சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்கால பிரதமரை தெரிவுசெய்யுங்கள்

போட்டித் தன்மையுடன் முன்னோக்கி செல்வதற்கும், பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும், உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிவித்திகலயில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டின் அபிவிருத்தி பணிகளைப்போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசியலை பலப்படுத்துவதற்காக நீங்கள் வழங்கிவரும் உதவிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நீங்கள் அறிவீர்கள். இரத்தினபுரி மாவட்டம் பெருந்தோட்டப் பொருளாதாரம், இரத்தினக்கல் வளம், விவசாயம் ஆகிய துறைகளைக்கொண்ட மாவட்டம் என்பதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு பலத்தை சேர்க்கும் மாவட்டமாகும். 

என்றாலும் மிகவும் குறைந்த வருமானம் பெறுகின்ற வறிய மக்கள் பெருமளவில் இங்கே உள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் சில பணிகளை மேற்கொண்டு வந்துள்ளன. என்றாலும் இம்மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் அனைத்து அரசாங்கங்களும் தோல்வியடைந்துள்ளன. 

நாம் கடந்த காலங்களில் இது பற்றி விரிவாகக் கலந்துரையாடி சுற்றாடல் அழிவுகளுடன் ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளை தவிர்ப்பது தொடர்பாக கலந்துரையாடி இருக்கிறோம். இரத்தினபுரி வெள்ள நிலைமையை தவிர்ப்பது தொடர்பில் 1950 களிலும் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் மேற்கொண்ட சாத்திய வள அறிக்கைகள் உள்ளன. 

என்றாலும் அந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில் அத்திட்டங்களுக்கு குறித்த பிரதேசங்களில் காணிகளை பெற்றுக்கொள்வது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் இருந்த காரணத்தினால் ஆகும். 

எதிர்ப்புகளை மேற்கொள்கின்றவர்களுக்கு உண்மை நிலையை விளக்கி வெள்ள நிலைமைகளை தவிர்க்கும் வகையில் களுகங்கை அபிவிருத்தி முன்மொழிவுத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். இதற்காக நாம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடினோம். 

அவற்றிற்கு நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இம் மாவட்டத்தில் மல்வலவெவவை சுத்தப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் கந்தே கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இதற்காக நான் கடந்த வருடம் இந்நாட்டின் சிரேஷ்ட பொறியிலாளர்களை அழைத்து கலந்துரையாடினேன். 

இரத்தினபுரி, களுத்துறை, சபரகமுவ மாகாணம், கேகாலை உள்ளிட்ட இந்த பரந்த பிரதேசத்தை, சுற்றாடல் அழிவுகளுடன் சொத்து அழிவுகளையும் ஏற்படுத்தி கடலைச் சென்றடையும் இந்த நீரை, வடக்குக்கு திசை திருப்பும் பாரிய திட்டமொன்று தொடர்பாக இவ்வருடம் மூன்று கலந்துரையாடல்களை நாம் மேற்கொண்டோம். 

சுற்றாடல் அழிவுகளின்றியும் மரங்கள், மலைகள், சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படாத வகையிலும் புதிய தொழில்நுட்பத்துடன் சிரேஷ்ட பொறியியலாளர்களை கொண்டு இதற்காக திட்டமிடப்படுகின்றது. ஜப்பானின் ஜயிக்கா நிறுவனம் உலக வங்கி ஆகியவற்றிடம் இதற்காக நாம் நிதி உதவி கோரியுள்ளோம். 

இத்தகைய திட்டம் பற்றி இதற்கு முன்னர் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றாலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிலோமீற்றரை ஊடறுத்து குழாய் வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அனுராதபுரத்திற்கும், வவுனியாவிற்கும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கும் 200 அல்லது 250 கிலோமீற்றர் தூரமேயுள்ளது. பாரிய குழாய் வழியாகவே இது மேற்கொள்ளப்பட இருக்கின்றது. 

