செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு


செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கள் வாழும் இல்லம்.
சிறகசைத்துப் பறந்து வானத்தை வலம் வரும் சிட்டுக்குருவிகளின் வளாகம். உறவுகளைத் தொலைத்த பிஞ்சு நெஞ்சங்களினை உள்ளன்போடு அரவணைக்கும் அன்னையகம். செஞ்சோலை எனும் வீடு எப்படித் தோற்றம் கண்டது என்பதனை நாம் சற்றுத் திரும்பிப் பார்த்தே ஆகவேண்டும்.

போர் நடக்கும் எந்தவொரு தேசத்திலும் சாத்தியமாக்கப்படாத மனிதாபிமானச் செயற்பாட்டைத் தழிழீழத்திற்தான் நாம் காணலாம்.
தமிழீழம் எனும் தமிழர் தாயக பூமி முழுமையான விடுதலையைக் காண்கின்ற வேளையில் அங்கே ஆதரவற்றர்கள், இயலாமையில் வாழ்பவர்கள், ஏழைகள், கைவிடப்பட்ட முதியோர்கள் கையேந்தி நிற்பவர்கள் என்று யாருமே இருக்கக்கூடாது. போரினால் ஏற்படும் நிரந்தரமான தாக்கங்களுள் மக்கள் நசுங்கிப் போக இடமளிக்கக்கூடாது. மாறாக எல்லா வகையிலும்தலை சிறந்த நாடாக, இந்த உலகிற்கே முன்மாதிரியான ஒரு நாடாக தமிழீழம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகமிக உறுதியாக இருந்தார்.

மண்வளம், மக்களின் வாழ்க்கை முறைமை வாழ்வாதாரம், கல்வி, கலை பண்பாடு எல்லாவற்றிலும் அதிக அக்கறை செலுத்தினார். ஒரு புறம் மண்மீட்பிற்கான விடுதலைப் போரை நடாத்திக் கொண்டு மறுபுறம் தமிழீழத்தின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையிற் கட்டியெழுப்பும் பணிகளைச் செவ்வனே செய்து மேற்கொண்டிருந்தார் தலைவர் அவர்கள். அந்த வகையில் உருவான சோலைகள் கல்விக் கூடங்கள் ஏராளம்.

செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, அன்புச் சோலை, வெற்றிமனை, லெப். கேணல் நவம் அறிவுக்கூடம் போன்றவை அவற்றில் சில. யுத்தத்தினாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து தவிக்கும் பெண்குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. ஆதரவற்ற முதியோர்களுக்காக அன்புச்சோலையும், போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வெற்றிமனையும், யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக லெப். கேணல் நவம் அறிவுக்கூடமும் உருவாக்கப்பட்டன.

‘‘சீர்பல ஏந்திநம் சிந்தையில் நிறைந்திடும் செந்தழிழீழத்தின் செஞ்சோலை வேரிடையூறிய நீரென எங்களின் வீடெனவாகிய செஞ்சோலை’’
இவை செஞ்சோலைச் சிறுவரில்லத்தின் கீதத்திலிருந்து சில வரிகள்.

1991ம் ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி 15 மாணவிகளுடன் செஞ்சோலை மகளிர் பாடசாலை ஆரம்பமானது. தலைவர் அவர்கள் இந்த நாளினைத் தேர்ந்தெடுத்து செஞ்சோலையின் பாடசாலையை ஆரம்பிக்க ஒரு காத்திரமான காரணமிருக்கிறது.
1990ம் ஆண்டு இதே நாளில் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் வீரகாவியம் படைத்த கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலினஸ் என்னும் மாவீரர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோம்.

இவர்களில் மேஜர் காந்தரூபன் அவர்கள் தன் இலக்கு நோக்கி விரையுமுன் தலைவர் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட தனது ஆசை , தாய் தந்தையரைப் பிரிந்து, இழந்து வாழும் குழந்தைகளுக்கு ஓர் இல்லத்தை அமைத்து அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டுமென்பது தான்.

