வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி?


வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது.

“எங்கட நிலமெல்லாம் எங்களிடமிருந்து பறிக்கப்படுகின்றன; எங்கட இடமெல்லாம் சிங்கள மயமாகின்றன; சொந்த நாட்டிலேயே பல்லாண்டு காலம், நடைப்பிணங்களாக வாழும் நாதியற்ற எங்களுடன், நாட்டாண்மை காட்டுகின்றார்களே; கந்தனே! இதை யாரிட்ட சொல்லி அழ; தமிழ்க் கடவுளே! கண் திறக்க மாட்டாயா; எம்மைக் காக்க உனையன்றி யாருமில்லை” இந்த வேண்டுதல், இங்கு வந்திருந்த பெரியவர் ஒருவரின் உள்ளக்குமுறலாக இருந்தது. அவருக்கு, சுமார் 80 வயது மதிக்க முடியும்.

இந்தக் குமுறல், வெறுமனே ஓர் இந்துவின் ஆதங்கம் மட்டுமல்ல. ‘ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’ என்பது போல, வடக்கு, கிழக்கு வாழ் அனைத்துத் தமிழர்களின் நிலையும் இவ்வாறாகவே உள்ளது.

நிலைமைகள் இவ்வாறாக இருக்கையில், வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, பௌத்த கோட்பாடுகள், பௌத்த தர்மங்களின் ஊடாக, எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க, வடக்கு ஆளுநர் தலைமையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் பொருட்டு, மார்ச் 22ஆம் திகதி, வவுனியாவில் உள்ள விகாரை ஒன்றில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக, பௌத்த மாநாடு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைக்குச் சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1994) சந்திரிகா அம்மையார், தமிழ் மக்களது வாக்குப் பலத்தையும் சேர்த்து, 62சதவீதமான வாக்குகளைச் சுவீகரித்துச் சாதனை படைத்தார். சமாதானப் புறாவாக வலம் வந்தார்; தீர்வுப் பெட்டகத்தையும் முன் வைத்தார்.

வெளிவிவகார அமைச்சராகத் தமிழரான லக்ஷ்மன் கதிர்காமரை நியமித்தார். “முக்கிய அமைச்சராக, தமிழர் ஒருவரை நியமித்து உள்ளோம். சிங்கள, தமிழ் பாகுபாடு எம்மிடம் இல்லை” என அன்றைய நாள்களில் கருத்துத் தெரிவித்து வந்தார். ஆனால் நடைபெற்றதோ, தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்படும்போதுகூட, அதிஉச்ச அரசாங்க விசுவாசியாகக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். பேரினவாதத்தின் குறிக்கோளைக் கட்டிக்காத்து, தனது இறுதி மூச்சு வரை உழைத்தார்.

இதுபோலவே, “தமிழ் மக்களது கோரிக்கைகளை ஏற்று, கடந்த கால அரசாங்கங்கள் மறுத்த வடக்கு மாகாணத்துக்கான தமிழ் ஆளுநரை நாம் நியமித்து உள்ளோம். வடக்கு மாகாணத்துக்கு, முதல் முறையாக தமிழ் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்” என இப்போது ‘கொழும்பு’, முரசு கொட்டுகின்றது.

தமிழ் மக்களின் நாளாந்த நடைமுறை வாழ்வில், பல விதமான சன்னதங்களுடனும் தங்கள் உடலில் பல சன்னங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வவுனியாவில் பௌத்த மாநாட்டை ஆளுநர் நடத்துவது தொடர்பில், தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. மறுபுறம், இந்து மாநாடோ, கிறிஸ்தவ மாநாடோ நடத்த வேண்டும் என, அவர்கள் கோரப் போவதுமில்லை.

ஆனால், “வடக்கு மாகாணத்தில் உள்ள பௌத்தம் சார்ந்த உயர்பீடத்தில் உள்ளவர்கள், இனவாதம், மதவாதம் தூண்டுபவர்கள் அல்லர்; அந்த விடயத்தில் அவர்கள் தெளிவாக உள்ளார்கள்” என்று ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தமை, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், நெஞ்சில் கூரிய ஈட்டி பாய்ந்தது போலவே உள்ளது.

பௌத்த மாநாடு கூட்டவுள்ள வடக்கு ஆளுநர், வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலான வவுனியா மாவட்டம், விரைவாகத் தமிழ் மக்களின் கையைவிட்டுப் போய் விடுமோ எனப் பெரும் கவலையிலும் கலக்கத்திலும் உறைந்திருக்கின்றனர் என்பதை அறிவாரோ?

வவுனியா மாவட்டத்தில், காலத்துக்குக் காலம் பௌத்த பேரினவாத அரசாங்கங்களால் பெரும்பான்மை மக்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டு உள்ளார்கள். காலப்போக்கில் அவர்களுக்கென மாவட்டத்தில் நிலத் தொடர்பற்ற முறையில், தனியான பிரதேச செயலகம் (வவுனியா தெற்கு) உருவாக்கப்பட்டு, செயற்பட்டு வருகின்றது. மேலும், தனியான பிரதேச சபை (வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை) எனவும் இயங்கி வருகின்றன.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டவுடன், வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, ‘கொக்கச்சான்குளம்’ என்ற தமிழ் மக்களின் பூர்வீக கிராமம், ‘போகஸ்வௌ’ எனச் சிங்கள நாமம் சூடப்பட்டு, தெற்கிலிருந்து ஆயிரக்கணக்கில், பெரும்பான்மை மக்கள் குடியேற்றப்பட்டும் உள்ளார்கள்.

