கலைஞர் கருணாநிதியும் திராவிட இயக்கமும்

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தமிழக மக்களும் உற்று நோக்கிக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

 தி.மு.கவின் தலைவராகப் பொன் விழாக் கண்டு, ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகத் தெரிவுசெய்யப் பெற்று, 19 வருடங்கள் முதலமைச்சராக இருந்த ஒரே முதலமைச்சர், கலைஞர் கருணாநிதி ஆவார்.    

சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உணர்வு போன்றவற்றில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் என்ற பெருமை, அவரையே சாரும்.  

 ஒரு மாநிலம் இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது என்றால், அது தமிழ்நாடாகவே இருக்க முடியும். குறிப்பாக, முதலமைச்சராக இருந்த கருணாநிதியாகத்தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. இன்று ‘மாநில சுயாட்சி’, ‘மாநில உரிமைகள்’ பற்றிய முழக்கம், இந்தியாவில் குறிப்பாக பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், வலுவாகக் கேட்கிறது. 

இந்தியாவில் முதன் முதலில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜமன்னார் குழு அமைத்து, ‘மாநில சுயாட்சி’ பற்றி விரிவாக விவாதித்து, அறிக்கை பெற்றது தி.மு.கவின் வரலாறு என்றால், அது தி.மு.க தலைவராக இருக்கும் கலைஞர் கருணாநிதியைச் சேரும்.  

 மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் குவிந்து கிடந்தால், மாநில அரசாங்கங்கள் எப்படி மக்கள் பணியாற்ற முடியும் என்ற கேள்வியை எழுப்பி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று, ராஜமன்னார் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 ஆம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றியமை, மாநிலக் கட்சிகள் ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களுக்கு, இன்றைக்கும் பெரிய ஆதாரமாக விளங்குகிறது.   

‘மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கம், தி.மு.கவுக்காக உருவாக்கப்பட்ட ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று. அதை உருவாக்கியவர் கருணாநிதி. 

இவற்றுக்குப் பிறகுதான், இந்திய அரசாங்கம் ‘மத்திய- மாநில அரசாங்கங்களின் உறவுகள்’ குறித்து ஆராய்வதற்கு, சர்க்காரியா ஆணைக்குழுவை அமைத்தது என்பது வரலாறு.   

மாநில முதலமைச்சர்களுக்கு என்று சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்த கருணாநிதி, சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள்தான் கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.                       

அதற்கு முன்பு, தேசியக் கொடியை ஆளுநர்கள் ஏற்றுவார்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில்தான், இந்த உரிமையைப் போராடிப் பெற்று, தமிழ்நாட்டில் தேசியக் கொடியை, முதலமைச்சராக இருந்த கருணாநிதி, கோட்டை கொத்தளத்தில் ஏற்றினார்.  

 அன்றிலிருந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை கிடைத்தது. அன்று, மாநிலத்துக்கு என்று தனிக்கொடி இருக்க வேண்டும் என்றும் கருணாநிதி கோரிக்கை முன்வைத்தார். அதைப் பிறகு தொடரவில்லை. இருந்தபோதிலும், கர்நாடக முதலமைச்சராக இருந்த சீத்தாராமைய்யா, “கர்நாடக மாநிலத்துக்குத் தனிக் கொடி” என்று கோரிக்கையை முன்வைத்து, ஒரு வடிவமைப்பை உருவாக்கினார் என்றால், அதற்கும் முன்னோடி கருணாநிதிதான்.   

இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, ஜனநாயகத்துக்குப் பெரிய அச்சுறுத்தல் எழுந்த போது, முதலமைச்சராக இருந்து, நெருக்கடி நிலையை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர் கருணாநிதி ஆவார். 

நெருக்கடி நிலைமையை ஆதரிக்காத பல தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போது, அவர்களுக்கு எல்லாம் அடைக்கலம் கொடுத்து, நாட்டில் ஜனநாயகக் காற்று வீச வேண்டும் என்பதற்காக, அனைத்து அதிகாரங்களுடன் இருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்திருந்தார்.   

தி.மு.கவின் அவசரச் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, இந்திய நாட்டிலேயே முதன் முதலில் நெருக்கடி நிலையை  எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்காக ஆட்சி கலைக்கப்பட்டது மட்டுமின்றி, தி.மு.க முன்னணிப் பிரமுகர்கள் பலர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள்.    

இந்திரா காந்தி மீண்டும் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தபோது, அதனால்தான் “ஆதரிப்பதிலும், எதிர்ப்பதிலும் என்றைக்கும் தி.மு.க உறுதியாக இருக்கும்” என்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அன்றைக்கு பாராட்டினார்.  

மதசார்பின்மை கருணாநிதியின் முக்கிய கொள்கை. ஆனால், இந்துத்துவத்தை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்திருந்தது. அப்போது கூட, மதசார்பின்மைக் கொள்கையை கைவிட்டு விடக் கூடாது என்பதற்காக பிரதமராக இருந்த வாஜ்பாயிடம், ‘குறைந்தபட்சச் செயற்றிட்டம்’ ஒன்றை உருவாக்க வைத்து, அதன் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்ததுடன், கூட்டணியிலும் இடம்பெற்றது தி.மு.கழகம்.

