காங்., தலைவர் ராகுலை முதன் முதலில் 'பப்பு' என முதலில் விமர்சித்த சிவசேனா, கடந்த ஆண்டு பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு, அடுத்த பிரதமராகும் தகுதி ராகுலுக்கு தான் உள்ளது என புகழ்ந்தது. கர்நாடக தேர்தலின் போதும் ராகுலுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வந்தது.
மத்திய அரசுக்கு எதிராக நேற்று லோக்சபாவில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது கடைநேரத்தில், ஓட்டளிப்பதை புறக்கணித்து அவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது.
பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே சிவசேனா ஓட்டளிக்கும் என மூத்த அமைச்சர்கள் பலரும் நம்பிக்கையுடன் கூறிவந்த நிலையில், ஓட்டளிப்பதை புறக்கணித்த சிவசேனா, விவாத்தின் போது பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை மிக கடுமையாக தாக்கி ராகுல் பேசியதை பாராட்டி உள்ளது.
ராகுலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத், பிரதமரை ராகுல் கட்டிப்பிடித்தது வெறும் கட்டிப்பிடிப்பு அல்ல. அது பிரதமர் மோடிக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி. மக்கள் இதனை நாடகம் என்கிறார்கள்.
ஆனால் இது அரசியலில் நாடகம். இது ராகுல் உண்மையான அரசியல் பள்ளியில் பயின்று வந்தவர் என்பதையே தெளிவாக காட்டுகிறது. இது வெறும் ஆரம்பம் தான் என புகழ்ந்துள்ளார்.