தமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா?


மு .திருநாவுக்கரசு

தலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன் முன்னெடுக்கின்றான். காலத்தை முன்னெடுப்பவனை வரலாறு முன்னுயர்த்தி அவனை அம்மக்களின் குறியீடாக்குகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிடவும் மிகப் பெரிய அரசியல் பேரவலத்திற்கு தமிழ் மக்கள் ஆளாகியுள்ள காலமிது. தோலிருக்க சுளை பிடுங்கும் நுட்பமான அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்படும் காலமிது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இப்படியொரு பாரிய அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாகியதில்லை. இது ஒரு நூற்றாண்டு காலம் கண்டிராத மொத்த அவலம்.முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலந்தான். அது ஓர் இனப்படுகொலை வாயிலாக இராணுவம் தமிழரை நசுக்கிய அவலம். ஆயினும் மறுவளமாக அந்த முள்ளிவாய்க்கால் அவலம் தமிழ் மக்களுக்கு உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் ஓர்அரசியல் வெளியைதிறந்துவிடத் தவறவில்லை.

அதாவது சிங்கள அரசையும், ஆட்சியாளர்களையும், இராணுவத்தினரையும் உலக அரங்கில் இனப்படுகொலையாளர்கள் என்னும் முத்திரையைக் குத்தியது. சிங்கள-பௌத்த அரசின் முகத்திரையை உலக அரங்கில் கிழித்தெறிந்தது. தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற வகையிலான சர்வதேச அபிப்பிராயத்திற்கு களம் அமைத்தது.

இழப்பு, வேதனை, அழுகுரல் இவற்றின் மத்தியில் தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒரு களம் சர்வதேச அரங்கில் விரிந்ததுடன் சிங்கள-பௌத்தஅரசிற்கு எதிரான இனப்படுகொலை சார்ந்த களங்கம் சர்வதேச அரங்கில் விரிந்தது. இந்நிலையிற்தான், இழப்புக்களுக்கும், அழிவுகளுக்கும்மத்தியிலும்ஒரு சாதகமான உள்நாட்டு, வெளிநாட்டு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை ஒப்படைத்தனர்.

தேயிலையினாலும், கிரிக்கெட் விளையாட்டினாலும் உலகில் அறியப்பட்டிருந்த இலங்கை, உலகத் தலைவர்கள், அறிஞர்கள் மத்தியில் இலங்கையின் கேந்திர அமைவிடம், வர்த்தக போக்குவரத்து என்பவற்றால் அறியப்பட்டிருந்த இலங்கை, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முதல் இனப்படுகொலையாலும், இரத்த வெள்ளத்தாலும் அறியப்பட்ட தீவாகியது.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாயிலாக இலங்கையை Killing Field  எனத் தலைப்பிட்டு சேனல்-4 மூன்று ஆவணப்படங்களை சர்வதேச சமூகத்தின் முன் வைத்தது. Killing Field என்ற வார்த்தையின் நீட்சியாக இலங்கை இராணுவம் கொலை இயந்திரம் என்ற அர்த்தத்திற்கு உள்ளாகியது. இத்தகைய பின்னணியிற்தான் சர்வதேச ரீதியில் மிகவும் சாதகமான நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைமைத்துவத்திற்குவநத்து.

ஆனால் நடந்ததேறியவையோ மிகவும் பாதகமான நடைமுறையாகும். தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பை தமது ஆட்சியின் பங்காளர்களாக ஆக்கி அவர்களைக் கவசமாகக் கொண்டு மேற்படி தமது உள்நாட்டு, சர்வதேச நெருக்கடிகளை கடக்கும் பாதையை சிங்கள ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக தேடிக் கொணட்னர். இனப்படுகொலை வாயிலாக தாம் பெற்ற இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கருவியாக ஆக்கிக் கொள்வதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.“சமாதானத்திற்கான யுத்தம்” என்று யுத்தத்திற்குப் பெயரிட்டனர். ஆனால் யுத்தம் முடிந்து பத்தாண்டுகளாயும் சமாதானத்தைக் காணவில்லை.

