிலிருந்து வந்துள்ளது.

இவ் மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில், உலகில் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்ட, பாதிக்கபட்ட மக்கள் நம்பிக்கை இழந்து வந்த காரணத்தினால் முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனானினால் ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவிற்குப் பதிலாக ஐ.நா. மனித உரிமை சபை உருவாக்கப்பட்டது. இவ் மனித உரிமை சபை ஆரம்பிக்கப்பட்ட 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் குடியரசு கட்சியை சார்ந்த ஜோச் புஷ் ஜனாதிபதியாக திகழ்ந்தார். புஷ் மனித உரிமை சபை உருவாகுவதை விரும்பவில்லை.

இதேவேளை இவர் அமெரிக்க ஜனாதிபதியாக கடமையிலிருக்கும் வரை ஐ.நா மனித உரிமை சபையை அமெரிக்கர் பகிஷ்கரித்து வந்துள்ளார்கள் என்பது சரித்திரம். ஆனால், 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பாக ஜனாதியாக தெரிவு செய்யப்பட்ட ஒபாமா, மனித உரிமை சபையில் தமது நாடு பங்களிக்க வேண்டுமென மிகவும் ஆர்வம் கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா முதல் தடவையாக ஐ.நா. மனித உரிமை சபையின் செயற்பாடுகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தது.

சுருக்கமாகக் கூறுவதனால் மனித உரிமை சபையில் அமெரிக்காவின் பங்கு என்பது அமெரிக்காவில் உள்ள அரசியல் கட்சிகளான குடியரசு, ஜனநாயக கட்சிகளிற்கு இடையிலான கொள்கை மோதல் என்பதே உண்மை.

அமெரிக்கா தனது செயற்பாடுகளை மனித உரிமை சபையிலிருந்து விலக்கி கொண்டது பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களிற்கு, அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களிற்கு சாதகமா அல்லது பாதகமா என்பதைப் பார்ப்பதற்கு முன் உலக அரங்கில் தற்போதைய அமெரிக்காவின் பங்கு பற்றிப் பார்ப்பது மிகவும் அவசியம்.

உலக அரங்கில் அமெரிக்கா

அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2017ஆம் ஆண்டு டொனால்ட்ரம் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கு முதன்மை அல்லது முதலிடம் என்ற அடிப்படையில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியான ட்ரம் உலகின் பல விடயங்களில் நட்பு, தோழமை ஆகியவற்றை நிராகரித்து பகைமை அல்லது ஒத்துழையாமையை வளர்த்துக் கொண்டார்.

ட்ரம்பின் துணிச்சலான அல்லது பகைமையை வளர்க்கும் நடவடிக்கையில், இன்றுவரை உலகின் பல மிக முக்கிய உடன் படிக்கை அல்லது அங்கத்து வத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. இவற்றை மிக சுருக்கமாக பட்டியலிடுவதானால் - 2017ஆம் ஆண்டு முதல் (Trans Pacific Partnership - TPP) பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து 2017ஆம் ஆண்டும்; ஈரான் அணு ஒப்பந்தத்தினை இவ் வருடம் மேமாதம்; தற்பொழுது ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கவை.

இவற்றில் பாரிஸ்பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா உத்தியோக ரீதியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் முன் விலக முடியாத சிக்கலில் உள்ளது. இவற்றுடன் ஜீ ஏழு (G7)நாடுகளுடனான ஒத்துழையாமை மறுபக்கம் காணப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா வல்லரசு வடகொரியவுடன் தமது நட்பைத் தேடுவதும், பாலஸ்தீனத்திற்கு முற்று முழுதான எதிர்ப்பைக் காண்பிப்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இவ் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம் தமிழீழ மக்களுக்கு சாதகமா பாதகமா என நாம் ஆராய்வோமானால், இரண்டும் அற்ற நிலையை நாம் காணமுடியும். 