 ‘பாபர் மசூதி இடிப்பு’ என்றாலும், மதசார்பின்மைக்கு அச்சுறுத்தல் என்றாலும், முதல் குரல் கருணாநிதியின் குரலாகவே இருக்கும்.    

தேசிய அளவில் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியில் தொடங்கி, பிரணாப் முகர்ஜி வரை, மாநிலக் கட்சியாக இருந்தாலும் அவர்களைத் தெரிவு செய்வதில் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. 

தேசிய அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தின் வாயிலாக, 1996இல் பிரதமராகும் வாய்ப்பு வந்த போது, “என் உயரம், எனக்குத் தெரியும்” என்று கூறி விட்டு, மாநில அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். மாநிலங்களுக்கு இடையிலான அமைப்புகளாக இருந்தாலும் சரி, தேசிய வளர்ச்சிக் குழுவாக இருந்தாலும் சரி, மாநிலத்தின் கருத்துகளை உறுதியாக எடுத்து வைத்து வாதாடும் திறமை மிக்கவர் கருணாநிதி. சமூக நீதி, தி.மு.கவின் முக்கிய கொள்கை. அதிலும் கலைஞர் கருணாநிதி, அதற்காகத் தான் ஆட்சியிலிருந்த போதெல்லாம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு, முதன் முதலில் 1969இல் முதலமைச்சரானவுடன், ‘சட்டநாதன் ஆணைக்குழுவை’ அமைத்தார்.   

அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31 சதவீதமாக உயர்த்தினார். மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவர், பிரதமராக வி.பி.சிங் இருந்த போது, ‘மண்டல் ஆணைக்குழு அறிக்கை’ அமுல்படுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். தமிழ்நாட்டில் எழுப்பிய சமூக நீதிக் குரல், இந்திய அளவில் கேட்டது, மண்டல் ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட்ட போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனைவரும் அர்ச்சகராகலாம்; அனைத்து ஜாதியினரும் ஓரிடத்தில் வாழ சமத்துவபுரங்கள்; பெண்களுக்கு அரசியல் அதிகாரம் போன்ற புரட்சிகர சிந்தனைகளை நடைமுறைச் சாத்தியமாக்கியவர், தி.மு.கவும் அதன் தலைவராக இருக்கும் கருணாநிதியும் ஆவார்.   

 ஆரம்பப் பள்ளிகளில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும், மகளிருக்கு முதன் முதலில் சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கு அரச வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, மகளிருக்கு உள்ளூராட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு என்று, பல்வேறு பெண்ணுரிமைத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர் கருணாநிதி.   குறிப்பாக 1989இல் ஆட்சிக்கு வந்த கலைஞர், ‘சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கும்’ சட்டத்தை உருவாக்கினார்.  

ஊழல் ஒழிப்பு என்பது இன்றைய முழக்கமாக இருக்கிறது. ஊழலை விசாரிக்க இந்திய அளவில் ‘லோக்பால்’ அமைப்பும், மாநில அளவில் ‘லோக் அயுக்தா’ அமைப்பும் உருவாக்க வேண்டும் என்று இன்றைக்கும் கோரிக்கை வலுத்துக் கொண்டிருக்கிறது.  ஆனால், தன் மீது எம்.ஜி.ஆர் ஊழல் புகார்களைக் கூறியவுடன், பொது ஊழியர்கள் ஊழல் விசாரணைச் சட்டத்தை 1973இல் கொண்டு வந்து, தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை விசாரிக்கும் பிரத்தியேக சட்டத்தை அமுல்ப்படுத்தினார்.  

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்துப் பெற்றது, தமிழ் மொழிக் கல்விச் சட்டம், சமச்சீர் கல்வி அறிமுகம் என்று ஏராளமான கல்வி திட்டங்கள் என, கருணாநிதியின் அரசியலும் அரசாங்க நிர்வாகமும் மாநிலங்களுக்கு மட்டும் அல்ல, இந்திய அளவில்  முன்னோடியாக உள்ளன.    

மாநில அரசியலில் பங்கெடுத்தாலும் தேசிய அரசியலில் இந்திரா காந்தி, வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்கள் உருவாக ஆதரவு கொடுத்தவர் என்பதால், கருணாநிதியின் உடல் நிலை, மாநிலத்தையும் விடத் தேசிய தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திராவிட இயக்கம் நூற்றாண்டு கண்டு விட்டது என்றால், அதில் குறைந்தது 75 வருடங்கள் கருணாநிதியின் வாழ்வு அடக்கம் என்பதால், திராவிட இயக்கத்தின் மீதுள்ள பற்றாளர்களுக்கு கருணாநிதியின் உடல் நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.   

எதிரும் புதிருமாக இருக்கும் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சந்திப்பு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உடல் நலம் விசாரிப்பு என்று, கருணாநிதியின் உடல் நிலை முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அளவில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்துள்ள அங்கிகாரமாகவே தற்போதைக்கு இது பார்க்கப்படுகிறது.  

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019