இதன் மூலம் எத்தகைய சுற்றாடல் அழிவுகளும் ஏற்படமாட்டாது. இது போன்றதொரு திட்டம் இதற்கு முன்னர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இம்மாவட்டத்திலுள்ள வெள்ளம் தொடர்பான பிரச்சினையை தவிர்ப்பதற்கு களுத்துறை மாவட்டத்தில் இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு நீண்டகால திட்டமாகும்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு முக்கிய பிரச்சினை தான் சாதாரண வறிய மக்கள் ஆறுகள், கால்வாய்களில் கூடைகளை கொண்டு இரத்தினக்கல் அகழ்வதற்கு இடமளிக்கப்படாத பிரச்சினையாகும். சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் கடந்த காலங்களில் இது தொடர்பாக சில பணிப்புரைகளை விடுத்துள்ளேன். 

இரத்தினபுரி மாவட்டத்தில் சாதாரண மக்களுக்கு கூடையினைக் கொண்டு இரத்தினக்கல் அகழ்வதற்கு முழுமையாக இடமளிக்குமாறும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸாருக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன். 

இதற்கான அனுமதி வழங்கப்படும். இது இந்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். பொலிஸாருக்கும் இரத்தினக்கல் கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கும் சுற்றாடல் துறை நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இதற்கான பணிப்புரை வழங்கப்படும்.

நாம் எதனையும் செய்யாத ஒரு அரசாங்கம் என்று எவருக்கேனும் கூற முடியுமா? இந்த நாட்டிலிருந்த முக்கியமான பிரச்சினையை நீக்கியமைதான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதும் முதலில் நான் செய்த பணியாகும். 

2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின்போது பேசிய விடயங்களை இன்று எவரேனும் பேசுகின்றார்களா?. இல்லை, அன்றைய கால கட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் இன்று இலங்கையில் எங்குமே பேசப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு வருடங்கள் பதவியிலிருப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தபோதும். தேர்தலுக்கு ஏன் சென்றார் என்ற விடயம் குறித்து இன்று எங்குமே பேசப்படவில்லை. சர்வதேச யுத்த நீதிமன்றம், மின்சாரக் கதிரை, வெளிநாட்டு நீதிபதிகள் இவையனைத்தையும் நான் நீக்கியிருக்கிறேன். 

சர்வதேசத்தின் ஆதரவை வெற்றி பெற்றிருக்கிறேன். ஐநா. சபை முதல் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் எமது நட்பு நாடுகளாக மாறியிருக்கின்றன.அன்று சர்வதேச நிதி நிறுவனங்கள் எம்மை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ நா சபை எம்மை விட்டு தூரமாகியிருந்ததுடன், முக்கியான பல சர்வதேச நாடுகள் எம்மை விட்டும் தூரமாகியிருந்தன. சிலர் அரசாங்கம் என்ன செய்கின்றது என்று எம்மிடம் கேட்கிறார்கள். நாம் செய்தது அதுதான் தூரமாகியிருந்தவர்களை நெருக்கமாக்கியிருக்கிறோம். அவர்களை நண்பர்களாக்கி இருக்கின்றோம். இன்று அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உதவுகின்றார்கள். 

அண்மையில் ஐநா. சபையின் இலங்கை பிரதிநிதி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் நாட்டின் ஜயிக்கா நிறுவனம், கொரிய நாட்டின் கொய்கா நிறுவனம், சர்வதேச நாணய நிதியம் போன்ற எமக்கு நிதி ரீதியாக உதவுகின்ற அனைத்து நிதி நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வருடங்களுக்கான அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி கேட்டேன். இரண்டரை மணி நேரமாக அந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. அவர்கள் அனைவரும் இன்று எமக்கு உதவுகின்றார்கள். 