தமிழ் மக்களும் ஐ.நா.வும்

ஐ. நா.வின் மனித உரிமை செயற்பாடுகளை விசேடமாக இலங்கை வாழ் தமிழ் மக்களது ஐ. நா மனித உரிமை வேலைத் திட்டங்களை, கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளாக (28) முன்னெடுத்து வருபவன் என்ற வகையில், கூற விரும்புவது என்ன வெனில், நாம் ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டை 1990ஆம் ஆண்டு ஆரம்பித்த வேளையில் தமிழ் மக்களிற்கு ஆதரவாகவோ, அனுதாபமாகவோ எந்த நாடும் ஒரு பொழுதும் காணப்பட்டது கிடையாது.

யாவும் காலப் போக்கில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, சர்வதேச போர் குற்றங்களாக மாற்றம் அடைந்த வரும் வேளையில், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து, பிரான்சை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமை மையத்தின் தொடர்ச்சியான, செயற்பாடுகளின் பலனாலேயே ஐ.நா.வின் அங்கத்துவ நாடுகள் தமிழீழ மக்கள் மீது தமது பார்வையைத் திருப்ப ஆரம்பித்தனர்.

மிக அண்மைக் காலமாக இலங்கை மீது மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனித்து நின்று ஒரு பொழுதும் நிறைவேற்ற வில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். எமது செயற்பாடுகள் ஐ.நா. மனித உரிமைசபையில் ஆக்கபூர்வமானதாக இருக்குமானால் அன்று அமெரிக்காவை கொண்டு செய்த வேலைதிட்டங்களை நாம் வேறு ஓர் நாட்டைக் கொண்டு நிறைவேற்ற முடியும்! ஆகையால், அமெரிக்காவின் செயற்பாடுகளை நாம் பின்புறத்தில் வைத்திருக்கும் அதேவேளை, ஐ. நா.வில் உள்ள மற்றைய நாடுகளுடன் உறவை நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும். எமது வேலைதிட்டங்கள் ஐ.நா. முறைக்கு ஏற்றதாகவும், ராஜதந்திரம் நிறைந்ததாகவும் நகர்த்தப்படும் பொழுது, ஐ.நா.மனித உரிமை சபையில் இராமர் இருந்தாலென்ன? இராவணன் இருந்தாலென்ன? நாம் எமது வேலைத் திட்டங்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறக் கூடிய வகையில் முன்னெடுக்க வேண்டும்.

மக்களிடம் பணம் வசூலிப்பதற்காக செய்திகளை மிகைப் படுத்துவதும், தனிநபர் புகழ்பாடும் செய்திகளினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு சர்வதேச ரீதியாக ஒன்றும் உருப்படியாக நடைபெற மாட்டாது.

38ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா. மனித உரிமை சபையில், சிறிலங்காவிடயத்தில் ஏதும் உருப்படியாக ஆக்கபூர்வமாக நடைபெறுவதனால், இது நிச்சயம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள நாற்பதாவது (40ஆவது) கூட்டத் தொடரிலேயே நடைபெறும்.

இவ் அடிப்படையில் நடந்து முடிந்துள்ள 38ஆவது கூட்ட தொடரிலேயோ, எதிர் வரும் 39 ஆவது கூட்ட தொடரிலே இலங்கை விடயம் மந்த நிலையிலேயே காணப்படும். அங்கு ஆங்காங்கே பல பக்க கூட்டங்களும், ஒன்றரை நிமிட உரையும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிம்மதி தரும் செய்தி அல்லவா!

மனித உரிமை சபையில் எமது செயற்பாடுகள் ஐ.நா. வழிமுறைகளுக்கு ஏற்ற முறையில் அமையாவிடில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாம் பாரிய விபரீதத்தையே சந்திக்க நேரிடும்.

2011ஆம் ஆண்டின் பின்னர், இலங்கை அரசின் பின்னணியில் மனித உரிமை சபைக்கு செயற்திட்டங்களை எடுத்துச் செல்வதாகக் கூறி மனித உரிமை செயற்பாடுகள் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளுக்கு - ஐ.நா.விற்கான நிரந்தர அடையாள அட்டை, பக்கக் கூட்டங்கள், ஒன்றரை நிமிட உரை ஆகியவை தான் ஐ.நா. வில் மனித உரிமை செயற்பாடுகளென மூளை கழுவியுள்ளனர்.