இந்நிலையில்  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் கூடாரத்திற்குள் இருந்து சில ஒட்டகங்கள் வெளியே கிளம்பின. அவ்வாறு வெளியே கிளம்பிய அந்த ஒட்டகங்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு புதிய கூடாரத்தை அமைத்துள்ளன. அந்த கூடாரத்தின் தலைமை ஒட்டகமாக காட்சியளிக்கும் திரு.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர் ஒரு கேட்ட கேள்வியும் அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அளித்த பதிலும் இங்கு சிந்தனைக்குரியது. தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம்பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்த பயப்பட்டு நிற்கின்றது. தமக்கு பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அணுசரனையுடன்தான் தமது இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் எங்கள் பலம் என்று கூறினார். தொடர்ந்து. தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து ஸ்தாபிக்கப்படப் போகும் ஒரு கூட்டமைப்பு பற்றியே எங்கும் பேசப்படுகின்றது. இவ்வாறான ஒரு கூட்டமைப்பின் ஊடாகத்தான் நீங்கள் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று நாங்கள் கூறினால் அது சரியாக இருக்குமா? என்ற ஊடகவியலாளரின் இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில்:

அதற்கு இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று முதலமைச்சர் கூறியதும் ஊடகவியலாளர் மேலும் ஒரு கேள்வியை எழுப்பினர்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு தீவிரப் போக்குடைய ஒரு தமிழ் அரசியல்வாதி என்று கருதப்படுகின்றார். ஆகவே நீங்கள் அவர் போன்றவர்களால் பிழையாக வழிநடத்தப்படுகிறீர்கள் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன? அதற்கு அவரது பதில் தீவிரம் என்ற சொல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. தான் ஒரு மிதவாதி அல்லது மத்திமவாதி என்று தன்னைக் கருதுபவர் தனது கொள்கைகளை எதிர்ப்பவரை தீவிரவாதி என்பார். ஆனால் மேற்படி மிதவாதி அல்லது மத்திமவாதி எங்கிருந்து அந்தக் கருத்தை வழிப்படுத்துகிறார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அவரின் கருத்துக்கள் உண்மையில் மிதமானவையா அல்லது தவறானவையா என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.வெள்ளையர் காலத்தில் கெப்பிட்டியபொல திஸாவே என்பவர் குற்றவாளியாக வெள்ளையரால் கணிக்கப்பட்டார். இன்று  இந்த  நாட்டவர்கள் அவரை புகழுக்குரிய வீரனாக கணிக்கின்றார்கள். அது எப்படி?

ஓவ்வொருவரும் தத்தமது சார்பு நிலையில் இருந்து கொண்டு தீவிரவாதி, பயங்கரவாதி” என்ற முத்திரைகளைக் குத்துகிறார்கள். முதலமைச்சர் மிகச் சரியாகவே இதற்கு பதில் கூறியுள்ளார். கனடாவில் பிரஞ்சுக்காரரின் கியூ பெக் மாநிலத்தில்ஆங்கிலேயர்கள் தமது குடியேற்றங்களை வலுக்கட்டாயமாக ஸ்தாபித்த போது பிரஞ்சுக்காரனான ரியல் அதனைத் தடுத்து அம்மாநிலத்தில் பிரஞ்சு சமூகத்தின் பெரும்பான்மையைப் பாதுகாக்க போராடினார். ஆனால் அவரை ஆங்கில ஆட்சியாளர்கள் கைது செய்து தூக்கிலிட்டனர். இதுபற்றி கனடா வாழ் ஆங்கிலேயர்களிடம் ஒருகணிப்பீட்டை மேற்கொண்ட போது அவர்கள் பதில் பின்வருமாறு அமைந்தது.

ரியல் என்னும் கொலைகாரன் சட்டத்தின்படி தூக்கிலிடப்பட்டான் இதே கேள்வியை பிரஞ்சு இனத்தவர்களிடம் கேட்ட போது ரியல் என்னும் இனப்பாதுகாவலன் சட்டத்தால் கொலை செய்யப்பட்டார்.  இங்கு இரு இனத்தவர்களின் கண்களிலும் ஒரே மாவீரன் இருவிதமாக பார்க்கப்படுகிறான். உண்மையில் ஒடுக்கப்படும் மக்களின் பார்வையில் வரும் தீர்ப்பே சரியானது.

