1440441060-7691வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் தமிழக விவசாயிகளுக்கு அ.தி.மு.க. அரசு நல்ல பரிகாரம் காண வேண்டும் என்று சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் போரூர் அருகே உள்ள கோவூர் சவுந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரர் கோவிலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் துரைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் பேரன், பேத்திகளுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

துர்கா ஸ்டாலின் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் இணைந்து பொங்கல் பானைகளில் தண்ணீர் ஊற்றி அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை இட்டு, அடுப்பு பற்ற வைத்து பொங்கலிட்டனர்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவிக்கு ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பரதநாட்டியம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவையும் நடந்தது.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க.வினர் மட்டும் அல்லாமல் தமிழ் உணர்வுள்ள எல்லோரும் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் நடத்திடவேண்டும் என்றுதான் கருணாநிதி ஆணையிட்டார்.

அதுமட்டுமல்ல தமிழர் திருநாளாம் பொங்கல் தினம் தான் தமிழ் புத்தாண்டாக இருக்கவேண்டும் என ஆணையிட்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை மாற்றியுள்ளனர் என்பது வேதனைக்குரியது.

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி உதயமாகும்போது கருணாநிதி எந்த உணர்வோடு இந்த பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தாரோ அதே உணர்வு நிலை வரத்தான் போகிறது. அதை நாம் காணத்தான் போகிறோம், கொண்டாடப்போகிறோம்.

நேற்று முன்தினம் மத்திய அரசு பொங்கல் பண்டிகை விருப்ப விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டது.

அதை எதிர்த்து முதன் முதலில் தி.மு.க. சார்பில் நாம் அறிக்கை வெளியிட்டோம். அதைதொடர்ந்து பல கட்சிகள், பல அமைப்பினர் அதனை கண்டித்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

பொங்கல் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் உள்பட அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. அதற்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா அரசுகள் விடுமுறையும் அறிவித்துள்ளன.

இந்தநிலையில் தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு இந்த நிலையா? என நாம் சுட்டிக்காட்டினோம். உடனடியாக போராட்டம் நடத்தும் எனவும் அறிவித்தோம்.

தி.மு.க.வின் எதிர்ப்பை பார்த்த பிறகு ஒட்டுமொத்த தமிழர்களும் கிளர்ந்து நின்றதை பார்த்த பிறகு பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது.

தமிழன் என்றபோது தமிழ் மொழிக்கு கலாசாரத்துக்கு, பண்பாட்டுக்கு எங்கேனும் ஒரு துளியேனும் ஆபத்து வரும் என்று சொன்னால் அதை பார்த்துக்கொண்டு தமிழன் காத்துக்கொண்டிருக்கமாட்டான்.

தற்போது விவசாயிகள் வறட்சியால் பெருமளவில் தற்கொலை செய்திருப்பதை நம்மால் நினைத்து பார்க்காமல் இருக்கமுடியவில்லை. நமது வருத்தங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டிருந்தாலும் மாநிலத்தில் உள்ள ஆட்சி இதை தடுத்திட வேண்டும், நிறுத்தியாக வேண்டும் நல்ல பரிகாரத்தை காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஒன்றிய செயலாளர் ஆ.மனோகரன், குன்றத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, கோவூர் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுதாகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.