தலைவர் அவர்களின் எண்ணக்கருக்களில் ஒன்று மேஐர் காந்தரூபனின் கனவாக மலர்ந்தபோது செஞ்சோலை மகளிர் பாடசாலை தோற்றம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் சிறிய இடம் ஒன்றில் பாடசாலையின் செயற்பாடுகள் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்த போது மாணவியர் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது.

எனவே செஞ்சோலைப் பெண் குழந்தைகளுக்காக வேண்டி யாழ் சண்டிலிப்பாயில் ஓர் சிறப்பான இல்லம் நிர்மாணிக்கப்பட்டு ஐப்பசி 22ம் நாள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அப்போது 23 பிள்ளைகள் கொண்ட பூஞ்சோலையாகத் திகழ்ந்த செஞ்சோலை, காலப்போக்கில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட இல்லமாக விளங்கியது.

”எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவு ஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக, நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்றவேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக , நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.“
என்ற தனது சிந்தைக்குச் செயல்வடிவம் தந்தார் தலைவர். அதன்வழி அவரின் நேரடிக் கண்காணிப்பில், பாதுகாப்பில் வளர்க்கப்ப்ட்டனர் குழந்தைகள். கைக் -குழந்தைகள் முதல் 18 வயது வரையான பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலம் நோக்கி நடக்கிறார்கள். பல்வேறு சூழலிருந்து இவர்கள் வந்திருந்தாலும் ஒரே குடும்பமாக செஞ்சோலைக் குடும்பத்தில் இணைந்துள்ளார்கள். முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவுயூட்டப்பட்டது.

கலைகள் பலவும் அவரவர் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப கற்பிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் பல்வேறு கைவினைத்திறன்கள் வெளிக்களச் செயற்பாடுகள் போன்றவற்றையும் விரும்பி மேற்கொண்டனர் செஞ்சோலை மாணவியர். நல்லொழுக்கம், நல்மனப்பாங்கு, நற்பண்புகள், ஆளுமைத்திறன், துணிச்சல் முற்போக்குச் சிந்தனை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவான சிறப்பான பாடத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன.

 

இந்த சமயம் போர்ச்சூழலால் செஞ்சோலை இடம்பெயர வேண்டிய நிர்ப்ந்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. இலங்கை அரசபடை பலாலியிலிருந்து முன்னகர்வுகளை மேற்கொண்டு தாக்குதலை உக்கிரப்படுத்திய வேளை மக்களோடு மக்களாக சண்டிலிப்பாயிலிருந்து நகர்ந்து மானிப்பாய், கோப்பாய் போன்ற இடங்களில் தற்காலிகமாக சிறிது காலம் இயங்கி வந்தது. பின்பு 1993,1994,1995ம் ஆண்டுக் காலப்பகுதியில் அரியாலையிலும் மட்டுவில்லிலும்
செஞ்சோலை தன் செயற்பாடுகளை நிரந்தரமாக்கிக் கொண்டாலும் அதுவும் நீடிக்கவில்லை. 1995ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக செஞ்சோலை கிளிநொச்சியிலுள்ள திருவையாறு என்னுமிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து மல்லாவியில் வடகாடு முல்லைத்தீவு வள்ளிபுனம், இரணைப்பாலை மீண்டும் வள்ளிபுனம் கிளிநொச்சி என ஓடி ஓடிக் களைத்தாலும் மாணவியரின் கல்விச் செயற்பாடுகள் அங்கும் தொடர்ந்தன.

இது இவ்வாறிருக்க மனதுக்கு நெகிழ்வான ஒரு முக்கியமான விடயத்தினை நான் இங்கே பதிவு செய்தே ஆகவேண்டும் என்று விரும்புகிறேன். செஞ்சொலை மகளிர் இல்லம் ஆரம்பித்த நாளில் இருந்து அதன் வளர்ச்சியிலும் சிறப்பான பல செயற்பாடுகளிலும் மிக முக்கிய பங்காற்றியவர் “தமிழீழத்தின் முதற் பெண்மணி” திருமதி மதிவதனி பிரபாகரன் அவர்கள். தாய்க்கு தாயாக நின்று செஞ்சோலைக் குழந்தைகளின் மனதை வென்றவர்.