இன்று எமக்கு அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு நிதி ரீதியான பிரச்சினகள் கிடையாது. அரசியல் ரீதியாக எதிர்த் தரப்பினர் பல்வேறுபட்ட விடயங்களை கூறுகின்றார்கள். விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள் அது ஜனநாயக நாடொன்றின் தன்மையாகும். எதிர்த்தரப்பின் பணி விமர்சிப்பதாகவே உள்ளது. எதிர்ப்பது அவர்களது வாடிக்கையாக உள்ளது. ஊர்வலங்களும் சத்தியாக்கிரகங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் அரசாங்கம் என்ற வகையிலேயே செயற்பட்டு வருகிறோம். இது ஜனநாயக நாடொன்றின் பண்பாகும். நான் இந்த நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தியிருக்கின்றேன். முழு உலகும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. 

எனவேதான் கடந்த வாரம் உலகின் முக்கிய 7 நாடுகள் அங்கம்வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் தலைமைப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அது எம்மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவாகும். சர்வதேச ரீதியாக இந்த ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கின்றது. 

எதிர்வரும் 24 ஆம் திகதி நான் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளேன். அன்றைய தினம் நான் புதிய முன்மொழிவொன்றை சமர்ப்பிக்கவுள்ளேன். அந்த முன்மொழிவில் அடங்கியிருக்கும் விடயங்களை நான் இப்போது கூறப்போவதில்லை. அனைத்து தரப்பினர்களும் என்னை விமர்சிக்கக்கூடிய ஒரு முன்மொழிவையே நான் மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளேன். குறிப்பாக எமது பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை நீக்குதல்.

அதேபோன்று விடுதலைப் புலிகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இது தொடர்பில் நாம் எவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை எதிர்காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்த முன்மொழிவை நான் சமர்ப்பிக்கவுள்ளேன். அரசாங்கம் என்ற வகையில் நாம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றோம். அவ்வாறு செயற்பட்டும்போது அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது சாதாரணமானது. 

நாடு என்ற வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாம் சமுர்த்தி நிவாரண உதவி பெறுவோரின் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளோம். 40 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதியை வழங்கியுள்ளாம். இந்த நாட்டில் எந்தவொரு அரசாங்கமும் பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்றதொரு காப்புறுதியை வழங்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.

விவசாயிகளுக்கான நெல்லின் விலையை அதிகரித்துள்ளோம். இவ்வாறு எமக்கு ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டு கூற முடியும். இந்த நாட்டில் உள்ள தற்போதைய அரசியல் நிலைமைகளில் பலரும் பல விடயங்களையும் பேசுகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினார்கள். இந்த எதிர்ப்பு நடவடிக்கை அவர்களது வெற்றி என்று அவர்கள் கூறுகின்றார்கள். என்றாலும் மொட்டு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.

மொட்டும் ஐக்கிய தேசியக் கட்சியும் தம்மைப்பற்றி கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியிலமைந்த மிகையான மதிப்பீடுகள் அவை. இதனை நான் கூற வேண்டும். மொட்டு கட்சியினர் தனியாக அசாங்கத்தை அமைக்க முடியுமென்று எண்ணுவார்களாயின் அது ஒரு மாயை. ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியுமென்று எண்ணினால் அதுவும் மாயையே. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்டது. இந்த 15 இலட்சத்தை பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுடன் ஒப்பிட்டால், பெறுபேறுகள் எப்படியிருக்கும். இதில் மொட்டு கட்சிக்கு வெற்றி கிடைத்தது. அந்த பெறுபேறுகளின்படி மொட்டு கட்சிக்கு எத்தனை பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கும். 102 ஆசனங்களே அவர்களுக்கு கிடைக்கும். 102 ஆசனங்களை கொண்டு எவருக்கும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது. நாம் 15 இலட்சம் வாக்குகளை பெற்றோம். கட்சி புனரமைப்பு பணிகளை மேற்கொண்டோம். 

