நான் செல்வநாயகம் பேசுகிறேன்!

அன்புத் தம்பிகளே! ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட்டு விலகி சமஷ்டியை வலியுறுத்தி அந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நான் இலங்கை தமிழரசுக் கட்சியை துவக்கினேன். இன்று எனது பெயரை வைத்துக்கொண்டு நான் உருவாக்கிய கட்சியைப் பயன்படுத்தி, எனது கொள்கையை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதுடன், அதன் அரசாங்கத்தை என்ன விலைகொடுத்தும் காக்கத் துணிகிறீர்களே அப்படி நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன்?

எனது நோயின் காரணமாக யைக் காரணமாக என்னால் பேச முடியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி அன்று அமிர்தலிங்கம் நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாகச் சொல்லி என்னை அன்புடன் தந்தை செல்வா என்று வாஞ்சையுடன் அழைத்த எனது மக்களைத் தவறாக வழிநடத்தினார். அதன் தொடர்ச்சியே வட்டுக்கோட்டை தீர்மானமும் பின்னர் இன்றுவரை நீண்டுசெல்லும் அவலங்களும்.

இவர்கள் தமது அதிகாரப்பசிக்காகத் தமிழ் மக்களை நடுத்தெருவில் விடப்போகிறார்கள் என்று 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய உடனேயே எனக்குத் தெரிந்துவிட்டது. அன்று கட்சிக்குள்ளேயே தமிழீழத்திற்கான எல்லைகளை எப்படி நிர்ணயம் செய்வது? வேலியா போடமுடியும் அல்லது சுவரெழுப்புவதா என்றெல்லாம் கேள்விகள் எழும்பியிருந்தன. இத்தனையையும் கண்ணுற்றபின்னும் நான் உயிருடன் இருக்க வேண்டுமா என்று கடவுளை வேண்டியபடியே இருந்தேன். ஒருவழியாக 1977ஆம் ஆண்டு எனது பிரார்த்தனை பலித்துவிட்டது. நான் உங்களின் அரக்கப்பிடியிலிருந்து விடுபட்டுவிட்டேன். எனக்கு கிடைத்த விடுதலையினால்தான் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினேன்.

ஆனாலும் என்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து சாத்வீக முயற்சிகளும் சிங்கள பௌத்த மேலாதிக்க தீவிரவாத ஆளும் சக்திகளினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்டதன் விளைவாக எப்படியாவது ஈழத்தை அடைந்துவிட வேண்டும் என்னும் எண்ணம் எமது இளம்பிள்ளைகளிடம் கருக்கொண்டது. சரி பிழைக்கு அப்பால் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவே தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்ற முடிவிற்கு இளைஞர்கள் வருவதற்கு எம்மீது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்களே காரணம் என்பதை இன்று ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அறிவிலிகளே அறிவீர்களா?

தங்கள் கண்முன்னே தமது தலைவர்கள் தாக்கப்படுவதை சகிக்க முடியாமலும் சாத்வீகப் போராட்டங்கள்கூட மூர்க்கமான ஆயுதப்படைகளினால் அடக்கப்பட்டதன் விளைவாக இனி சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் இருக்க முடியாது என்ற கள யதார்த்தமுமே ஆயுதப் போராட்டத்தின் மூலம் இறைமையுள்ள தனி அரசை ஸ்தாபிப்பதற்கான முயற்சி என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

பண்டாரநாயகவுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட உடனேயே சிங்கள தலைமைகள் எம்மை கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகின்றனர் என்பதை நான் உணர்ந்திருந்தேனே. நான் மரணிக்கும்வரை என்னுடன் பயணித்த உங்களால் எப்படி இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகச் செயற்பட முடிகிறது? 

தம்பி அமிர்தலிங்கம்கூட மலேசியா சிங்கப்பூர் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டி இப்படி ஒரு சில நாடுகள் மட்டுமே இரத்தம் சிந்தாமல் விடுதலை அடைந்துள்ளன. பெரும்பாலான நாடுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே விடுதலை அடைந்துள்ளன என்று கூறியதை மறந்துவிட்டீர்களா?