குழந்தை வளர்ப்புப் பற்றிய பல அறிவுரைகளை வழங்கி, செஞ்சோலையில் பணியாற்றிய அனைவரையும் புடம்போட்டவர். பருவவயதுப் பிள்ளைகளுக்கு வாழ்க்கை என்றால் என்ன, தழிழீழ பெண்கள் எப்படி வாழவேண்டும் என்பதனைக் கற்பித்தவர். அவர் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி, குதூகலித்து மகிழும் தருணங்கள் மனதுக்கு நெகிழ்வானவை. செஞ்சோலைச் சிறார்களால் “மாமி” என்று அன்பு ததும்ப உரிமையோடு அழைக்கப்பட்டவர் அண்ணி மதிவதனி அவர்கள்.

தலைவர் தன் துணைவியார் குழந்தைகளோடு கூடி செஞ்சோலை அறிவுச்சோலைச் சிறார்களிடம் வருகை தந்து, தைப்பொங்கல் முதல் நத்தார் தினம்வரை எல்லாத் திருநாட்களையும் சிறப்பிப்பார். எப்பொழுதும் அக்குழந்தைகளின் நல்வாழ்வுபற்றிய ஆக்கபூர்வமான யோசனைகளைப் பகிர்ந்து கொண்டு தலைவர் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அண்ணியின் பங்கு மகத்தானது. செஞ்சோலை, அறிவுச்சோலை குழந்தைகள் உரிமையோடு உறவாடும் குடும்பமாக தலைவர் அவர்களின் குடும்பம் திகழ்ந்தது என்றால் மிகையாகாது.

2006ம் ஆண்டுக் காலப்பகுதியில் விமானத்தாக்குதலுக்கு இலக்கானது வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம். அங்கு கற்கை நெறிக்காகக் கூடியிருந்த செஞ்சோலை மாணவியர் பலரை நாம் இழந்தோம் அன்று. 2009ல் வன்னியை இராணுவம் வல்வளைப்புச் செய்தபோது அந்தக் கோரமான நேரங்கள் செஞ்சோலைப் பிள்ளைகளையும் கடுமையாகத் தாக்கிற்று. பல குழந்தைகள் காயம் பட்டனர். சில குழந்தைகள் உயிரை விட்டனர். மீதிக் குழந்தைகள் செஞ்சோலைப் பணியாளர்கள் சிலரால்க் காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தாலும் இன்று செஞ்சோலை என்று எம்மால் பெயர் சொல்ல முடியாத நிலமையில் வெவ்வேறு இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

 

“இந்தக் குழந்தைகள் யாருமற்றவர்களல்லர். தமிழன்னையின் புதல்வர்கள். வரலாற்றுப் பெருமை மிக்க சுதந்திரப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்த இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாக மாறி ஒருகாலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் சிறப்புற வேண்டும் என்பதே எனது ஆவல்.“

இது தலைவர் அவர்களின் உள்ளக்கிடக்கை பேரவா என்று கூடச் சொல்லலாம்.ஆனால் இது நிறைவேறுமா என்பது வினாவாக இருந்தாலும், தாய்தந்தையரை இழந்து வாழும் குழந்தைகளின், பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்கும் உயரிய பணி உலகெங்கும் பரந்துவாழும் எங்கள் தமிழ் உறவுகளிடமே கையளிக்கப்பட்டுள்ளது. இது காலத்தின் கட்டளை. தலைவரையும் தாய்மண்ணையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழரின் தலையாய கடமையும் இதுவே என்பதை உணர்ந்து செயற்படுவோமாக.

 

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018