karainagar-sivan-temple-2-720x450ஈழத்துச் சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன்கோயிலில் திருவாதிரை திருவெம்பாவை உற்சவம் இன்று (திங்கட்கிழமை) அடியார்கள் புடைசூழ வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.

இன்று முதல் தொடர்ந்து பத்து தினங்களுக்கு நடைபெறவுள்ள இவ் உற்சவத்தில், தினமும் காலை 7 மணிக்கு சிவன் மற்றும் ஐயனார் ஆகிய மூல மூர்த்திகளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, தொடர்ந்து நடேசர் சந்நிதானத்தில் திருவெம்பாவை ஓதலும் பின்னர் மாணிக்கவாசகர் உள்வீதி உலா வருதலும் இடம்பெறும். அதனையடுத்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி திருவீதி உலாவரும் நிகழ்வு இடம்பெறும்.

திருவாதிரை திருவெம்பாவை உற்சவத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி பஞ்சரத பவனி இடம்பெற்று, அதற்கு மறுநாள் புதன்கிழமை அதிகாலை 2 மணிமுதல் நடேசப் பெருமானுக்கு ஆருத்திரா அபிஷேகமும் அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற்று உற்சவம் இனிதே நிறைவடையவுள்ளதாக ஆலய பரிபாலகர் தெரிவித்துள்ளார்.

இவ் உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பத்தர்களின் வசதி கருதி ஆலய சூழலில் சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் உற்சவ காலங்களில் யாழ். நகரிலிருந்து ஆலயம் வரையிலான பேரூந்து சேவைகள் நேரடியாக இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய சூழலில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபையிலும் ஈழத்துச் சிதம்பர சைவ அறப்பணி நிலையத்திலும் வழமைபோலவே அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்

உற்சவத்தின் இறுதி ஜந்து நாட்களும், ஆலய வசந்த மண்டபத்தில் மணிவாசகர் சபையினரால் திருவாசகப் பெருவிழா நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.