இதனைவிடவும் ஒருபடி மேலான இன்னொரு உதாரணத்தையும் நோக்கலாம்.தென்னாப்பிரிக்க விடுதலைத் தலைவன் நெல்சன் மண்டெலாவை தென்னாப்பிரிக்க நிறவெறி வெள்ளையின அரசும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் அவருக்கு “பயங்கரவாதி” என்று முதலில் முத்திரைக் குத்தின. தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசு அவருக்கு பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தி தூக்குக் கயிற்றை நீட்டியது. பின்பு தூக்குக் கயிறு ஆயள் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டு 27 ஆண்டுகள் அவர் சிறைக்குள் சித்தரவதையானார். அவ்வாறு  பயங்கரவாதி என்று முத்திரை குத்தியவர்கள் பின்பு அவரை ஒரு விடுதலை வீரன் என்று ஏற்று அமெரிக்கா, பிரித்தானிய போன்ற நாடுகளில் அரச மரியாதையுடன் கூடிய செங்கம்பள வரவேற்பிற்கு உள்ளானார்.அதாவது பயங்கரவாதி என்று யார் அவருக்கு முத்திரைக் குத்தினார்களோ அவர்களே பின்பு மண்டெலாவிற்கு செங்கம்பளம் விரித்தார்கள். இந்த வரலாற்று உண்மைகளை ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் இருந்தும், அழிக்கப்படும் இனங்களின் பக்கம் இருந்துமே பார்க்க வேண்டும்.

இப்போது கேள்வியை அரசை நோக்கி மறுபக்கமாகத்தான் கேட்க வேண்டும். 1995ஆம் ஆண்டு சமாதானத்திற்கான யுத்தம் என்ற பெயருடன் திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க யுத்தத்தை முன்னெடுத்தார். அடுத்துவந்த ஜனாதிபதியான அவரின் கட்சிக்காரர் „சமாதானத்திற்கான யுத்தத்தை 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தார். அதன் பின்பு நீங்கள் கூறும் வார்த்தையில் பயங்கரவாதம் உங்களால்முடிவிற்குகொண்டுவரப்பட்டு10 ஆண்டுகள்  ஆன பின்பும் எங்கே தீர்வு? எங்கே சமாதானம்? இப்போது யார் பயங்கரவாதிகள். சுமாதானத்திற்கான தீர்வை முன்வைக்காது தமிழ் மக்களுக்கு அநீதி இழைப்பவர்களே பயங்கரவாதிகள் என்ற மகுடத்திற்கு உரியவர்கள்  நல்லாட்சிஅரசாங்கம்தான்கூறும் நல்லிணக்கத்தை எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறது. அது இனப்படுகொலையால் சிங்கள அரசிற்கு சர்வதேச

அரங்கில் ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்பதில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. போர்க்குற்ற விசாரணையை இல்லாது செய்வதில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. அரசிற்கு ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளை தீர்ப்பதில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. உள்நாட்டில் பெற்ற இனப்படுகொலை வாயிலான இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றுவதில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. இவற்றின் பின்னணியில் சிங்கள மயமாக்கத்தை விரிவாக்குதில் இருந்து ஆரம்பித்திருக்கிறது.அதற்குக் கிடைத்த அரசியல் அங்கீகாரமாக „இலங்கை ஒரு பௌத்த நாடு என்று இந்தியப் பிரதமருக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அளித்த ஒப்புதலின் வாயிலாகக் காணலாம்.

