சீனக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று நல்லெண்ண விஜயமாக ஸ்ரீலங்காவை வந்தடைந்துள்ளது.
நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு சீன கடற்படையின் கியான் வச்சங் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த கப்பல் ஸ்ரீலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது.
கப்பலின் சிரேஷ்ட கட்டளைத்தளபதி டோங் யன், கப்பலின் கட்டளைத் தளபதி ஷங் ஜூயோங் ஆகியோருக்கும் மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் தளபதி ரியல் அட்மிரல் நிஷாந்த உளுகெட்டென்னே ஆகியோருக்குமிடையில் பரஸ்பர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நினைவுச் சின்னங்களும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
129 மீற்றர் நீளமும் 17 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 4 ஆயிரத்து 900 கொள்ளளவுடையதுடன் 158 கடற்படையினர் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்வுகளில் சீன கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.