கடந்த மூன்று நான்கு மாதங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீள் கட்டமைக்கும் பணிகளை சிறப்பாக முன்னெடுத்தோம். எமது செயற்குழு தெரிவுகளின்போது 2000, 3000 பேர்கள் கலந்துகொண்டனர். பெப்ரவரி 10ஆம் திகதி 15 இலட்சமாக இருந்த எண்ணிக்கையை நாம் 20 இலட்சமாக அதிகரித்திருக்கிறோம். மொட்டுக்கும் சரி ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சரி நாங்கள் இன்றி அரசாங்கத்தை அமைக்க முடியாதென்பதை நான் தெளிவாக கூறுகின்றேன். எனவே எதிர்வரும் காலங்களில் கட்சியை வளமாகக் கட்டியெழுப்ப வேண்டும். ஒழுங்கமைக்கும் பணிகளை பலப்படுத்த வேண்டும். 

கட்சி என்றால் அதற்கு கொள்கை இருக்க வேண்டும். நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கின்றோமென்று குற்றம் சுமத்தப்படுகின்றது. நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்திருப்பது மஹிந்த ராஜபக்ஷவுக்கு செய்ய முடியாமல் போன விடயங்களை செய்வதற்காகவே. அவற்றை நாம் செய்திருக்கின்றோம். சர்வதேசத்தை வெற்றி பெறவும், சர்வதேச எதிர்ப்புகளை நீக்கவும். சர்வதேசத்தை நண்பர்களாக மாற்றுவதற்கும் அதனை நாம் செய்திருக்கின்றோம். எனவேதான் உலகின் அனைத்து நாடுகளினதும் உதவி எமக்கு பெருமளவில் கிடைக்கின்றது.

மொரகஹகந்த திட்டத்திற்கு பெருந்தொகை நிதி கிடைக்கப்பெற்றது. பல நாடுகளின் உதவி கிடைத்தது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் குளங்களை புனரமைக்கும் திட்டத்திற்கு பெருமளவு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மொரகஹகந்த திட்டத்தின்கீழ் 2400 குளங்களை புனரமைப்பதற்கு முழுமையான நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் மொட்டும் அரசியல் ரீதியாக மிகை மதிப்பீட்டை கொண்டிருப்பார்களேயானால் அதுதான் அவர்கள் தவறு விடும் இடமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். எனவே எம்மைப் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். இன்று சிலர் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுகின்றார்கள். அரசாங்கத்தில் உள்ள ஒரு சிரேஷ்ட அமைச்சர் விரைவில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமென கூறியுள்ளதாக நான் அறிகிறேன். 

ஜனாதிபதி தேர்தலை பற்றி பேசுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதானால் அதுபற்றி நான் தான் முடிவெடுக்க வேண்டும். வேறு எவருக்கும் முடியாது. உரிய காலத்திற்கு ஒரு நாளேனும் முன்பாக தேர்தலை நடத்தப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த முக்கியமான விடயம், அமையப்போகும் அரசாங்கத்தின் முக்கியமான பதவி எது என்பதாகும். ஜனாதிபதி பதவியா? பிரதமர் பதவியா? அமைச்சர்களுக்கும் இங்கு இருக்கின்ற கற்றவர்களுக்கும் தெரியும் 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

அந்த வகையில் ஜனாதிபதியின் பல அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அடுத்து வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ஒருவரின் அதிகாரங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அடுத்த தேர்தலுக்கு பின்னர் புதிதாக தெரிவாகும் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு மட்டுமே இருக்கும். அதுபோக தற்போது இருக்கின்ற அதிகாரங்கள் இருக்காது. அடுத்த தேர்தலுக்கு பின்னர் முக்கியமான பதவியாக இருக்கப் போவது பிரதமர் பதவியாகும். 

