உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் ‘கிலானி’ யின் பதவி பறிமுதல்…
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பிரதமர் யூசுப் ரசா கிலானி மறுத்து விட்டார். எனவே, கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கிலானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், நீதிமன்றம் கலையும் வரை சுமார் 30 வினாடிகள் அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு ஆளாகி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட கிலானியின் எம்.பி. பதவியை சபாநாயகர் பறிக்கவேண்டும் என பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் தீர்ப்பளிக்கப் பட்டது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் பெஞ்மிதா மிர்ஷா, ‘பிரதமர் கிலானியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான கிலானி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும், எனவே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. மேலும் கிலானி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிலானியின் பதவி பறிக்கப்பட்டதையடுத்து, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிபர் சர்தாரி முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.






















What do you think?