அவர்களுக்கு சகலவிதமான வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ன. வவுனியா நகரிலிருந்து, போகஸ்வௌக்கு தனியார் போக்குவரத்துச் சேவைகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, ஊற்றுக்குளத்துக்கும் கொக்கச்சான்குளத்துக்கும் இடைப்பட்ட கச்சல் சமனங்குளம், பேரினவாதத்தின் கழுகுப் பார்வைக்குள் அண்மையில் சிக்கிக் கொண்டுள்ளது.

வவுனியா வடக்கில், தமிழ் மக்களது வரலாற்றுக் கிராமமான கச்சல் சமனங்குளம் (சபுமல்கஸ் கந்தையாக பெயர் மாற்றப்பட்டுள்ளது) பகுதியில் அமைந்துள்ள விவசாயக் குளத்துக்கு அருகாமையில், இம்மாத முற்பகுதியில், நான்கு அடி உயரமான இரண்டு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. இதைப் பாதுகாத்துப் பராமரிக்க, இளம் பிக்குவுடன் உதவியாளர்களும் குடில் அமைத்துத் தங்கியுள்ளனர்.

இன்று குடில் அமைத்துத் தங்குபவர்கள், நாளை, நிச்சயமாக குடியேற்றத்தை அமைத்துவிடுவார்கள் எனத் தமிழ் மக்கள் பயத்துடனும் பதற்றத்துடனும் வாழ்கின்றனர்.

தமிழ் மக்களது மீள் குடியேற்றம், கடந்த பத்து ஆண்டுகளில், மஹிந்த, மைத்திரி அரசாங்கங்களால், நன்கு திட்டமிடப்பட்டு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதனாலேயே இன்னமும் பல தமிழ்க் கிராமங்களுக்கு மக்கள் மீளக்குடியேறவில்லை.

ஆனால், யுத்தத்துக்கு முன்னர் பெரும்பான்மையினக் குடிமகன் ஒருவர் கூட வசிக்காத நாவற்குழியில், பெரும்பான்மை மக்கள், சகல வசதிகளுடனும் குடியேற்றப்பட்டனர். நாவற்குழி புகையிரத நிலையத்துக்கு முன்பாக பௌத்த விகாரை கட்டப்பட்டு உள்ளது.

அண்மையில், யாழ். வந்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க, யாழ்ப்பாணம், நாவற்குழியில் மீளக்குடியேறி உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் அற்று வாழ்வதாகவும் அவற்றை விரைவில் சீர்செய்து தருவதாகவும் கூறி விட்டுச் சென்று உள்ளார். இவ்வாறாக, தமிழர் பகுதிகளில் யுத்தத்துக்கு முன்னர், பெரும்பான்மையின மக்கள் வசிக்காத இடங்களில், அவர்களது வசிப்பிடங்களும் கௌதம புத்தர் வீற்றிருக்காத இடங்களில், புத்தவிகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன; இனியும் அமைக்கப்படும்.

தமிழர் பகுதிகளில், அத்துமீறி, ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் கட்டப்பட்ட பௌத்த விகாரைகளும் நிறுவப்பட்ட புத்தர் சிலைகளும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு, சாந்தி, சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, இனங்களுக்கிடையில் விரிசலையும் மனங்களுக்கிடையில் விரக்தியையுமே ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், “வடக்கு மாகாணத்தில் உள்ள பௌத்தம் சார்ந்த உயர்பீடத்தில் உள்ளவர்கள் இனவாதம், மதவாதம் தூண்டுபவர்கள் அல்லர். அந்த விடயத்தில், அவர்கள் தெளிவாக உள்ளார்கள்” என்று ஆளுநர் சுரேன் ராகவனால் எப்படிக் கூற முடியும்? வடக்கு மாகாணத்தில் உள்ள பௌத்தம் சார்ந்த உயர்பீடத்தில் உள்ளவர்கள், இனவாதம், மதவாதம் தூண்டுபவர்கள் அல்லர் என்றாலும், அப்படி எடுத்துக் கொண்டாலும், அங்கு இனவாதம், மதவாதம் தூண்டுபவர்களை, அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதை அனுமதிக்கக் கூடாது அல்லவா?

போருக்குப் பின்னர், வடக்கு, கிழக்கில் நடக்கும் பௌத்த மயமாக்கல், பெரும்பான்மையின மயமாக்கலைத் தடுத்து நிறுத்தும் திராணியற்ற அமைப்பாகவா, அங்குள்ள பௌத்த உயர்பீடங்கள் இருக்கின்றன? அங்கு அமைக்கப்படும் பௌத்த விகாரைகளும் பெரும்பான்மை மக்கள் குடியேற்றங்களும் பௌத்த கோட்பாடுகள், பௌத்த தர்மங்களின் அடிப்படையிலா மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?

அரச வாழ்வைத் துறந்து, உலகுக்கு நல்வழிகாட்டுவதற்குத் துறவியான, அமைதியின் சின்னம், ஆக்கிரமிப்பின் சின்னமாக உருவகிக்கப்படுவதே தமிழ்மக்களின் கவலையாக உள்ளது. தமிழ் மக்களின் 70 ஆண்டு காலப் பட்டறிவில், கௌதம புத்தரின் உயர்ந்த போதனைகள், பேரினவாதிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு ஆளுநராகத் தமிழர் இருக்கலாம்; சிங்களவர் இருக்கலாம். ஆனால், அவர் அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதி அல்லவா? அவர் அரசாங்கத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டியது தானே, அவரது தொழில் தர்மம்.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019