போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்று ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
‘தற்போதைய நிலையில் இந்த விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என நாம் காணவில்லை ‘ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோடிட்டுக்காண்பித்திருப்பதாக ஒக்ஸ்போர்ட் யூனியனின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பாக 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அதன்போது போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச வகிபாகத்திற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது. அதனை நிராகரிப்பதாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை அமைந்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் யூனியனில் பிரதமர் ரணில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது வெளியே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இலங்கையில் தமிழருக்கு எதிரான அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தினதும் மக்களதும் அழுத்தங்களை குறைப்பதற்காகவே இலங்கை இவ்வாறான மேடைகளைப் பயன்படுத்துவதாக தெரிவித்து ஒக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு பிரதமருக்கு விடுத்திருந்த அழைப்பை தமிழ் இளைஞர் சங்கம் விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்த்ககது.