அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் கூற்றுக்களை அவை சார்ந்த நிறுவனங்கள் செவிசாய்க்காத ஒரு நிலை தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியொரு நிலைமை உண்மையானால், எதற்கு இத்தகைய ஆணைக்குழுக்களை அமைத்து, அதற்கென மக்கள் பணத்தினை ஏன் வீண் விரயம் செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

யுத்தம் முடிந்து 9 வருடங்களுக்கு மேலான காலம் கழிந்தும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை சுமந்து நிற்கின்ற எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவென காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் கூட இன்னமும் செயற்படுத்தப்படவில்லை. இந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை ஏன் செயற்படுத்தவில்லை என ஆராய்ந்து பார்ப்பதற்கென இன்னுமொரு ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலையேற்பட்டிருக்கின்றது.

பல்வேறு இடப் பெயர்வுகளுக்கு ஆளாகியமை,  காயங்களுக்கு உட்பட்டுள்ளமை, தடுப்புகளில் இருந்துள்ளமை, சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளமை. குடும்ப உறுப்பினர்களை, நேசித்தவர்களை இழந்துள்ளமை, இருப்பிடங்களை, சொந்த காணி, நிலங்களை, சொத்துக்களை, தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளமை. சொந்தங்கள் காணாமற்  போயுள்ளமை, கல்வி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளமை, தொடர்பாடல்களை இழந்துள்ளமை, ஆற்றுப்படுத்துவதற்கு ஆதரவின்றி தனித்து விடப்பட்டுள்ளமை போன்ற பல்வேறு பாதிப்புகளை எமது மக்கள் சுமந்து கொண்டே வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தம் முடிவுற்றதன் பின்னர், 2010ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் கற்றுவந்த வன்னிப் பிரதேச மாணவர்களிடையே ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் பிரகாரம், யுத்தத்தின் நேரடி தாக்கத்தினை அனுபவித்தவர்களாக 82 சத வீதத்தினரும், மரணப் பிடியிலிருந்து உயிர்த் தப்பியவர்களாக 67 சத வீதத்தினரும், குடும்ப உறுப்பினர்கள் - நண்பர்களை இழந்தவர்களாக 63 சத வீதத்தினரும், படுகொலைகளை நேரில் கண்டவர்களாக 43 சத வீதத்தினரும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களாக 23 சத வீதத்தினரும், கடத்தப்பட்டவர்களாக 23 சத வீதத்தினரும், சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்தவர்களாக 18 சத வீதத்தினரும், 76 சத வீதத்தினர் மனக் காயங்கள் கொண்டவர்களாகவும் கண்டறியப்பட்டனர்.

இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இன்று 09 வருடங்கள் கழிந்தும், எமது மக்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி பாதிப்புகளின் வடுக்களிலிருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அதற்கான உரிய முறையிலான ஏற்பாடுகள் எதுவுமே எமது மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவில்லை.

ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளும் காணாமல் போய்விட்டனவா? - சபையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

எமது மக்களின் பிரச்சினைகள் சார்ந்து ஆராயவென நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவினதும் பரிந்துரைகள் உரிய முறையில் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்பதை அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சியை அடுத்து, 1990ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டிருந்த இளைஞர்களது விரக்தி நிலை தொடர்பில் ஆராய்கின்ற ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல அக்காலகட்டத்தில் செயற்படுத்தப்பட்டன. இதன் பெறுபேறாக, அக்காலகட்டத்தில் மேற்படி திட்டத்தின் பிரகாரம், பாரியளவிலான (கோட்டா) – மானியத் தொகையினைப் பெற்று, இந்த நாட்டுக்கு அதிகளவிலான ஏற்றுமதி வருமானத்தை கொண்டு தரக்கூடிய ஆடைத் தொழிற்துறையினை உருவாக்க இயலுமாயிற்று. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அரச தொழில்வாய்ப்பகளுக்கென போட்டிப் பரீட்சைகளின் மூலமாக நியமனங்கள் வழங்கும் முறைமை ஆரம்பிக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டளவில் தென் பகுதி இளைஞர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் நீரோட்டத்திற்குள் நுழையக்கூடிய நிலை ஏற்பட்டது. சமூக வகுப்பினரிடையே நிலவியிருந்த கசப்புணர்வுகள் போதியளவு களையப்பட்டன.

ஆனால், அனைத்துத் துறைகள் சார்ந்தும் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பிரச்சினைகள் சார்ந்து ஆராயவென நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவினதும் பரிந்துரைகள் உரிய முறையில் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்பதை இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

2006ஆம் ஆண்டு உதலாகம ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. எனினும், எமது மக்களின் ஓரளவு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காவது சில சாதகமான பரிந்துரைகளை செயற்படுத்தியிருந்தாலே இன்று எமது மக்கள் இத்தகைய பாரிய பிரச்சினைகள் பலவற்றுக்குள் தொடர்ந்தும் சிக்குண்டுக் கிடக்க மாட்டார்கள்.

இப்போது எமது மக்களது பிரச்சினைகள், மீதொட்டமுல்லை குப்பை மேட்டைப் போல் மீண்டும், மீண்டும் எமது மக்கள் மீதே சரிந்து விழுவதற்கென்றே தேங்கிக் கிடக்கின்றன என்றார்.

புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களும் புலிகளானகவே கருதப்படுகின்றனரா? ஏன் இந்த பாரபட்டசாம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

‘புலிகள் மீண்டும் வர வேண்டும்’ என்று வடக்கிலும், ‘புலிகள் மீண்டும் வரப் போகிறார்கள்’ என தெற்கிலும் ஆளுக்காள் வாக்கு வங்கிகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகின்ற இந்த வாய்ச் சொல் சவடால்களை விட்டு விடுங்கள். அதை விட்டு நீங்கள் மீளும் வரையில் தேசிய நல்லிணக்கம் என்றும், இன ஐக்கியம் என்றும், இனங்களுக்கிடையே சகவாழ்வு என்றும் கூறிக் கொண்டு செலவு செய்கின்ற மக்களது வரிப் பணமானது வீண் விரயம் என்றே கூறி வைக்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நிவாரணங்கள் வழங்கும் முகமாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதாக ஒரு செய்தி அண்மையில் வெளிவந்திருந்தது. முன்னாள் இயக்க உறுப்பினர்கள் எனும்போது, புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஏனைய இயக்கங்களில் இருந்தோரும் இருக்கின்றார்கள்.

இவர்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தோர் அரசாங்கத்தினால் - அதுவும் யுத்தத்தில் ஈடுபட்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். அதுவும், இந்த நாட்டின் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். அன்றி, எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனத்தாலோ அல்லது சர்வதேச குழுக்களாலோ இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

அதாவது, கடந்த கால யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இருதரப்புகளில் ஒரு தரப்பிற்கு மற்றைய தரப்பு புனர்வாழ்வு அளித்துள்ளது.  இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகமயப்படுத்தவும்பட்டுள்ளார்கள். முழுமையான புனர்வாழ்வுக்கு இவர்கள் உட்படுத்தப்பட்டிருக்காவிட்டால் சமூகமயப்படுத்தப்பட்டிருக்கப்பட மாட்டார்கள். இதனை நான் சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரியும்.

இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கென உரிய, போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்தவகையில், இவர்களுக்கு ஏதேனும் நிவாரண வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதற்கென ஒரு திட்டம் கொண்டுவரப்படுகின்றபோது, ‘புலிகளுக்கு நிதி கொடுக்கப் போகிறார்கள்’ என சுயலாப அரசியலுக்காக கூக்குரல் இடுகின்றவர்கள், அந்த மக்களின் பாதிப்புகளை மறந்துவிடுகிறார்கள். இவ்வாறு இவர்களை பாதிக்கவிட்டுக் கொண்டே நல்லிணக்கம் பற்றியும்  பேசுகிறார்கள்.

ஒரு பக்கத்தில் இராணுவத்தினரைப் போற்றிப் பாடுகின்ற நீங்கள், அதே இராணுவத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தவர்களை மீண்டும் புலிகள் என்றே சித்தரிப்பதன் மூலம், இராணுவத்தின் மேற்படி புனர்வாழ்வு அளிப்பு மீது சந்தேகங் கொள்கின்றீர்களா? எனக் கேட்க விரும்புகின்றேன். அதாவது - இலங்கை இராணுவத்தின் மீது சந்தேகங் கொள்கின்றீர்களா? என்றே கேட்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் வேலைத்திட்டமா? - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்காக நிறுவப்பட்டது என்பதைவிட, சுயாதீன ஆணைக்குழுக்களை இதோ அமைத்துவிட்டோம் எனக் கூறிக் கொண்டிருப்பதைவிட, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களால் பயன்கள் ஏதும் இருக்கின்றவா? என்பது குறித்தே அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும். தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஒரு பக்கமாக அதன் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் ஊதியங்களை அதிகரிப்பது, கொடுப்பனவுகளை அதிகரிப்பது, மறுபக்கமாக மக்கள் மீது வரிகளை அதிகரிப்பது என இருந்துவிடக் கூடாது.

அதேபோன்று மேற்படி சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தேவையான வளங்களை வழங்க வேண்டும். குறிப்பாக, இலஞ்;சம் மற்றும் ஊழல் விசாரணைக்கு குழு தொடர்பில் பார்கின்றபோது, இந்த ஆணைக்குழு சுயாதீனமாகும்போது, தமக்குத் தேவையான தரமான பணியாளர்களைத் தமக்குத் தேவையானவாறு இணைத்துக் கொள்வதற்கு முடியாதிருப்பதாகவும், தம்மிடம் நிதி சுயாதீனத் தன்மையும் இல்லை எனவும் மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

இவரது கூற்றின்படி, கொங்கோ நாட்டில் 6 மில்லியன் மக்கள் இருக்கும் நிலையில், அந்த நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளாக 1000 பேரும், தடுப்புப் பிரிவில் 220 பேரும் உள்ள நிலையில், இலங்கையில் 21 மில்லியன் மக்கள் இருக்கின்ற நிலையில் பொலிஸாரிடமிருந்து கைமாற்றாகப் பெறப்பட்ட 200 விசாரணையாளர்களே இருப்பதாகத் தெரிய வருகின்றது. மேலும், உலகின் அநேக நாடுகளில் உயர் தர சட்டத்தரணிகள் மேற்படி பணிகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்ற நிலையில், இலங்கையில் அந்த தரம் குறைந்தே உள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றார். சில அரச அதிகாரிகளே இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் சில தீரமானங்களை எடுப்பதாகவும் கூறுகின்றார்.

இத்தகைய நிலை இருக்கின்றபோது, மேற்படி ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை தொடர்பில் கேள்விக் குறியுடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில்தான், இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிடம் தான் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமற் போயுள்ளதாக அண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் தெரிவித்திருகின்றார்.

எனவே, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் இயங்கு நிலை தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திதுகின்றேன்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019