1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் என்று கூறினீர்களே இது உங்களது அயோக்கியத்தனம் இல்லையா?

தமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு பின்னர் மாவட்ட அமைச்சர் பதவிக்கும் மாவட்ட அபிவிருத்தி சபைக்குமான தேர்தல்களில் போட்டியிட்டீர்களே? இதுதான் உங்களது அரசியல் நேர்மையா?

தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு தவிர்ந்த ஏனைய எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடக்கூடாது என்று அன்றைய இளைஞர்கள் வற்புறுத்திய நேரத்தில் மேற்குறித்த தேர்தல்கள் ஈழத்திற்கான குட்டிப் பாராளுமன்றத் தேர்தல்கள் என்று மக்களை ஏமாற்றினீர்களே இதுதான் உங்களது விசுவாசமா?

இவ்வளவும் கடந்த பின்னர், நாம் தூண்டிவிட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இளைஞர்கள் எமது கோரிக்கையை சிரமேற்கொண்டு தனிநாட்டை அடைவதற்காக நடத்திய ஆயுதப் போராட்டமும் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் மௌனிக்கச் செய்யப்பட்ட நிலையில், எமது உரிமைக்கான கோரிக்கையை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்ததே. 

எனது கட்சியின் பெயரையும் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தையும் அரசையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்துதானே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டீர்கள். 

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவற்றில் போட்டியிடும்போதுகூட எமக்கான அபிவிருத்தியை நாமே மேற்கொள்ள இணைந்த வடக்கு-கிழக்கில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த ஆணை வழங்குங்கள் என்றுதானே வாக்கு கேட்டீர்கள். அபிவிருத்திக்கான நிதியை எமது புலம்பெயர்ந்த உறவுகளிடமிருந்தும், நட்பு நாடுகளிலிருந்தும் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கினீர்களே. இவற்றில் எதையாவது நிறைவேற்றினீர்களா?

யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து வரவு-செலவுத் திட்டங்களிலும் பாதுகாப்புத் தரப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வரவு-செலவு திட்டத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வருவது ஏன்? வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு மிகவும் குறைந்தளவில் இருந்தபோதிலும் அவற்றிற்கான நிதியைப் போராடிப் பெறாதது ஏன்?

இறுதி யுத்தம் என்ற போர்வையில் எம்மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு சர்வதேச விசாரணைப் பொறிமுறையினூடாக நீதிவிசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட முடியுமா?

இலங்கையை சர்வதேசத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி, 2015ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கையையும் இணை அனுசரணை வழங்கவைத்து திட்டமிட்டு காலநீட்டிப்பைப் பெற்றுக்கொடுத்துவிட்டு நாடாளுமன்றத்தில் மிரட்டுவதுபோல் நடிப்பதுதான் நீங்கள் என்மீது வைத்திருக்கும் விசுவாசமா?

மக்களால் நிராகரிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக சட்டமூலத்திற்கு எதிராக காலையில் நாடாளுமன்றத்தில் விவாதித்துவிட்டு மாலையில் அந்த சட்டமூலத்திற்காக வாக்களித்ததின் மர்மத்தை விளக்குவீர்களா?

புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டமூலம் பல குழப்பங்களை ஏற்பத்தும் என்று தெரிந்தும் அவசர அவசரமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தியதன் பின்னணியை விளக்குவீர்களா? தமிழர் தாயகப் பிரதேசங்களில் தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளின் பிரதிநிதித்துத்தை அதிகரிப்பதுதானே?

இன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை இழுத்தடிப்பதற்கும் இந்த சட்டம் தானே உங்களுக்குக் கைகொடுக்கிறது. அதாவது மாகாணசபைத் தேர்தல்களில் 50வீதம் வட்டார அடிப்படையிலும் எஞ்சிய 50வீதம் விகிதாசார அடிப்படையிலும் என்ற குழப்பகரமான சட்டம்தானே இன்று உங்களை தேர்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறது.