இவற்றிற்கு நல்ல உதாரணமாக வடக்கு கிழக்கிலிருந்து தமது உயிர்களை பணயம் வைத்து, பாரிய பணத்தை செலவழித்து காணமல் போயுள்ள தமது உடன் பிறப்புக்கள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் சார்பாக நீதி கேட்டு ஜெனீவாவிற்கு வருகை தந்துள்ளவர்கள் அமைகிறார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள இவ் அப்பாவி மக்களில் தமது புகழிற்கும், கீர்த்திக்கும் பணம் வசூலிப்பிற்கும் விளம்பரத்திற்கும், ஜெனிவாவில் வேலைத் திட்டங்களை மேற்கொள்ளும் சிலர், இவர்களைத் தவறான வழிகாட்டலில் இட்டுச் செல்கின்றனர்.

இவையாவற்றின் பிரதிபலிப்புக்கள் யாவும் தற்பொழுது அல்ல, 2020ஆம் ஆண்டு ராஜபக்ஷ பரம்பரையிடம் பௌத்த சிங்கள ஆட்சி கைமாறிய பின்னர், யாவரும் விரிவாக விளங்கிக் கொள்வார்கள். ஐ.நா.மனித உரிமை சபையின் பக்கக்கூட்டங்களில், பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் நபர்களுடன் வடக்கு கிழக்கிலிருந்து வந்தவர்கள் கலந்து கொள்வது என்பது மிகவும் அபாயமான பொறி. இச் செயற்பாடுகளை இலங்கை அரசு பின்னணியில் நின்று நகர்த்துகிறது என்பதை எத்தனை தமிழர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

மனித உரிமை ஆணையாளர்

தற்போதைய மனித உரிமை ஆணையாளர் அல் குசேயின், தனது பதவிக்காலத்திலிருந்து எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு செய்கிறார். உண்மையில் ஐ.நா. வின் உயர் பதவிகள் என்பது உலகின் பிராந்திய ரீதியாக அதாவது- ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மேற்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பா என்ற அடிப்படையில் ஓர் சுழற்சி முறையிலேயே அமைகிறது.

இவ் அடிப்படையில் அல் குசேயின் ஆசிய நாடுகளின் பிரதிநிதி என்ற அடிப்படையில் பதவி வகித்த காரணத்தினால் அடுத்து தெரிவாகவுள்ள மனித உரிமை ஆணையாளர் நிச்சயம் கிழக்கு ஐரோப்பா அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டினைப் பிரதிநிதித்துவப் படுத்துபவரே தெரிவாகலாம்.

இவ் அடிப்படையில் யுனேஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதவிக்கு போட்டியிட்டவருமான புல்கேரியா (BULGERIA) நாட்டை சார்ந்த திருமதி ஈரினா போக்கோவாவின் பெயர் ஐ.நா. வட்டாரங்களின் கடுமையாகப் பேசப்படுகிறது. அதே இடத்தில் குரோசியா நாட்டை சார்ந்த ஐவன் சிமோனலிக் என்பவரதும் லத்தீன் அமெரிக்கா சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான திருமதி வேரோனிக்கா பசிலேற் ஆகியோர் ஆணையாளர் பதவிக்கு முன்னிலையில் நிற்பதாகப் பேசப்படுகிறது.

இதே வேளை போர்த்துக்கல் நாட்டை சார்ந்த திருமதி மார்ட்ட சந்தோஸ் ஆகியோருடன் சில ஆபிரிக்கா ஆசிய பெண் மணிகளின் பெயர்களும் பேசப்படுகிறது.

இவ் ஆணையாளர் பதவிக்கு இலங்கையைச் சார்ந்த திருமதி ராதிகா குமாரசுவாமி ஆசை கொண்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்களில் பேசப்படுகிறது. இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள், இன அழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறிலங்கா விடுபடும் வரை, இலங்கையை சார்ந்த யாரும் ஐ.நா. மனித உரிமை விடயங்களில் முன்னணி வகிப்பது மிகவும் கடினமான விடயம்.

இலங்கையைத் திருப்திப்படுத்தும் செயற்பாடுகள்

நடைபெற்று முடிந்த மனித உரிமை சபையின் 38 ஆவது கூட்டத் தொடரில், தமிழ் மக்களிற்கு மிகவும் பாதகமாக நடைபெற்ற பல சம்பவங்கள் இருந்த பொழுதிலும், குறைந்தது இரு சம்பவங்களை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அறிந்திருப்பது அவசியம்.

காரணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 40 ஆவது கூட்டத் தொடரில், தமிழ் மக்களிற்குச் சாதகமாக ஏதெனும் நடைபெறாத நிலை ஏற்படுமாயின், 38 ஆவது கூட்டத் தொடரில் நடந்த சில சம்பவங்கள் காரணிகளாக அமையும்.

கடந்த இரு வருடங்களாக, ருனேலா பாஜ் (Tourner la Page) என்ற அரசசார்பற்ற நிறுவனமெனக் கூறப்படும் அரசு சார்பு அமைப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்காக ஐ.நா.மனித உரிமை சபையில் குரல் கொடுப்பதாக கபட நாடகம் நடத்தி வருவதை அனுபவம் வாய்ந்த நீண்ட காலச் செயற்பாட்டாளர் மட்டுமே அறிவார்கள்.

யாவரும் அறிந்த உண்மை என்னவெனில், இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முன்னின்று நடாத்திய நாடுகளில், மசிடோனியா (Macedonia) முக்கியத்துவம் பெறும். நடைபெற்று முடிந்த 38 ஆவது கூட்டத் தொடரில், ருனேலா பாஜ் அமைப்பு, மசிடோனியா நாடு மீது மிகவும் காட்டமான அர்த்தமற்ற அறிக்கையை, தமது ஒன்றரை நிமிட உரையில் கூறியிருந்தார்கள். இவ் விடயம் மசிடோனியா அரசிற்கு தமிழ் மக்கள் மீது கோபத்தையும் வெறுப்பையும் உண்டு பண்ணியது மட்டுமல்லாது, இவ் ருனேலா பாஜ் அமைப்பை, நடந்து முடிந்த 38 ஆவது கூட்டத்தொடரிலிருந்து தற்காலிகத் தடையும் விதித்திருந்தனர்.

இதேவேளை, இன்னுமொரு முக்கிய விடயத்தை யாவரும் கவனத்திற் கொள்ள வேண்டும். உலகில் காணமல் போனோர் விடயத்தில் ஐ.நா.வின் புள்ளி விபரங்களிற்கு அமைய, இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வேளையில் - இருபது இருபத்தைந்து தமிழர் மட்டும் காணமல் போனோரது சில புகைப்படங்களுடன் ஐ.நா.வின் முன்றலில் விழிப்புப் போராட்டம் நடத்துவது மிகவும் வெட்கத்துக்குரிய விடயம்.

உண்மை யாதார்த்தத்தின் அடிப்படையில் கூறுவதனால், மேற்கூறப்பட்ட இரு விடயங்களும், இலங்கை அரசிற்கு மிகவும் திருப்தி தரும் செயற்பாடுகள் மட்டுமல்லாது அவர்களது மறைமுக ஆதரவில் நடைபெறுபவை என்பதே உண்மை. அப்படியானால் யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?

அடுத்து இலங்கையின் முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் சிப்பாய்கள் ஐ.நா.மனித உரிமை சபைக்கு வருகைதந்து தம் மீதான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதை உலகின் நியாயவாதிகள் யாரும் விரும்பவில்லை. இவ் நிலையில், நம் தோழர்களது வருகை என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வருவோர் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இவர்கள் வரவு ‘நாய் பார்க்க வேண்டிய வேலையை கழுதை பார்த்துத் தண்டனை பெற்ற’ கதையாக முடியுமா என்ற அச்சம் ஏற்படுகிறது.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

Ninaivil

திருமதி இராசமலர் நாகலிங்கம்
திருமதி இராசமலர் நாகலிங்கம்
யாழ். உரும்பிராய்
கனடா
22 FEB 2019
Pub.Date: February 23, 2019
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
யாழ். நாகர்கோவில்
கனடா
21 FEB 2019
Pub.Date: February 22, 2019
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
யாழ். வல்வெட்டித்துறை
கனடா
10 FEB 2019
Pub.Date: February 21, 2019
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
யாழ். வடமராட்சி
பிரான்ஸ்
18 FEB 2019
Pub.Date: February 20, 2019
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019

Event Calendar