இத்தகைய பின்னணியில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மறுபக்கமாக விரிந்த சர்வதேச ரீதியான சாதகமான பின்னணியை தமிழ்த் தலைமைகள் இனப்படுகொலை ஆட்சிக்கான கவசமாக மாற்றி தமிழ் மக்களின் தலையில் மேலும் மீளமுடியாத சுமையை ஏற்படுத்தியுள்ள பின்னணியில் அவர்களின் கூடாரத்தில் இருந்து நிமிர்ந்த ஒட்டகங்களும், வெள்ளாடுகளும் வெளியே வந்துள்ளன.அவர்கள் முன் மாகாண முதலமைச்சர்களுக்கு உள்ளேயே அதிக வாக்குக்களைப் பெற்ற முதலமைச்சரான திரு.சி.வி.விக்னேஸ்வரன் அக்கூடாரத்திற்கு தலைமைதாங்குவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளார்.

இவர்கள் ஐக்கியத்துடன் உறுதியான, வினைத்திறன் மிக்க தலைமையை வழங்குவார்களேயானால் மக்கள் இவர்களை பின்தொடர்ந்து செல்வார்கள் என்பதுமட்டுமல்ல அவர்கள் இவர்களுக்கான அனைத்துவகை பலமாகவும் விளங்குவார்கள். எப்போதும் தமிழ் மக்கள் கொள்கையின் பக்கம் நிற்பவர்கள். ஆனால் அந்தக்கொள்கையைமுன்னெடுப்பவர்கள்அதற்கானநம்பிக்கையை மக்கள் முன் நிரூபிக்க வேண்டும். வரலாறு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையை நோக்கி பந்தை வீசியுள்ளது. அதனை லாவகமாக எடுத்து விளையாடி இலக்கை எட்ட வேண்டியது இதில் சம்பந்தப்படும் அனைத்து தலைவர்களினதும் பாரிய பொறுப்பாகும்.

வரலாறு வெற்றிகளால் எழுதப்படுகிறது. தற்போது தமிழ் மக்களை ஏமாற்றும் அரசையும், அவர்களது கூட்டாளிகளையும் எதிர்கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில் ஒரு பலமான ஐக்கியப்பட்ட அமைப்பை உருவாக்குவதும், அதற்கான அறிஞர் குழாத்தையும், கலை-பண்பாட்டுக் குழாத்தையும், ஊடகவியலாளர்களையும், சமய-சமூகத் தலைவர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் அரசியல் விடிவிற்கான பேரியக்கத்தை உருவாக்க வேண்டும்.

முதலாம்பட்ச எதிரிக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராக இரண்டாம், மூன்றாம்பட்ச எதிரிகளுடன்கூட கூட்டுச்சேர வேண்டும். இது காலபோக கூட்டு எனப்படும். காலபோகக் கூட்டால் பிரதான எதிரியைத் தோற்கடிக்கத் தவறினால் எதிரி தனது வெற்றியினால் மேலும் வெற்றியை ஈட்டுவார்  தமிழ் மக்கள் தரப்போ தோல்வியினால் மேலும் தோல்விகளையே ஈட்ட நேரும்.

இருப்பதில் இருந்தே எதனையும் உருவாக்கலாம். வரலாறு எம்முன் எத்தகைய நிலைமைகளையும், வாயப்புக்களையும் வழங்கியுள்ளதோ அவற்றை வைத்துக் கொண்டுதான் அடுத்ததைப் படைக்கலாம். அரசியை வைத்து சோறும் சமைக்கலாம். அதை மாவாக்கி பலகாரமும் சமைக்கலாம். ஆனால் மாவை வைத்து சோறுசமைக்க முடியாது. ஆதலால் எம்முன் இருக்கும் வாயப்புக்களை கொண்டு அடுத்ததை செய்ய வேண்டும். இதில் முழுநீள உத்தமர்களைத் தேடி கனவுகாண முடியாது.

முள்ளிவாய்க்கால் துயரம் தந்த வாய்ப்பான சர்வதேச சூழலை கடந்த 10 ஆண்டுகளில் பெரிதும் பயனற்றதாக்கியது மட்டுமன்றி எதிரிக்கு சேவகம் செய்வதற்கான வாயப்பையும் வழங்கிவிட்டோம். இதில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு புதிய பாதையைத் தேட வேண்டும். அதற்கான பொறுப்பை தமிழ்மக்கள் பேரவையின் தலைவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதிலிருந்தே அடுத்தக்கட்டத்திற்கான தமிழினத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019