எனவே அரசியல் ரீதியாக இந்த நாட்டு மக்களின் கலந்துரையாடலுக்குள்ளாக வேண்டியது, அடுத்த ஜனாதிபதி யார் என்பது பற்றியல்ல, அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியதேயாகும். இந்த நாட்டுக்கு சிறந்ததோர் பிரதமரை தெரிவு செய்வது பற்றியதாகும். நாட்டை நேசிக்கின்ற, தேசியத்தை மதிக்கின்ற, எமது கலாசாரங்களையும் பெறுமானங்களையும் மதிக்கின்ற, எமது வரலாற்றுடன் எமது பொறுப்புக்கள் குறித்த தெளிவை கொண்டுள்ள நேர்மையான ஊழல், மோசடிகள் இல்லாத பிரதமர் ஒருவரே நாட்டுக்கு தேவையாகும். 

எனவே ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசி தேவையற்ற அரசியல் பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம். அரசியல் கட்சிகளும் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும். அடுத்த தேர்தலுக்கு பின்னர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல சிறந்த பிரதமர் ஒருவரை யார் தெரிவு செய்வது? இதுதான் முக்கியமானதாகும். 

2015 ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை நீக்குவதாக நான் உறுதிமொழியை வழங்கினேன். அதனை நான் நிறைவேற்றியுள்ளேன். உலகில் எந்தவொரு தலைவரும் அதிகாரத்திற்கு வந்து தாமாகவே தனது அதிகாரங்களை நீக்கியது கிடையாது. 

அதனை நான் செய்திருக்கின்றேன். அந்த ஜனநாயகத்தை நான் நாட்டுக்கும் உலகிற்கும் எடுத்துக் காட்டியிருக்கின்றேன். என்னைப்பற்றி எத்தகைய விமர்சனங்களை முன் வைத்தாலும் சமூக ஊடகங்களின் மூலம் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும், அரசியல் ரீதியாக எதிர்த் தரப்பினர் எந்த விடயங்களை கூறினாலும், இன்று அவ்வாறு பேசுகின்றவர்கள் யாருமே செய்யாத விடயங்களை நான் செய்திருக்கின்றேன். மன்னர் ஆட்சி முறையை ஒத்த வகையில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களை நான் நீக்கியிருக்கின்றேன். அரசியல் ரீதியாக இந்த நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தி சாதாரண மனிதனும் உயர்ந்த இடத்தை அடைந்துகொள்ளக்கூடிய அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கின்றேன். 

இதுதான் பண்டாரநாயக்கவின் கொள்கையாகும். இதுதான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையாகும். இந்த நாட்டுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைதான் பொருத்தமானதாகும். இந்த நாட்டின் முற்போக்கு அரசியல் இயக்கத்திற்கு தேவையாக இருப்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், பண்டாரநாயக்கவின் தத்துவங்களின் அடிப்படையிலான அரசியல் இயக்கமாகும். இன்று பெரும்பாலானவர்களுக்கு கொள்கை கிடையாது. தனிநபரை சுற்றி உருவாகும் அரசியல் இயக்கம் குறுகிய காலமே நிலைத்திருக்கும். அவை நிச்சயமற்றது. தற்காலிகமானது. நாட்டுக்கு தேவை அரசியல் கொள்கையாகும். 

இந்த நாட்டின் வரலாறு, கலாசாரம், பண்பாடு எமது பொறுப்புக்கள் இவை அனைத்திற்கும் பெறுமானமளிக்கின்ற வரலாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளதென்பதை நான் மிகவும் தெளிவாக கூறுகின்றேன். 

எனவே தேசத்தின் எதிர்காலத்திற்காக உலக நாடுகளுடன் போட்டித்தன்மையுடன் முன்னோக்கி செல்லவதற்கும் பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும் உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி, எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தலில் சிறந்த பிரதமர் ஒருவரை தெரிவு செய்யுங்கள் எனக் கேட்டு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நான் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் உயிரை பணயம் வைத்தேனும் நிறைவேற்றுவேன் எனக் கூறி விடைபெறுகின்றேன்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019