ஆயுதப் போராட்ட அமைப்பினரின் மீது விரல்நீட்டுவதற்கு உங்களுக்கு ஏதாவது அருகதை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் செய்திருக்கும் செயற்பாடுகள் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின்போது நடத்திய தவறுகளைவிடவும் பாரதூரமானவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உங்களிடம் கொள்கைப் பற்றும் இல்லை. மிதவாத அரசியல் தலைமையிடம் இருக்க வேண்டிய இராஜதந்திர அணுகுமுறையும் இல்லை. ஆனால் கதிரைகளை சூடேற்றி உங்களது வருமானங்களைப் பெருக்கிக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு என்பெயர்தானா உங்களுக்குக் கிடைத்தது?

அன்று அமிர்தலிங்கமும் நவரட்னமும் முடிவுகளை மேற்கொண்டு ஏனையோரை தலையாட்டி பொம்மைகளாக வைத்திருந்தார்கள். காங்கிரசிலிருந்து வந்திருந்த சிவசிதம்பரம் கூட்டணியின் தலைவர் என்ற பதவியுடன் வாயடைத்து அமிர்தலிங்கத்தின் குரலுக்குப் பின்பாட்டுப் பாடுபவராக மாறினார். இன்று அந்த வேலையை கூட்டமைப்பு என்ற பெயரில் ரெலோவும் புளொட்டும் செய்கின்றனர். அன்று அமிர்தலிங்கம் செய்ததையே இன்று நீங்கள் செய்கின்றீர்கள். அமிரின் இடத்தில் சம்பந்தன் இருக்கிறார். நீலன் திருச்செல்வத்தின் இடத்தில் சுமந்திரன் இருக்கிறார். இரண்டு பேரும் அன்றைப் போலவே இன்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு வைத்துக்கொண்டு சுபபோகங்களை அனுபவித்துக்கொண்டு என் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளீர்கள்.

பின்னால் வரப்போகிற விடயங்களை அறிந்துதானே இனி நான் உருவாக்கிய தமிழரசுக் கட்சியின் பெயரையோ கொடியையோ இலச்சினையையோ பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி என்னுடன் கொள்கையளவில் முரண்பட்ட ஜிஜியையும் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி உங்களிடம் கொடுத்துவிட்டு நான் எனது கண்களை மூடினேன். எனது பூத உடலின்மீதுகூட எனது கட்சி கொடி போர்த்தக்கூடாது என்று தெரிவித்திருந்தேனே அப்படி இருந்தும் எனது பெயரையும் எனது கட்சியையும் என்ன அடிப்படையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் தொல்லை தாங்க முடியாமல்தானே இறைவன் எனக்கு நோயைக்கொடுத்து தன்னுடன் அழைத்துக்கொண்டான். அதனால்தானே இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் கூறினேன். ஆனால் நீங்கள் என்னை இன்று கல்லறையில்கூட நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்கிறீர்களே.

இனி தமிழ் மக்களை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை வருவதற்குள் மக்களே இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். எனக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பார் என்ற அடிப்படையில் திரு சம்பந்தனை அவரது இளமைப்பருவத்தில் நானே அரசியலுக்கு அழைத்துவந்தேன். இன்று அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்சிறேன். 

இனியும் இவர்களை நம்புவதில் பயனில்லை. எனவே, இவர்களை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த உறுதியானதும் கொள்கைப் பிடிப்புடையதும் நிதானமாகச் செயற்படுவதும் மக்களுக்கு விசுவாசமாகவும் செயற்படக்கூடிய வலுவானதும் சட்டவலு உள்ளதுமான ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து, அத்தகைய முன்னணியை உருவாக்கி எமது உரிமைக்குரலை சர்வதேச அளவில் எடுத்துரைத்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடும்படி என்னை தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ள எம் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019